Friday, July 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

செவிலியர், மருந்தாளுநர் படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்பு

செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ்2 தேர்ச்சி பெற்ற பிறகு அடுத்து என்ன படிக்கலாம் என்ற யோசனையில் இருக்கும் மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் மட்டுமின்றி, துணை மருத்துவப் படிப்புகளும் எளிதில் வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக உள்ளது. துணை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் உள்ளிட்ட எந்த ஒரு தகுதித் தேர்வும் தேவை இல்லை.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அவற்றைச் சார்ந்த கல்லூரிகளில் 2026 – 2027ம் கல்வி ஆண்டில், துணை மருத்துவப் படிப்புகளில் சேர பிளஸ்2 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. டிகிரி, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அனைத்து வகை துணை மற்றும் அலைடு ஹெல்த்கேர் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மதிப்பெண் தகுதி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

டிகிரி பாடப்பிரிவுகளில் சேர 21.6.2026 முதல் 3.7.2026 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. டிப்ளமோ, சான்றிதழ் பாடப்பிரிவுகளில் சேர 27.6.2026 முதல் 15.7.2026 வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் உதவி மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

பிஎஸ்சி நர்சிங் பட்டப்படிப்பில் சேர பிளஸ்2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளில் ஓ.சி. பிரிவினர் 45 சதவீதமும், பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 40 சதவீதமும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது 4 ஆண்டு கால படிப்பாகும்.

டிப்ளமோ நர்சிங் படிப்பில் சேர இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் பொதுப்பிரிவினர் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியல் வகுப்பினர் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தமிழை முதல் மொழியாக எடுத்துப் படித்திருத்தல் அவசியம். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள்.

பி.பார்ம் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ்2வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளைப் படித்திருக்க வேண்டும். பிளஸ்2 தேர்ச்சி போதுமானது. பயிற்சிக் காலம் 4 ஆண்டுகள்.

டி.பார்ம் படிப்பு படிக்க விரும்புவோர் பிளஸ்2வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். பிளஸ்2 தேர்ச்சி போதும். பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள்.

‘பார்ம் டி’ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருத்தல் கட்டாயம். இது ஓராண்டு இன்டர்ன்ஷிப் உள்பட 6 ஆண்டு கால படிப்பாகும். பி.பார்ம் முடித்தவர்களுக்கு 3 ஆண்டு காலம் பயிற்சி அளிக்கப்படும்.

இவை தவிர பிஸியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, கார்டியாக் டெக்னாலஜி, பல்மனாலஜி டெக்னாலஜி, ஆடியோலஜி, அனஸ்தீஸியா, டயாலிஸில் டெக்னாலஜி உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கும், இதர டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் படிப்பிற்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 29ம் தேதி வரை அனைத்து வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

முக்கிய விவரங்கள்:

பட்டப்படிப்புகளில் சேர: 21.6.2026 முதல் 3.7.2026 மாலை 5 மணி வரை.

பட்டய மற்றும் சான்றிதழ்
படிப்புகளில் சேர: 27.6.2026 முதல் 15.7.2026 மாலை 5 மணி வரை.

கட்டணம்: அரசுக் கல்வி நிலையங்களில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டிப்ளமோ நர்சிங் படிப்பிற்கு கட்டணம் ஏதுமில்லை.

உதவி மையம்: ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்ட அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் தாரேஸ் அஹமது ஜூன் 29ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply