மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும் என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இத்துடன் தமிழகத்தில் காலியாக இருந்த விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் அதேநாளில் இடைத்தேர்தல் நடந்தது.
வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 68321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 950 பேர் களம் இறங்கினர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வாக்குப்பதிவுக்கு அடுத்த நாள் (ஏப். 20) தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டு இருந்தது.
மறுநாள் வெளியிட்ட இறுதிக்கட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் சராசரியாக 69.94 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரத சாஹூ தெரிவித்து இருந்தார். இறுதி நிலவரத்தில் புள்ளிகள் அளவில் வேறுபாடுகள் வரலாமே தவிர இப்படி 2 சதவீதத்திற்கும் மேலாக புள்ளி விவரத்தில் குளறுபடி வந்தது குறித்து சலசலப்புகள் எழுந்தன.
அதாவது, வட சென்னை தொகுதியில் முதலில் அறிவித்ததை விட 9.13 சதவீதம், ஸ்ரீபெரும்புதூரில் 9.58 சதவீதம், திருநெல்வேலியில் 6.36 சதவீதம், கோவையில் 6.36 சதவீதம், கன்னியாகுமரியில் 7.06 சதவீதம் வாக்குகளை தேர்தல் ஆணையம் குறைவாக அறிவித்து உள்ளது. அதிலும் தென்சென்னையில் முதலில் அறிவிக்கப்பட்டதை விட 13.55 சதவீத வாக்குகள் குறைத்து அறிவிக்கப்பட்டது.
தேர்தல் பணியில் ஈடுபட்ட மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆகியோரால் ஏற்பட்ட மனிதப்பிழையால் இத்தகைய தவறுகள் ஏற்பட்டதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க, தேர்தல் ஆணையம் மூன்றாவது முறையாக வாக்குப்பதிவு விகிதம் குறித்த விவரங்களை திருத்தி வெளியிட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக ஏப். 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக வழக்கம்போல் தர்மபுரியில் 81.20 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.96 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
கடந்த 2019 மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில் நடப்பு தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு ஓரளவு அதிகரித்துள்ளது. அதன்படி, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கோவை ஆகிய 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது.
அதேநேரம், கடந்த தேர்தலை விட நடப்புத் தேர்தலில் 23 தொகுதிகளில் 3 முதல் 5 சதவீதம் வரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலம் முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் நடந்த வாக்குப்பதிவு விகிதம் குறித்த விவரம்:
1. திருவள்ளூர் – 68.59
2. வட சென்னை – 60.11
3. தென் சென்னை – 54.17
4. மத்திய சென்னை – 53.96
5. ஸ்ரீபெரும்புதூர் – 60.25
6. காஞ்சிபுரம் – 71.68
7. அரக்கோணம் – 74.19
8. வேலூர் – 73.53
9. கிருஷ்ணகிரி – 71.50
10. தர்மபுரி – 81.20
11. திருவண்ணாமலை – 74.24
12. ஆரணி – 75.76
13. விழுப்புரம் – 76.47
14. கள்ளக்குறிச்சி – 79.21
15. சேலம் – 78.16
16. நாமக்கல் – 78.21
17. ஈரோடு – 70.59
18. திருப்பூர் – 70.58
19. நீலகிரி – 70.95
20. கோவை – 64.89
21. பொள்ளாச்சி – 70.41
22. திண்டுக்கல் – 71.14
23. கரூர் – 78.70
24. திருச்சி – 67.51
25. பெரம்பலூர் – 77.43
26. கடலூர் – 72.57
27. சிதம்பரம் – 76.37
28. மயிலாடுதுறை – 70.09
29. நாகப்பட்டினம் – 71.94
30. தஞ்சாவூர் – 68.27
31. சிவகங்கை – 64.26
32. மதுரை – 62.04
33. தேனி – 69.84
34. விருதுநகர் – 70.22
35. ராமநாதபுரம் – 68.19
36. தூத்துக்குடி – 66.88
37. தென்காசி – 67.65
38. திருநெல்வேலி – 64.10
39. கன்னியாகுமரி – 65.44
சராசரி வாக்குப்பதிவு : 69.72 சதவீதம்
தமிழகத்தில் 30605792 ஆண் வாக்காளர்கள், 31719665 பெண் வாக்காளர்கள், 8467 இதரர் என மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 903 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் 21297903 ஆண் வாக்காளர்களும், 22158256 பெண் வாக்காளர்களும், 2716 இதர வாக்காளர்களும் என மொத்தம் 4 கோடியே 34 லட்சத்து 58 ஆயிரத்து 875 பேர் வாக்களித்துள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.