Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் திடீர் தற்கொலை ஏன்?; கைது நடவடிக்கைக்கு பயந்து விஷம் குடித்தாரா?; திடுக்கிடும் தகவல்கள்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அங்கமுத்து (58) திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (58). சேலம் பெரியார் பல்கலையில் உடல்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்தார். நேற்று (டிசம்பர் 18, 2017) காலை அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்தார்.

அங்கமுத்து

இதையறிந்த அவருடைய மனைவி விஜயலட்சுமி, உடனடியாக அருகில் உள்ள தன்வந்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு கைவிரித்த நிலையில், கணவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே அங்கமுத்து இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த பெருந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேல், தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறார். அவரிடம் நாம் கேட்டபோது, அங்கமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன், அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதிலிருந்து அடிக்கடி நெஞ்சு வலி இருந்து வருவதாக புலம்பி வந்ததாகவும், அதனால் விரக்தி அடைந்து தற்கொலை முடிவெடுத்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

அவர் ஏதாவது தற்கொலை குறிப்பு எழுதி வைத்திருக்கிறாரா என்று கேட்டபோது, அப்படி எந்த விதமான கடிதமும் கண்டறியப்படவில்லை என்றே கூறினர்.

தற்கொலை செய்து கொண்ட அங்கமுத்துவுக்கு இரண்டு மகள்கள். ஒரு மகள் சென்னையிலும், இன்னொரு மகள் துபாய் நாட்டிலும் வசிக்கின்றனர். அவர்களுக்கு தகவல் சொல்லப்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்கமுத்துவின் உடல், இன்று (டிசம்பர் 19, 2017) ஈரோடு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

அங்கமுத்து தற்கொலைக்கு அவருடைய உடல்நலக்கோளாறுதான் காரணம் என்று காவல்துறை தரப்பில் மேலோட்டமாக சொல்லப்பட்டாலும், சேலம் பெரியார் பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

நாம் விசாரித்தவரை அங்கமுத்து, திட்டமிட்டே தற்கொலை செய்திருப்பதாக சிலர் கூறினர். அதற்கு அவர்கள் சில வலுவான காரணங்களையும் அடுக்கினர்.

சேலம் பெரியார் பல்கலையில் அங்கமுத்து, கடந்த 2004ம் ஆண்டு உடற்கல்வி இயக்குநராக பணியில் சேர்ந்தார். இதற்கிடையே, கடந்த 2012 முதல் 2015ம் ஆண்டு வரை அவர் பதிவாளராகவும் பணியாற்றி வந்தார்.

அவர் பதிவாளராக பணியாற்றிய காலத்தில் அலுவலக ஊழியர்கள், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. அப்போது துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன் மீதும் இந்த புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலாளர், விஜிலன்ஸ் காவல்துறை வரை விசாரணை நடந்து வருகிறது.

சுவாமிநாதன்

இது ஒருபுறம் இருக்க, கடந்த மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் அங்கமுத்து மீது வேறு சில புகார்களும் வாசிக்கப்பட்டு உள்ளன. அதாவது, அவர் உடல்கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டபோது துணை வேந்தராக இருந்த பாலகிருஷ்ணன், பேராசிரியருக்கு இணையான ஊதிய விகிதம் நிர்ணயம் செய்து ஓர் உத்தரவை வெளியிட்டு இருந்தாராம்.

பல்கலை விதிகள் மற்றும் யூஜிசி விதிகளை மீறி இவ்வாறு ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதையெல்லாம் தோண்டி எடுத்த அங்கமுத்துவுக்கு எதிரான ஒரு பிரிவினர், உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலுக்கு புகாரை தட்டிவிட்டுள்ளனர். மேலும், நூலகர் சுப்ரமணியன் என்பவருக்கும் விதிகளை மீறி பேராசிரியருக்கு இணையான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது குறித்தும் புகாரில் சொல்லப்பட்டு இருக்கிறது.

புகார் மட்டுமின்றி, தணிக்கை அறிக்கையையும் விலாவாரியாக ஆய்வு செய்த உயர்கல்வித்துறை செயலாளர், அங்கமுத்து மற்றும் சுப்ரமணியன் ஆகியோருக்கு இத்தனை வருடங்களாக மிகையாக வழங்கப்பட்டுள்ள ஊதியத்தை உடனடியாக ரெக்கவரி செய்யும்படி ஓர் ஆணையைப் பிறப்பித்துள்ளார்.

அதன்படி ரெக்கவரி செய்ய வேண்டுமெனில், அங்கமுத்துவிடம் இருந்து கிட்டத்தட்ட ரூ.55 லட்சம் வரை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற நிலை. இதையெல்லாம் கடந்த மாதம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் உறுப்பினர்கள் காரசாரமாக விவாதித்துள்ளனர்.

இது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது குற்றச்சாட்டு என்னவெனில், பதிவாளர் பணியில் இருந்து விலகும்போது அவருடைய காலத்தில் நியமிக்கப்பட்ட பணியிடங்கள் குறித்த கோப்புகள், நிர்வாகம் சார்ந்த ஆவணங்களை அடுத்து அந்த பதவிக்கு வரக்கூடிய நபரிடம் ஒப்பளிப்பு செய்ய வேண்டும். ஆனால், அங்கமுத்து அப்படி ஒப்படைக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார். மேலும், பல முக்கிய கோப்புகள் மாயமானதாகவும் சொல்லப்படுகிறது.

