ஒவ்வோர் அரசாங்கமும் நிர்வாகத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் சட்டங்களை இயற்றுகின்றன. ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் தொடர்ந்து அவற்றை நாம் கடந்து சென்று கொண்டே இருக்கிறோம். அப்படி செய்வதால் ஏற்படும் விதி மீறல்களே குற்றங்கள்.
“கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றான்?” என்று அதிதீவிரமாக அறிந்து கொள்ள ஆசைப்படும் நாம், சட்டங்களின் அடிப்படையையாவது அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியமன்றோ!
மாவீரன் என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது, நெப்போலியன் தான். உலக நாடுகளை எல்லாம் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஏறக்குறைய பாதி ஐரோப்பாவையே வெற்றி கொண்டவன். ஆனாலும் 1815ம் ஆண்டு நடந்த வாட்டர்லூ போரில் ஆங்கிலேயர்களிடம் தோல்வியுற்று சிறைக் கைதியாக்கப்பட்டு, தன் வாழ்நாளின் இறுதி நாட்களை செயிண்ட் ஹெலினா தீவில் கழித்தார் என்பது வரலாறு.
ஆனால் நெப்போலியன் எழுதிய உயில் பற்றி தெரியுமா..?
அது, 1821ம் ஆண்டு. ஹெலினா தீவில் தன்னுடைய இறப்பிற்கு மூன்று வாரங்களுக்கு முன் நெப்போலியன் எழுதிய உயில், பிரான்சில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. நெப்போலியன் தான் எழுதிய உயிலில் தனக்கு உதவிய போர் தளபதிகள், போர்வீரர்களுக்கு சொத்தில் ஒரு பங்கைப் பிரித்துக் கொடுத்தார்.
பாத்திரங்கள், கரண்டிகள், பெட்டிகள், மேஜைகள், ஆடைகள், புத்தகங்கள், போர்வாள்கள், துப்பாக்கிகள் போன்று தன் வாழ்நாளில் பயன்படுத்திய எல்லா பொருட்களையும் தன் உயிலில் குறிப்பிட்டார். தன் வாழ்நாளின் கடைசி ஆறு ஆண்டுகளில், தன்னுடைய மனநிலை குறித்தும் எழுதியுள்ளார்.
நெப்போலியனின் ஆலோசகர் பியர் என்பவர் எழுதிய, இந்த உயிலின் நகல் கடந்த 2013ம் ஆண்டுதான் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் உயில் என்பது ஒருவர் எழுதிய வரலாற்று சாசனம் என்றும் புரிந்து கொள்ளலாம்.
இன்னொரு பிரபலத்தின் உயிலின் கதையைப் பற்றி பார்ப்போம்.
உலகம் முழுவதும் போற்றப்படும் விருதாக இன்றும் இருப்பது நோபல் பரிசு தான். யார் இந்த நோபல்?
டைனமைட் என்பது ஒருவகை வெடி மருந்து. அதை கண்டுபிடித்த விஞ்ஞானிதான் ஆல்ஃப்ரெட் நோபல். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், 1833ல் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல். தந்தை இம்மானுவல் நோபல். பொறியாளர். பாலங்கள் கட்டுவதில் வல்லவர். அவருக்கு உதவியாக, கட்டடங்களை இடிப்பதற்கு பயன்படுத்துவதற்காக அவர் கண்டுபிடித்ததுதான் இந்த டைனமைட்.
உலகமெங்கும் சுரங்க வேலைக்கும், கிணறு தோண்டவும் என பல வேலைகளுக்கு டைனமைட் உதவியது. மில்லியன்களை குவித்து பெரும் செல்வந்தரானார்.
சரி, இதற்கும் நோபல் பரிசுக்கும் என்ன சம்மந்தம்? என்றால் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
அவரது கண்டுபிடிப்புக்கு அபரிமிதமான வரவேற்பு இருந்தது. ஆனால் ஆக்க சக்தியாக நோபல் கண்டுபிடித்த டைனமைட் அழிவு சக்தியாக பயன்படுத்தப்பட்டது. எதிரிகளை கொல்வதற்கும் அழிப்பதற்கும் அதை உபயோகப்படுத்த தொடங்கினர். இதைக்கண்டு நோபல் அதிர்ச்சியானார்.
நோபலின் சகோதரர் லுட்விக், 1888ம் ஆண்டு காலமானார். ஆனால் நோபல்தான் இறந்து விட்டார் என தவறுதலாக நினைத்த பத்திரிகை ஒன்று, “மரண வியாபாரி மரணம்” என்று செய்தி வெளியிட்டது. தான் இறந்து போனதாக வந்த செய்தியை, தானே வாசித்தார் நோபல். தன் நிஜமான மரணத்திற்குப் பின்னும் இப்படித்தான் நம்மை உலகமே பழிக்கப்போகிறது என்று தீராசோகத்தில் ஆழ்ந்தார்.
