Saturday, March 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

திண்ணை: அமைச்சருக்கு எதிராக படை திரட்டும் கோஷ்டிகள்

”இந்த வருஷம் வெயில் புரட்டி எடுக்கும்னு பேசிக்கிறாங்களே அப்படியா?,” என்று ஏற்கனவே வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்திருந்த பேனாக்காரரைப் பார்த்துக் கேட்டபடியே பக்கத்தில் வந்து அமர்ந்தார் பொய்யாமொழியார்.

”வானிலை அறிக்கையை விடுங்க… தமிழ்நாட்டு தேர்தல் களம் வரலாறு காணாத வகையில இந்தமுறை ரொம்பவே கனல் தெறிக்கப் போகுது பாருங்க,” என்று நேரடியாகவே சங்கதிக்கு வந்தார் பேனாக்காரர்.

இதற்கிடையே அங்கு வந்து சேர்ந்த நக்கல் நல்லசாமி, ”தமிழ்நாடு அரசியல் களம் இருக்கட்டும். மாங்கனி மாவட்ட கள நிலவரத்தைச் சொல்லுங்க,” என்றார்.

”சமீபத்துல மாங்கனி மாவட்டத்தில் கடாரம் கொண்டான் அமைச்சரின் உள்ளடி வேலைகள் குறித்து ஒரு பத்திரிகையில் செய்தி வந்தது. சில நாள்களுக்கு முன்பு மாநகராட்சியில் நடந்த கூட்டத்துல எதிர்க்கட்சி கவுன்சிலர் அந்த பத்திரிகையை கையில் ஏந்தியபடி அமைச்சரின் ஆதரவு கவுன்சிலர்கள் குறித்து ஏதோ பேசத் தொடங்கினார். அப்போது அருகில் இருந்த விளம்பர பிரியரான கவுன்சிலர் ஒருத்தரு, அந்த பத்திரிகையை பிடுங்கி சுக்கு நூறாகக் கிழிச்சுப் போட்டார்,” என்ற பேனாக்காரரை இடைமறித்த நக்கல் நல்லசாமி, ”போன வருஷம் இதே மாநகராட்சி கூட்டத்துல எதிர்க்கட்சித் தலைவர் மேல மிக்சர் பாக்கெட்டை எடுத்து வீசினாரே அவர்தானே…?,” எனக்கேட்டார்.

”அட ஆமாங்க. அதே ‘மிக்சர் புகழ்’ கவுன்சிலர்தான். அதெல்லாம் தெரிஞ்ச மேட்டர்தானே. அடுத்த சங்கதிக்கு வாங்க,” என்றார் பொய்யாமொழியார்.

”கடாரம் கொண்டான் அமைச்சரால் ஓரங்கட்டப்பட்ட ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் சில பேரு, சமீபத்துல ஒரு ஹோட்டலில் திடீர்னு ஒண்ணுகூடி பேசியிருக்காங்க. பத்திரிகை செய்தி வெளியான சில நாள்களில் இந்த திடீர் சந்திப்பு நடந்ததால அமைச்சர் தரப்புலயும் லேசாக ‘ஜெர்க்’ ஆனதாகவும், ஓரங்கப்பட்ட கோஷ்டிகளின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்க ஆள் போட்டிருப்பதாகவும் சொல்றாங்க.

மறுபடியும் கடாரம் கொண்டான் அமைச்சர் தேர்தலில் போட்டியிட்டால், தங்களால் முடிந்தளவு எதிர்த்துக் களமாடுவோம்னு பேசிக்கிட்டதாக ஒரு தகவல் உலா வருது. தளபதி மேலயும், கட்சி மீதும் பற்று இருக்கு. அமைச்சரால் ஓரங்கட்டப்பட்ட பிறகும், எத்தனையோ வாய்ப்பு வந்தும் வேறு எந்தக் கட்சிக்கும் போகாமல் இருக்கும் எங்களை இதுவரை கட்சி மேலிடம் கண்டுகொள்ளவில்லை என்கிற வருத்தமும் அவர்களுக்கு இருக்குதாம்.

இது ஒருபுறம் இருக்க, பத்திரிகை செய்திக்குப் பின்னணியில் ஒரு பெரியவர் இருப்பதாக கற்பனைச் சித்திரத்தை வரைஞ்சு வெச்சிக்கிட்டு, அறிவுக்கோயியில் ஆர்எஸ்பியிடம் வழக்கம்போல் ஒரு பெட்டிஷனை போட்டுட்டு வந்திருக்காராம் கடாரம் கொண்டான்.

