Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நோ டென்ஷன் ப்ளீஸ்! -தில்லைக்கரசி நடராஜன்

“டென்ஷன்! வீட்லயும் டென்ஷன். ஆபீஸ்லயும் டென்ஷன். எங்கதான் போறதுனே தெரியலே,” என்று படபடக்கிறீர்களா?

ஜில்லென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டமான இடத்தில் ஒரு நீளமான மூச்சு விட்டுவிட்டு, பத்து நிமிடம் நிதானமாக உட்காருங்கள்.
உங்களுக்கு மன அழுத்தமும் டென்ஷனும் எந்தெந்த காரணங்களால் வருகிறது என்று கொஞ்சம் மனதில் பட்டியலிடுங்கள். யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.

அனேகமாய் முதல் அயிட்டம் பணப்பற்றாக்குறை என்றிருக்க வாய்ப்பிருக்கிறது. அப்புறம், உறவுகளால் ஏற்படும் சங்கடங்கள், உடல் ரீதியான கஷ்டங்கள் என்று பட்டியல் நீளும்.

நம்மில் பலர், பணமிருந்தால் போதும் எந்தப் பிரச்னையானாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணுவதுண்டு. ஆனால் நாலு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கும் எத்தனையோ பேர், தூக்கமே இல்லாமல் அலைவதை நான் பார்த்திருக்கிறேன்.

வைத்திருந்த சைக்கிளை விற்றுவிட்டு, பைக் வாங்கி அதற்குப் பிறகு கார் வாங்கி, வாங்கிய காரை விற்றுவிட்டு லேட்டஸ்ட் மாடல் கார் வாங்கி, கடைசியில் அந்த காரில் போகும்போது, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி சைக்கிள் பெடலை அழுத்திய நாள் சந்தோஷமாய் தெரியும்.

நான்கு வருடங்களுக்கு முன், ஒரு பிரபல பத்திரிகைக்காக, தீபாவளி இதழ் பேட்டி ஒன்று எடுத்தேன். பலதரப்பட்ட மக்களிடையே நான் பேட்டி எடுத்ததில் முக்கியமான கதாபாத்திரம், மாரியம்மன் கோயில் பிச்சைக்காரர் காசி தாத்தா.
அவரிடம் நான், “அய்யா! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உங்களை பேட்டி எடுக்கணும். உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கட்டுமா?” என்றேன். அவர் சிரித்தபடி, “கேளுங்க தாயி! தெரிஞ்சத சொல்றேன்” என்றார்.

“எத்தனை வருஷமா இங்க இருக்கீங்க? இதுக்கு முன்னால வேற ஏதும் வேலை செஞ்சீங்களா?”

அவர், “தாயீ, எனக்கு இப்ப வயசு எளுவத்தி அஞ்சாவது. அஞ்சு வருஷம் முன்னால வரைக்கும் வண்டி இளுத்தேன். கூலி வேல செஞ்சேன். ஒடம்புக்கு முடியல. அதான் இப்படி கோயில்ல ஒக்காந்துட்டேன் என்றவரிடம், நான், “உங்களுக்கு புள்ளைங்க யாராச்சும் இருக்காங் களா?” எனக்கேட்டேன்.

“ஆமா தாயீ. ரெண்டு பசங்க. அவனுங்க குடும்பத்த காப்பாத்தவே அவனுங்களால முடியல. நாம எதுக்கு பாராமான்னு நான் ஒதுங்கிட்டேன். அவங்கள் லாம் வெளியூர்ல இருக்காங்க. நா எதுக்கும் அவங்கள எதிர் பாக்கல,” என்றவரை பார்த்த போது மனதிற்கு ஏனோ பாரமாக இருந்தது.

“அய்யா, உங்களுக்கு தினப்படி சாப்பாடு எப்படி?” என்றேன் நான்.

“கை கால்ல சத்து இருந்தப்ப வண்டி இளுத்தேன். இப்ப ஒடம்புல வலு இல்ல. ஆனாலும் மனுஷன்னா ஏதாச்சும் செய்யணும்ல. கோயிலாண்ட ஒக்காந்திருக்கப்ப சனங்க செருப்ப உட்டுட்டு போவாங்க. பத்திரமா பாத்துக்குவேன். அவங்க கொஞ்சம் காசு கொடுப்பாங்க. போறவங்க, வற்ரவங்க வயசானவன்னு பரிதாபப்பட்டு கொஞ்சம் காசு போடுவாங்க. அந்த காசையெல்லாம் சேத்தி, அந்தா அந்த தள்ளுவண்டி கடையில குடுப்பேன். அந்த வண்டியில சோறு விக்கற தம்பி, நா காசு கொஞ்சம் கொறையா குடுத்தாக்கூட, என் வயித்துக்கு கொறையில்லாம சோறு குடுப்பாரு,” என்றார்.