தன் பெயருக்கு ஏற்பட இருக்கும் களங்கத்தை அறவே நீக்கவேண்டுமென்று உறுதி பூண்டார். அதற்காக அவர் செய்த வழியே நோபல் பரிசு. 1890ம் ஆண்டு தான் எழுதிய உயிலின்படி 9 மில்லியன் டாலர்களை கொண்டு ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மனிதகுல வளர்ச்சிக்குப் பாடுபடுவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டும் என்றும் உயில் எழுதினார். 1901ம் ஆண்டிலிருந்து தற்போது வரை அவரது நினைவு நாளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மரித்த பின்னும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாமனிதர்தான் நோபல். அதற்கு காரணமான உயிலையும் மறக்க இயலவில்லை என்பதே ஒரு பெருமைதானே!
உயில் எழுதுவதின் முக்கியத்துவத்தையும், அதன் வரலாற்று சிறப்பையும் அறிந்த நீங்கள், ஓர் உயிலை எழுதிவிட்டால் அது நிலையானது என்றும், மாற்றவே முடியாதது என்றும் நினைக்க வேண்டாம்.
உயில் எழுதிய நபர், தான் வாழும் காலத்தில் சுய விருப்பப்படி அதில் திருத்தம் செய்ய விரும்பினால், கட்டாயம் அவர் விருப்பபடி திருத்தங்கள் செய்யலாம். அதற்கான முழு உரிமை, உயில் எழுதுபவருக்கு உண்டு. தான் ஏற்கனவே எழுதிய உயிலை ரத்தும் செய்யலாம். மீண்டும் புது உயில் எழுதலாம். கடைசியாக எழுதிய உயிலே செல்லுபடியாகும் என்கிறது சட்டம்.
உயிலில் சில டெக்னிக்கலான வார்த்தைகளையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.
Testator – உயில் எழுதியவர்
Codicil – இணைப்புத் தாள்கள்
Guardian – காப்பாளர்
Attested – சரிபார்க்கப்பட்டது
Probate – நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் செல்லுபடியாக்கல்
Beneficiary – பயன் பெறுபவர்
Intestate – உயில் எழுதாமல் இறந்து போனவர்
Witness – சாட்சி
மேலே சொன்ன வார்த்தைகளில் Probate என்பது சிலருக்கு புரியாமல் இருக்கலாம். இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி சென்னை, டில்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் (Presidency Towns) வாழ்பவர்கள் எழுதிய உயில்கள் நீதிமன்ற ஒப்புதலுடன் செல்லுபடியாக்க வேண்டும் என்பது கட்டாயம். அதற்கு நீதிமன்ற கட்டணம் செலுத்தி வழக்கறிஞர் உதவியுடன் செல்லுபடியாக்கலாம். மற்ற ஊர்களுக்கு இந்த கட்டாயமில்லை.
வாழ்நாளின் குறிப்புகளையும் தனக்கு உதவியவர்களையும் நினைவுகூறிக் கொண்டு எழுதிய பெரிய உயில்களுக்கு மாற்றாக மிகச்சிறிய எழுதப்பட்ட உயில்களும் உண்டு.
தலைநகர் டில்லியை சேர்ந்தவர் பிமல் ரிஷி. அவர் 1995ம் ஆண்டு, ”எல்லாம் மகனுக்கே” (All to Son) என்று எழுதிய உயில்தான் உலகத்தின் மிகச் சிறிய உயில். ஆனாலும் இதற்கு முன்னதாக 1967ம் ஆண்டு செக் நாட்டைச் சேர்ந்த கால் டவுச் எழுதிய உயிலில் “எல்லாம் மனைவிக்கே” (All to Wife) என்றும் எழுதியிருந்தார்.
ஆன்லைன் வர்த்தகம் உலகமெங்கும் இப்போது பரவிக்கிடக்கிறது. மேலை நாடுகளில் ஆன்லைன் உயிலும் அதிகமாக பரவியுள்ளது. இண்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதுவதையே ஆன்லைன் உயில் என்கிறார்கள். இந்தியாவில் இந்த வசதி இன்னும் சில வருடங்களில் வரலாம்.
நம் உறவுகள் மேம்பட தத்தம் சொத்துகளை முறைப்படி உயிலாக, பத்திரங்களாக, ஆவணமாக பதிவு செய்யலாமே? ஆக்கமான பல வழிகளும் இருந்தும், அதை முறைப்படி செய்யாமல் அறியாமையால் காலம் கடத்துவதும், அசட்டையாக இருப்பதும் நமது
தவறல்லவோ?. எனவே தாமதமின்றி ஆவணங்களை உருவாக்குவோம்.
இருக்கும்போது செய்ய வேண்டியவைகளை முறைப்படி செய்வது, இல்லாதபோது வரும் சிக்கல்களை ஓரளவுக்கு குறைக்கும் என்பதை உணர்வதே காலத்தின் கட்டாயம்.
கட்டுரையாளர், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.
தொடர்புக்கு: advocatesuresh92@gmail.com.
பதிவு: ஜூன்-2017