சுனில் பாலிவால்

இது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, உயர்கல்வித்துறை செயலாளரே அங்கமுத்துவை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். நிர்வாகம், நியமனம் தொடர்பான கோப்புகளை தற்காலிக பதிவாளராக நியமிக்கப்பட்ட லீலாவிடம் ஒப்படைத்தேன் என்று சொல்ல, உடனடியாக லீலாவிடமும் விசாரணை நடந்துள்ளது. ஆனால் அவரோ, அங்கமுத்துவிடம் இருந்து தான் எந்த ஒரு கோப்பும் பெறவில்லை என்று ஆதாரப்பூர்வமாக சொல்லி இருக்கிறார்.

மீண்டும் அங்கமுத்துவிடம் விசாரித்தபோது, முக்கியமான சில கோப்புகளை, முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியனிடம் ஒப்படைத்துள்ளதாக சொல்ல, அவரிடம் செல்போனிலேயே தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். அவரோ, தான் என்னென்ன கோப்புகளை அங்கமுத்துவிடம் இருந்து பெற்றேன் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கி இருக்கிறேன் என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களை மின்னஞ்சல் மூலமாக உயர்கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பி இருக்கிறார்.

லீலா

பின்னர் மீண்டும் அங்கமுத்து, முன்னாள் துணை வேந்தர் சுவாமிநாதனிடம் கோப்புகளை ஒப்படைத்துள்ளதாக கூறியிருக்கிறார். இப்படி தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக தொடர்ந்த பேசவே, ஒருகட்டத்தில் டென்ஷன் ஆன உயர்கல்வித்துறை செயலாளர், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியிருக்கிறார். விசாரணை முடிந்து, அவருடைய அறையில் இருந்து அழுதுகொண்டே அங்கமுத்து வெளியேறியதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

இந்த விசாரணை ஒருபுறம் இருக்க, பெரியார் பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவிக்கும் அங்கமுத்து விண்ணப்பித்து இருக்கிறார். இந்தப்பதவிக்கு மொத்தம் 194 பேராசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் இருந்து இறுதிக்கட்ட நேர்முகத்தேர்வுக்காக 10 பேரை மட்டும் தேடுதல்குழு தெரிவு செய்துள்ளது. அந்த பத்து பேரில் அங்கமுத்துவும் ஒருவர் என்பதுதான் ஹைலைட் சமாச்சாரம்.

இந்த 10 பேர் குழுவில் இடம் பெறுவதற்காக அவர், ஆளுங்கட்சி தரப்பில் அதிகாரத்தில் இருக்கும் சில முக்கியஸ்தர்களையும் சரிக்கட்டி இருப்பதாகவும், கேரளாவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் மகன் மூலமாக இந்த வேலைகளை எல்லாம் பக்காவாக செய்திருப்பதும் தெரியவந்து, உயர்கல்வித்துறை செயலாளரே ஆடிப்போனாராம்.

இந்த பத்து பேருக்கும் வரும் 24ம் தேதி நேர்முகத்தேர்வு நடக்க இருந்தது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், முன்னாள் துணை வேந்தரான சுவாமிநாதனும் பெரியார் பல்கலை துணை வேந்தர் பதவிக்கு ரொம்பவே மெனக்கெட்டார். இறுதிக்கட்ட 10 பேர் குழுவில் அவருடைய பேர் இல்லாமல், அங்கமுத்து பேர் மட்டும் இருந்ததைக் கண்டு அவரும் கொதிப்படைந்தார் என்கிறார்கள்.

இந்த நிலையில்தான், அங்கமுத்து மீது உடனடியாக குற்றச்சாட்டு குறிப்பாணை தயார் செய்து, அவர் மீது சூரமங்கலம் காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யவும் உயர்கல்வித்துறை செயலாளர் வாய்மொழியாக உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கல்வி கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பெரியார் பல்கலைக்கு நேற்று (டிசம்பர் 18, 2017) வந்துள்ளார். அவர் வந்த நேரம் பார்த்து, தன்னை காவல்துறையினர் கைது செய்துவிட்டால் மானம் போய்விடும் என்று அங்கமுத்து கருதியிருக்கக் கூடும். அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்கிறார்கள் பல்கலை வட்டாரத்தில் விவரம் அறிந்தவர்கள்.

முத்துச்செழியன்

ஆளுநர் வருகையையொட்டி அங்கமுத்துவும் நேற்று காலை சொந்த ஊரில் இருந்து கார் மூலம் பல்கலைக்கு காலையிலேயே வந்துவிட்டாராம். என்ன நினைத்தாரோ திடீரென்று அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக கூறுகின்றனர்.

அவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்கூட மதியம் 1.30 மணியளவில்தான் வெளியே தெரியவந்திருக்கிறது. தற்கொலை விவகாரத்தை பல்கலை வட்டாரத்திற்கும், ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியதில்கூட ஒரு முன்னாள் துணைவேந்தருக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்கின்றனர்.

– பேனாக்காரன்.