Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்குமா?; பாஜகவை ‘தாளிக்கும்’ மீம் கிரியேட்டர்கள்!

குஜராத், ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தல் முடிவுகளின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்ற பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோரை மீம் கிரியேட்டர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். தமிழகத்தில் ஒருபோதும் மதவாத அரசியல் எடுபடாது என்றும் சூடாக பதிலடி கொடுத்துள்ளனர்.

நடந்து முடிந்த குஜராத் மற்றும் ஹிமாச்சல்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஒரு வாக்கு அல்லது ஒரு தொகுதி முன்னிலை பெற்றாலும் வெற்றிதான். அதனால் வேண் டுமானால் தேர்தல் வெற்றியை பாஜக கொண்டாடலாமே தவிர, சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் வெற்றி அல்ல. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில்.

குஜராத் மாநிலத்தில் ஒட்டுமொத்த காபினெட் அமைச்சர்களையும் களமிறக்கி, தேர்தல் வேலை பார்த்தது பாஜக. காங்கிரஸின் மணிசங்கர அய்யர், பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொல்ல சதி செய்வதாகவெல்லாம் உச்சக்கட்ட காமெடி செய்தார் பிரதமர் மோடி. உலகின் சக்தி வாய்ந்த பிரதமராக கருதப்படும் மோடியே, பாகிஸ்தான் சதியைச் சொல்லி அழும் நிலையில்தான் குஜராத் தேர்தல் களம் இருந்தது.

தொடர்ந்து ஐந்து முறை ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருந்த குஜராத்தின் அரியாசனம், எந்த நிலையிலும் கையை விட்டுப் போய்விடலாம் என்ற நிலைதான் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்னும் இருந்தது. இரண்டாம்கட்ட வாக்குப்பதிவில் என்ன மாய்மாலங்கள் நடந்தது என்பதெல்லாம் தேர்தல் ஆணையமும் பாஜகவும் மட்டுமே அறிந்த ரகசியம்.

என்ன இருந்தாலும் குஜராத்தில் மோடி என்ற தனிமனித பிம்பத்திற்கு இன்னும் மவுசு இருக்கிறது என்பதை காங்கிரசும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவர் மட்டுமே சுழன்றடித்து தேர்தல் பரப்புரை செய்தார். அதற்கான பலனையும் அறுவடை செய்திருக்கிறார்.

என்னதான் வெற்றி பெற்றாலும் பாஜக மேலிடத் தலைவர்களுக்கு காங்கிரஸின் எழுச்சியைக் கண்டு உள்ளூர ஜூரம் வந்திருக்கும். கடந்த நவம்பர் 27ம் தேதி ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குஜராத்தில் 151 இடங்களை வெல்வோம் என்றார்.

ஆனால், அதற்கு முன்பே, அதாவது நவம்பர் 5ம் தேதி பாஜக தலைவர் அமித்ஷா, 90 முதல் 149 தொ குதிகளுக்குள் வெல்ல நேர்ந்தால் அந்த வெற்றியை நாம் கொண்டாடக்கூடாது என்றார். அவருக்கு குஜராத் தேர்தல் கள நிலவரத்தின் உண்மைத்தன்மை ஓரளவுக்கு தெரிந்திருக்கிறது என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

குஜராத்தில் மோடியின் சொந்த ஊரில் காங்கிரஸ் கட்சிதான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. இனம், மதம், மொழி ரீதியாக பிரித்தாலும் தந்திரமும் பாஜகவுக்கு பெருமளவு கைகொடுத்திருப்பதையும் நாம் புறந்தள்ளிட முடியாது.

ஆனால், குஜராத்தில் ஆறாவது முறையாக வென்றுவிட்டோம் என்பதற்காகவும், ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியைப் பறித்துக்கொண்டோம் என்பதற்காகவும் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைத்துவிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்வதெல்லாம் வேடிக்கையின் உச்சம்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற ரீதியில் வேண்டுமானால் அவரின் தன்னம்பிக்கையை பாராட்டலாம்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘காமராஜரைக்கூட தோற்கடித்து விடலாம். ஆனால் மோடியை யாரும் தோற்கடிக்கவே முடியாது,’ என்று சொல்லியிருக்கிறார். இரு மாநிலத் தேர்தல் முடிவுகள் அவர்களை அப்படி பேச வைக்கிறது.

காமராஜரும் தோற்கடிக்க முடியாத பெருந்தலைவராகத்தான் இருந்தார் என்பதை ஹெச்.ராஜா எப்படி மறந்தார் எனத்தெரியவில்லை. அரசியலில் எதுவும் நிலையற்றது என்பதை காலம் அவருக்கு உணர்த்தும்.