“தீபாவளி பண்டிகையெல்லாம் உங்களுக்கு உண்டா?” என்றேன்.

காவியேறிய பற்களைக் காட்டி சிரித்தபடி, “எம்மா! மூணு நேரமும் சோறு கெடை க்கிற நாளெல்லாம் எம்மாதிரி ஆளுங்களுக்கு தீபாவளிதான். ஆனாலும் தீபாவளிக்கு கோயிலுக்கு வர்ற எல்லாரும் தாராளமாக காசு தருவாங்க. அன்னிக்கு நானும் கூட்டாளி ங்களும் பிரியாணி வாங்கி சாப்புடுவோம்,” என்றார்.

“அய்யா ஒரே ஒரு கேள்வி. இங்க உங்களுக்குன்னு வீடு, சொந்தம்னு ஏதாவது, யாராச்சும்…”

“தாயீ…நா இருக்கற இந்த மாரியாத்தா கோயிலுதான் எனக்கு வூடு. இந்த ஊரு சனம்தான் சொந்தக் காரங்க,” என்று வெகுளியாய் சொன்ன அந்த தாத்தா எனக்கு ஞான குருவாக தெரிந்தார்.

அங்கிருந்து விடை பெறுமுன், நூறு ரூபாய் தாளை அவரிடம் தந்தேன். வாங்க மறுத்த அவர், “கொஞ்சூண்டு வெத்தல பாக்கு மாத்திரம் வாங்கித்தா தாயீ…” என்றவர், “ஒரு ரூவா ரெண்டு ரூவான்னே வாங்கி பளகிட்டேன். திடீர்னு நூறு ரூவாய பாத்துட்டா, நாளைக்கும் யாராச்சும் இப்படி தர மாட்டாங்களோனு மனசு ஏங்கும் தாயீ….அன்னாட தேவைக்கு ஆண்டவன் படியளக்கறான். அது போதும். வெத்து ஒடம்போட வந்தோம். வெத்து ஒடம்போட போறோம். தேவைக்குமேல எது கையில இருந்தாலும் அது பாரந்தான் தாயீ…” என்றவரை பார்த்து அதிசயித்து பிரமித்துப் போனேன். கைக்கூப்பி வணங்கி விடைபெற்றேன்.

பேராசைப்படாமல், போதுமென்ற மனதோடு வாழுகின்ற, பூமியே வீடாய் எண்ணும், பணமே இல்லாத காசி தாத்தா மிகப்பெரிய செல்வந்தராகத் தெரிந்தார்.

எவ்வளவு பெரிய பலூனாக இருந்தாலும் ஒரு சின்ன குண்டூசி போதும், உள்ளே இருக்கிற மொத்த காற்றழுத்தத்தையும் ஒரு நொடியில் சிதறடிக்க. சின்னச்சின்ன விஷயங்களையும் ரசித்துப் பழகுங்கள். மனைவியை வம்புக்கிழுங்கள். அசட்டுத்தனமாய் ஏதாவது ஒரு காரியம் செய்துவிட்டு, முழிக்கும் கணவரின் தலையில் லேசாய் குட்டுங்கள்.

கோழிக்கிறுக்கலை ஓவியமாய்க் காட்டும் குழந்தைகளை கொஞ்சி மகிழுங்கள். வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டியை தூக்கி விளையாடுங்கள். நண்பர்களின் அவசரங்களுக்கும் அவசியங்களுக்கும் ஓடிப்போய் நில்லுங்கள்.

பசித்து, ருசித்து, ரசித்து சாப்பிடுங்கள். மழை நாளில் சூடாய் சாப்பிடும் பஜ்ஜியும், ஒரு கோப்பை காபியும்கூட இதமானவைதான்.
இப்போது நீங்கள் அனுவிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலி டுங்கள். ஆயிரம் சந்தோஷங்கள் இங்கே கொட்டிக்கிடக்க, டென்ஷன் எதற்கு?

ரிலாக்ஸ்….நோ டென்ஷன் ப்ளீஸ்!

கட்டுரையாளர்:
மென்திறன் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் அகடமிக் இயக்குநர்,
விபிஎம்எம் மகளிர் பொறியியல் கல்லூரி, ஸ்ரீவில்லிப்புத்தூர்.

தொடர்புக்கு: 9894807075

(‘புதிய அகராதி’ இதழ் சந்தா பெற: 9840961947)