இதைக் கேள்விப்பட்ட பெரியவரோ, ”என்னை விட அவரிடம் விசுவாசமாக யாரும் இருந்ததில்ல. ஆனா எந்தவித ஆதாரமும் இல்லாமல் சந்தேகப்படுகிறாரேனு புலம்புறாராம்பா.

இதற்கிடையே, கடாரம் கொண்டானால் ஓரங்கப்பட்ட நிர்வாகிகள் எல்லோரும் விரைவில் அணி திரண்டு ரகசிய கூட்டம் போட்டு, அமைச்சரை கவிழ்ப்பதற்கான வேலைகள் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் சொல்றாங்கப்பா…,” எனச் சொல்லி முடித்தார் பேனாக்காரர்.

”ஓரணியில் ஓரங்கட்டப்பட்டவர்கள்னு” சொல்லுங்க.

நானும் ஒரு தகவலைச் சொல்றேன் என்றபடியே தொண்டையைச் செருமினார் பொய்யாமொழியார்.

”மாங்கனி மாவட்டத்துல, 2021 தேர்தலில் இலைக்கட்சி கூட்டணியில் ஜெயிச்ச ச.ம.உ. ஒருத்தரு, சேலம் சிட்டி, ஏற்காடு, நாமக்கல், கரூர்னு பல ஊர்களில் நிறைய நிலபுலன்களை வாங்கிப் போட்டிருக்காராம். சேலம் சிட்டியில் மையப்பகுதியியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியை கணிசமான கோடிகளில் வாங்கிப் போட்டிருப்பதாகவும், சாரதா கல்லூரிச் சாலையில் முக்கியமான ஒரு இடத்தையும் வளைச்சுப் போட்டிருப்பதாவும் சொல்லிக்கிறாங்க,” என்றார் பொய்யாமொழியார்.

”அது சரி… பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை. அருள் இல்லாதவர்க்கு எவ்வுலகமும் இல்லைனு வள்ளுவரே சொல்லி இருக்காரே என கிண்டலாகச் சொன்னார்,” நக்கல் நல்லசாமி.

”இலைக்கட்சி தரப்புல ஏதாவது விசேஷம் உண்டா?” கேட்டார் பொய்யாமொழியார்.

”இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கிறோமோ இல்லையோ கொங்கு மண்டலம் இலைக்கட்சியின் கோட்டைனு நிரூபிக்கணும்கிறதுல உறுதியாக இருக்கிறாராம் எடப்ஸ். குறிப்பாக, சேலம் மாவட்டத்துல 11 தொகுதிகளையும் ஜெயிச்சே ஆகணும்னு நிழலானவரிடம் கறாராகச் சொல்லி இருக்கிறார்.

ஆனாலும், காவிக்கட்சி தரப்புல இருந்து சங்ககிரி தொகுதியைக் கேட்டு இலைக்கட்சிக்கு நெருக்கடி கொடுத்துட்டு இருக்காங்க. சின்ன மாங்கா தரப்புக்கு இப்போதைக்கு சேலம் வடக்கு அல்லது சேலம் மேற்கு ஆகியவற்றில் ஒரு தொகுதி ஒகே பண்ணிட்டாங்கனும், சிலர் சேலம் வடக்கில் நிற்க சின்ன மாங்கா தரப்பு சம்மதம் சொல்லிட்டதாகவும் சொல்றாங்க. சின்ன மாங்கா தரப்போ, கூடுதலாக ஓமலூர் அல்லது வீரபாண்டி வேணும்னு கேட்டு அடம் பிடிக்கிறாங்க.

உடைஞ்ச மாங்காய்க்கு ஒரு தொகுதிதான் தர முடியும்னு எடப்ஸ் கறாராகச் சொல்லி இருக்கிறார். ஆனா இந்தக் காவிக்கட்சியின் நெருக்கடியைத்தான் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறாம் எடப்ஸ். சங்ககிரி தொகுதி இலைக்கட்சியின் கோட்டை. அதை எப்படி விட்டுத்தருவதுனு குழப்பமாம். ராசிபுரத்தைச் சேர்ந்த காவிக்கட்சியின் பிரமுகர் சங்ககிரியில் போட்டியிட விருப்பம் தெரிவிச்சு இருக்காராம். பார்க்கலாம்னு சொல்லி இருக்கிறார் எடப்ஸ்,” என்றார் பேனாக்காரர்.

திண்ணை காலியானது.

  • பேனாக்காரன்

Leave a Reply