Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சிறுதானிய  தின்பண்டங்கள் :”நாவில் எச்சில் ஊறவைக்கும் தினை நெய் லட்டு, மாப்பிள்ளை சம்பா அதிரசம்”; அசத்தும் சேலம் இளைஞர்

ணிகமயமான இன்றைய உலகில் தொழில் தர்மம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில், பாரம்பரிய சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் 100 சதவீத வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கிறார், பிரபாகரன்.

சேலம் உடையாப்பட்டி செல்வநகரை சேர்ந்த பிரபாகரன், அடிப்படையில் எம்.இ., கணினி பொறியியல் பட்டதாரி. கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரிய விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இயற்கை விவசாயத்தின் நீட்சியாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனிவரகு, கம்பு, மூங்கில் அரிசி உள்ளிட்ட சிறுதானியங்களை விற்பனை செய்வதோடு, அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்களாகவும் தயாரித்து விற்பனை செய்கிறார்.

அரிசியில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் சிறுதானியங்களிலும் செய்ய முடியும். மட்டுமின்றி, குழந்தைகள், பெரியவர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களையும் சிறுதானியங்களில் தயாரிக்கலாம்.

தினை, சாமை, வரகு மாவினால் தயாரிக்கப்பட்ட முருக்கு, தட்டுவடை, தினை, சிவப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி மாவினால் தயாரிக்கப்பட்ட அதிரசம், தினை மற்றும் நவதானிய மாவினால் தயாரிக்கப்படும் லட்டு, கருப்பட்டி-தேங்காய் பர்பி, மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாரிக்கப்பட்ட காரப்பொரி என பார்த்தாலே எச்சில் ஊறும் தின்பண்டங்களை தயாரித்து, ‘நேச்சுரோ கிரீனர்ஸ்’ என்ற பிராண்டு பெயரில் விற்பனை செய்கிறார்.

“பொதுவாக, வாயுத்தொல்லை ஏற்படுத்தும் கடலை மாவு, வனஸ்பதி, வெள்ளை சர்க்கரை கலந்துதான் லட்டு தயாரிக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் ஒருபோதும் எங்களது தின்பண்டங்களில் இந்த பொருட்களை பயன்படுத்துவதே இல்லை. கடலை மாவுக்கு பதிலாக சிறுதானிய மாவு, வனஸ்பதிக்கு பதிலாக சுத்தமான நெய், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை என மக்களின் உடல்நலம் கருதி பார்த்துப்பார்த்து பயன்படுத்துகிறோம்.

கடைகளில் ஒரே வித எண்ணெய்யைத்தான் திரும்பத் திரும்ப பயன்படுத்துகின்றனர். அதனால்தான் நம் உடலில் கெட்ட கொழுப்பு தேங்குகிறது. நாங்கள் தின்பண்டங்களுக்கு மரச்செக்கில் ஆட்டப்பட்ட கடலை எண்ணெய்யை பயன்படுத்துகிறோம். எந்த எண்ணெய்யாக இருந்தாலும் இருமுறைக்கு மேல் பயன்படுத்துவதில்லை.

சிறுதானிய தின்பண்டங்கள் மட்டுமின்றி நமது பாரம்பரிய அரிசி ரகங்கள், இயற்கையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், மசாலா பொருட்களையும் விற்பனை செய்கிறோம்,” என்கிறார் பிரபாகரன்.

மைதா, கடலைமாவு, அஸ்கா, டால்டா, வனஸ்பதி என எதெதெல்லாம் உடலுக்கு தீங்கு என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளதோ அந்த வகையறாக்களை மிகக்கவனமுடன் தவிர்த்து விடுகின்றனர். முன்கூட்டிய ஆர்டர்கள்பேரில் சிறுதானிய இனிப்புகள், கார வகைகளை தயாரித்து வழங்குகிறார்.

ஆச்சர்யமூட்டும் இன்னொரு தகவல் என்னவெனில், கடலை, எள் உருண்டைகளைச் செய்ய இன்றைக்கும் பெண் ஊழியர்களைக் கொண்டு கல் உரலில் கடலையை இடித்தே தயாரிக்கும் முறையை பின்பற்றுகிறது நேச்சுரோ கிரீனர்ஸ்.

எல்லாவற்றுக்கும்மேல், ரூ.10 ஆயிரம் முதலீட்டில் சுயதொழில் தொடங்குவோருக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார் பிரபாகரன்.

தொடர்புக்கு: 9751427037.
prabakaran.jayaraman@naturogreeners.com.

(‘புதிய அகராதி’ இதழ் சந்தா பெற: 9840961947)