Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மேட்டூரில் களைகட்டிய ஆடிப்பெருக்கு விழா; புதுமண தம்பதிகள் புது தாலி, புத்தாடை அணிந்து வழிபாடு!

 

பத்தாண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பி வழிந்ததால், இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தனர்.

 

பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு மரியாதை அளிக்கும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவை காவிரிக்கரையோர மக்கள் காலங்காலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இத்தகைய வழிபாட்டு கலாச்சாரம் வழக்கத்தில் இல்லை. ஆனால் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக காவிரி கரையோரம் உள்ள ஈரோடு, திருச்சி, சேலம், நாமக்கல் மற்றும் ஒகேனக்கல் காவிரி ஆறு பாயக்கூடிய தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஆடி 18 அன்று, பக்தர்கள் நீர்நிலைகளில் கூடி வழிபடுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

 

ஆடிப்பெருக்கு நீராடலின் பின்னணியில் இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது, மஹாபாரத இதிகாசத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் தொடர்ந்து 18 நாள்கள் போர் நடந்ததாகவும், போரில் பலரை கொல்ல நேர்ந்ததால் அந்தப் பாவத்தை நீரில் கழுவி தொலைக்கும் விதமாக ஆடிப்பெருக்கு நாளன்று நீர்நிலைகளில் நீராடல் செய்யும் வழக்கம் நடைமுறைக்கு வந்ததாகவும் ஒரு சாரார் சொல்கின்றனர்.

 

இந்நிலையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுதான் ஆடி 18 பண்டிகைக்கு முன்னதாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏற்கனவே டெல்டா பாசனத்திற்காக ஜூலை 19ம் தேதி, அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

 

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் புனித நீராடலுக்கு வருவார்கள் என்பதால், அணையில் இருந்து இன்று காலை 18267 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாதுகாப்பு கருதி காவிரி பாலம் படித்துறை, பாம்பு புற்று படித்துறை, மேற்கு கால்வாய், மட்டம் படித்துறை ஆகிய நான்கு இடங்களில் மட்டும் நீராடலுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இன்று (ஆகஸ்ட் 3, 2018) தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சேலம், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதனால் இன்று அதிகாலை முதலே மேட்டூர் அணைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. குறிப்பாக புதுமணத்தம்பதிகளும் வருகையும் அதிகளவில் இருந்தது.

 

முதன்முதலாக ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடும் புதுமணத்தம்பதிகள், திருமணத்தின்போது தங்களுக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள், முகூர்த்தக்கால் ஆகியவற்றை கொண்டு வந்து நீர்நிலைகளில் விட்டனர். ஏற்கனவே கட்டிய தாலியை கழற்றிவிட்டு புதிய மஞ்சள் கயிறை மனைவிமார்களுக்கு அணிவித்தனர். முன்னதாக அவர்கள் காவிரித்தாயை மனமுருக வழிபட்டனர். நீராடல் முடிந்து புதுமணத்தம்பதிகள் புதிய வேட்டி, சட்டை, சேலைகளை அணிந்து கொண்டு அங்குள்ள கோயில்களில் வழிபட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் சப்டிவிஷன் போலீசார் மிதவை கப்பல் படகு மூலமும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 

 

களையிழந்த ஒகேனக்கல்:

 

ஆடிப்பெருக்கில் மேட்டூர் அணையில் பக்தர்கள் கொண்டாட்டம் கரைபுரள, ஒகேனக்கல் காவிரியோ பக்தர்கள் வருகை குறைவு காரணமாக களை இழந்து காணப்பட்டது.

 

கர்நாடகா அணைகளில் இருந்து நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருந்ததால் ஒகேனக்கல் சினி ஃபால்ஸ், மெயின் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் கடந்த 25 நாள்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆடிப்பெருக்கு விழா நாளன்று தடை விலக்கப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், அருவிகளில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால் இன்றும் தடை விலக்கப்படவில்லை.

 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீராடலாம் என ஆசையில் குடும்பத்துடன் வந்த பக்தர்கள், புதுமணத்தம்பதிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவன்று, ஒகேனக்கல் காவிரியில் பக்தர்கள் கூட்டம் களையிழந்து காணப்பட்டது.