Wednesday, May 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

“சிதம்பரம்னா சும்மா கூப்பிட்டு கலாய்க்கிற ஹெச்.ராஜானு நினைச்சியா…சிதம்பரம்டா…!” – ட்விட்டர் வறுவல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாஜக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள், அமைப்புகள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மக்களிடமும் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. அதேநேரம் கருப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.

பாஜக அரசின் திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, கடந்த 8ம் தேதி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள கருப்பு தினம் கடைப்பிடித்தது. அதற்கு போட்டியாக களமிறங்கிய பாஜக, அன்றைய தினத்தை கருப்புப்பண ஒழிப்பு தினமாகக் கொண்டாடியது.

முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை சட்டப்பூர்வ கொள்ளை என்றும் திட்டமிட்ட மோசடி என்றும் கடுமையாக வர்ணித்தார். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும், பாஜக அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 11 தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக ப.சிதம்பரத்தின் நேர்காணல் நிகழ்ச்சி தந்தி டிவியில் ஒளிப்பரப்பானது. அந்த டிவியின் தலைமை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே அவரை பேட்டி கண்டார்.

கிட்டத்தட்ட பாஜகவின் பிரதிநிதியாகவே தன்னை பாவித்துக்கொண்டு அவர் பேசியதாகவே பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர்.

கருப்புப்பணம், பணமதிப்பிழப்பு, மக்கள் பட்ட இன்னல்கள் என எல்லாவற்றுக்கும் ப.சிதம்பரம் நிதானமாக பதில் அளித்தார். பேட்டி முடியும்வரை எந்த ஓர் இடத்திலும் பதற்றமோ, சொதப்பலோ தென்படவில்லை.

அதேநேரம், சர்வதேச நிதியம் பணமதிப்பிழப்பை பாராட்டியிருப்பதாக தவறான தகவலைச் சொன்னதோடு, அதற்கு ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக ரங்கராஜ் பாண்டே கூறினார்.

அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என்று சட்டென ப.சிதம்பரம் கேட்டும், அந்த ஆதாரத்தை கடைசி வரை ரங்கராஜ் பாண்டே காட்டவில்லை. கேள்விக்கு என்ன பதில் என்ற நிகழ்ச்சி முன்பே பதிவு செய்யப்பட்டு, எடிட் செய்யப்பட்ட பிறகே ஒளிபரப்பப்படுகிறது.

இதற்குமுன் சில நிகழ்ச்சிகளின்போது நெறியாளர் ஏதேனும் ஆதாரங்கள் வைத்திருந்தால் அதையும் அந்த நிகழ்ச்சியினிடையே வெளியிடுவது நடைமுறையில் இருந்தது. அதாவது, பேட்டி எடுக்கும்போது ஆதாரங்கள் கைவசம் இல்லை என்றாலும், நிகழ்ச்சி தொகுக்கப்பட்டு ஒளிபரப்பப்படும்போது அந்த ஆதாரங்களை வெளியிடுவார்கள்.

ஆனால், ப.சிதம்பரத்துடனான பேட்டியின்போது, சர்வதேச நிதியம் சொன்னதாகக் கூறப்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் அந்த டிவி வெளியிடவில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் கருப்புப்பண ஒழிப்புக்காக ஏன் காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ரங்கராஜ் பாண்டே கேட்டார். இந்தக் கேள்வி அவருக்கே பூமராங்போல திரும்பும் என அவர் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம், ”நீங்கள் குறிப்பிட்ட 20 ஆண்டுகால ஆட்சியில் சரிபாதி ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தது,” என்று தடாலடியாக குறிப்பிட்டபோது அந்த அதிர்ச்சியில் இருந்து பேட்டி முடியும் வரை அவரால் மீளவே முடியவில்லை என்பதையும் பார்வையாளர்கள் ட்விட்டர் தளத்தில் விமர்சித்துள்ளனர்.

அந்த பேட்டி முழுக்கவே பல இடங்களில் ரங்கராஜ் பாண்டே மூக்குடைபட்டதையும் பலர் கேலியாக விமர்சனம் செய்துள்ளனர்.

ட்விட்டர் தளத்தில், ”சிதம்பரம்னா சும்மா கூப்பிட்டு கலாய்க்கிற ஹெ.ராஜானு நினைச்சியா…சிதம்பரம்டா…வேற ரிப்போர்ட்டர அனுப்பி இருக்கலாம்,” என்று கிண்டலாக ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர், ”பேசாமல் தெர்மாகோல் விஞ்ஞானிய பேட்டி எடுக்கறதோட நிறுத்திக்கோ,” என்றும், ”நாம அடிச்சு பெரிய ஆள் ஆனது எல்லாமே செல்லூர், செங்கோட்டையன், எஸ்ஏசி மாதிரியான ஆளுங்ககிட்டதான். அதே வித்தைய ப.சிதம்பரம்கிட்டயும் காட்டலாம் நினைச்ச. அவரு உன்னைய வெச்சி செஞ்சிட்டாரு,” என்றும் கேலியாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

கல்லாத ஒருவன் தன்னைத்தானே அறிவாளி என மதிப்பாக கருதிக்கொள்வானாம். அவன், கற்றவர்களுடன் கூடிப்பேசும்போது அவனது அறியாமை வெளிப்பட்டு விடும் என்பார் திருவள்ளுவர். அதேநிலைதான் ரங்கராஜ் பாண்டேவுக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்.