ஆனால், இதற்கெல்லாம் மக்களின் மனநிலை என்ன என்பதை அவர்களுக்கு ட்விட்டர் தளத்தில் கிடைத்திருக்கும் பதிலடிகளை வைத்தே உணர்ந்திருக்கக் கூடும். மறந்தும்கூட தமிழிசை மற்றும் ஹெச்.ராஜாக்களுக்கு ஒத்திசைவான கருத்துகள் எழவில்லை.

அவர்களுக்கு எதிர்வினை ஆற்றியவர்கள் அனைவருமே திமுக, அதிமுக என்றோ இதர கட்சிகளைச் சேர் ந்தவர்களோ என்றோ வகைப்படுத்தி விட முடியாது. அவர்களில் பெரும்பான்மையினர் அடையாளம் அற்றவர்கள். மக்களின் குரலை பிரதிபலிப்பவர்கள்.

குஜராத்தில் சாதி அரசியலுக்கு சம்மட்டி அடி கொடுக்கப்பட்டுள்ளது என்ற தமிழிசையின் கருத்திற்கும் கடுமையான எதிர் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ‘தமிழிசை அக்கா, உங்கள் கருத்தை ஜீரணிக்கக்கூட தில்லு வேண்டும்,’ என்கிறார் ஒருவர்.

கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குஜராத்தில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை வென்று மிகப்பெரும் எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது. டெபாசிட்கூட பெற முடியாது என கேலி, கிண்டலாக மீம்களை பதிவிட்டுள்ளனர்.

வழக்கம்போல் மீம் கிரியேட்டர்கள், தமி-ழிசையை டுமிழிசை என்றும், ஹெச்.ராஜாவை ‘எச்ச’ என்றும் வசைபாடியிருக்கின்றனர். அதுபோன்ற தனிமனித தாக்குதல்களை நாம் ஆதரிப்பதில்லை. கருத்தியல் விமர்சனங்களை முன்வைக்கலாம்.

‘தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நிறுத்துவதற்கு வேட்பாளர்களை பிடி. ஆர்கே நகரில் போட்டியிடவே எல்லோரும் ஓடி ஒளிகிறார்கள்,’ என்றும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ஹெச்.ராஜாவுக்கு ஒருவர், ‘முதலில் தமிழ்நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலர் ஆக முடியுதா என்று பார்,’ எனவும் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திலும் ஜெயிப்போம் என்ற தமிழிசைக்கு ஒருவர், ‘தமிழ்நாடேதான் வேணுமா? ஏன் இந்த தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா எல்லாம் வேண்டாமா?,’ என்று கவுண்டமணி பாணியில் நக்கலாக கேள்வி கேட்டுள்ளார்.

இன்னும் சிலர், குஜராத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் செய்யப்பட்ட மோசடிதான் காரணம் என்றும் சந்தேகம் கிளப்பி இருக்கின்றனர். அதை வெளிப்படுத்தும் விதமாக, ராகுல் காந்தியும், மோடியும் பேசிக்கொள்வதுபோல கேலியாக மீம் பதிவிட்டுள்ளனர்.

‘எங்க ஏரியா ஓட்டைப் பிரிக்கட்டும். அப்புறம் இருக்கு உங்களுக்கு,’ என்று ராகுல் காந்தி சொல்கிறார். அதற்கு மோடி, ‘உங்க ஏரியாலதாண்டா எந்த சுவிட்ச போட்டாலும் 56 வாட்ஸ் பல்பு எரியுற மாதிரி மிஷின செட் பண்ணி வெச்சோம். போவியா…,’ என்று கேலியாக சொல்வது போலவும் மீம் வெளியிட்டுள்ளனர்.

அரசியல் பூகோளத்தில் தமிழகம் எப்போதும் தனித்தே இருந்திருக்கிறது. தேசிய கட்சி ஆட்சியை வீட்டுக்கு முதலில் அனுப்பிய மாநிலம் தமிழகம் என்ற கர்வம் எப்போதும் இந்த மண்ணுக்கு உண்டு. பாஜகவினர் அரியணை ஆசையில் தப்புக்கணக்குப் போடுகின்றனர்.

தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது அவர்களின் உள்ளக்கிடக்கையாக இருக்கலாம். அந்த ஆசையே சரிதானா என்பதற்கு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பாஜகவின் முடிவு என்னவாகிறது என்பதை வைத்தாவது அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

– நாடோடி.