தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 9 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன் போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
தமிழக அரசு குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) காலியிடங்களை நிரப்புவதற்கு தனித்தனியாக போட்டித்தேர்வு நடத்தி வந்தது. இனி, அந்தப்பணியிடங்கள் அனைத்திற்கும் ‘ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-4’ (சிசிஎஸ்இ குரூப்-4) என்ற பெயரில் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று அண்மையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, தமிழக அரசில் குரூப்-4 பிரிவில் காலியாக உள்ள 9351 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை இன்று (நவம்பர் 14, 2017) அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்டபடி முதன்முதலாக குரூப்-4 பணியிடங்களுக்கும், விஏஓ பணியிடங்களுக்கும் ஒரே தேர்வாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
காலியிடங்கள் எத்தனை?
கிராம நிர்வாக அலுவலர் &494, இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) – 4096, பிணையத்துடன் கூடியது – 205, வரித்தண்டலர் – 48, நில அளவர் – 74, வரைவாளர் – 156, தட்டச்சர் – 3463, சுருக்கெழுத்து தட்டச்சர் – 815 என மொத்தம் 9351 காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது.
ஊதிய விகிதம்:
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு மட்டும் ஊதிய விகிதம் ரூ.5200 – ரூ.20200, தர ஊதியம் ரூ.2800 ஆகும். மற்ற பதவிகளுக்கு அடிப்படை ஊதிய விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. தர ஊதியம் மட்டும் ரூ.2400 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கல்வித்தகுதி – வயது வரம்பு:
அனைத்துப் பணியிடங்களுக்கும் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1.7.2017ம் தேதிப்படி குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருத்தல் வேண்டும். இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத ஏனைய பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு சிறப்புச் சலுகையும் உண்டு.
கட்டணச் சலுகை:
எஸ்ஸி, எஸ்ஸி (ஏ), எஸ்டி ஆகிய பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் எந்த பிரிவைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு எப்போது?:
போட்டித்தேர்வு, 11.2.2018ம் தேதி நடக்கிறது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடக்கும். போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையத்தில் ரூ.150 கட்டணம் செலுத்தி நிரந்தரப் பதிவு (ஓடிஆர்) என்ற விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்தப் பதிவு 5 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். ஏற்கனவே பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குள்ளாக இருப்பின், அவர்கள் மீண்டும் நிரந்தர பதிவை புதுப்பிக்கத் தேவையில்லை.
இதன்பின், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணையதளம் வழியாக செலுத்தும்போது தேர்வுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
கடைசி தேதி:
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 13.12.2017. தேர்வுக்கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலமும் செலுத்தலாம். அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இண்டியா, இந்தியன் வங்கி, தபால் அலுவலகங்கள் வாயிலாகவும் செலுத்தலாம். தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி 15.12.2017.
யாரிடம் கேட்பது?:
காலிப்பணியிடங்கள், தேர்வு, விண்ணப்பத்தின் நிலை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தை 044-25332833, 25332855 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தையும் (www.tnpsc.gov.in) பார்க்கலாம்.