ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது இருந்த உடல்நிலை குறித்த அறிக்கை இன்று (செப். 28) திடீரென்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானதன் பின்னணியில், சசிகலா – டிடிவி தினகரன் தரப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
மக்களே மறந்திருந்த ஜெயலலிதாவின் அப்பல்லோ மருத்துவமனை நினைவுகள், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டிகளால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. ‘அம்மா இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை’ என்று அவர் சொன்னது, கடந்த பத்து நாள்களாக மீண்டும் ஜெயலலிதா மரணத்தின் மீது மக்களின் கவனம் திசை திரும்ப காரணமாக அமைந்தது.
அதேநேரம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது தாங்கள் உள்பட எல்லா அமைச்சர்களும் நேரில் பார்த்தோம் என்று கூறினர். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், மைனாரிட்டி அரசாங்கம், ஆட்சிக்கலைப்பு அஸ்திரம் என்று தடதடத்துக் கொண்டிருந்த தமிழக அரசு, திட்டமிட்டே இதுபோன்ற தகவல்களை பரப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்புகிறதோ என்ற சந்தேகமும் எழுந்தது.
எடப்பாடி பழனிசாமி மீது போர்க்கொடி தூக்கிய டிடிவி தினகரன், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள், தேவைப்பட்டால் வெளியிடப்படும் என்று அடிக்கடி கூறி வந்தார்.
ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நாளான கடந்த ஆண்டு செப். 22ம் தேதி, சசிகலா அவரை தாக்கியதாகவும், மாடிப்படியில் இருந்து கீழே உருண்டு விழுந்ததாகவும், அதனால் தலையில் காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றதாகவும் அப்போது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலா வந்தன. போயஸ் கார்டன் ரகசிய பெட்டகத்தை திறப்பதற்காக ஜெயலலிதாவின் கால் கட்டை விரல் வெட்டி எடுக்கப்பட்டதாகவும்கூட சொல்லப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் வெளியைக் கடந்தும் பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டி வந்த ஜெயலலிதாவைக் காண, நரேந்திர மோடி ஒருமுறைகூட அப்பல்லோ மருத்துவமனைக்கு வராதது ஏன்? என்பது போன்ற சந்தேகங்களும் வலுத்தன. நட்பாக கருதாவிட்டாலும், இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி, சக்திமிக்க பெண் தலைவர், மாநில முதல்வர் என எந்த அடிப்படையிலாவது பிரதமர் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. வெங்கையாநாயுடு, அருண் ஜெட்லி, பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற இரண்டாம்கட்டத் தலைவர்கள் மட்டுமே அப்பல்லோவுக்கு வந்துசென்றனர். அவர்களும் ஜெயலலிதா சிகிச்சை பெறுவதை நேரில் பார்த்தார்களா என்பது கேள்விக்குறியே.
சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா, காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அப்போது அமைச்சர்கள் கூறினர்.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையம், மூன்று மாத காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பரபரப்புக்கு இடையே இன்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்று, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டபோது அவருடைய உடல்நிலை இருந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் பகீர் தகவல்கள் ஏதுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நாளன்று இரவு 10 மணிக்கு, போயஸ் கார்டனில் இருந்து ஜெயலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று அப்பல்லோ மருத்துவமனைக்கு தகவல் கிடைத்துள்ளது. அடுத்த 6 நிமிடங்களில் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனம் போயஸ் தோட்டத்திற்கு சென்று விட்டது. ஜெயலலிதா, இரவு 10.30 மணிக்குள்ளாகவே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டார் என்கிறது அந்த அறிக்கை.
ரத்த அழுத்தம் 140/70 (சராசரி 120/80) ஆகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவு 508 மி.கி. ஆகவும் (சராசரி 120) இருந்தததாக அறிக்கையில் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. இன்னொரு முக்கியமான தகவல், ஜெயலலிதாவின் உடலில் வெளிக்காயங்கள் ஏதுமில்லை என்றும், அப்போது அவர் மயக்க நிலையில் இருந்தார் என்றும் தெளிவாகச் சொல்கிறது அந்த அறிக்கை.
நாம் அரசு மருத்துவர் ஒருவரிடம் விசாரித்தோம். ”பொதுவாக 68 வயதுள்ள பெண்களுக்கு இயல்பாகவே ரத்த அழுத்தம் 130 – 140 மற்றும் 80 – 90 வரை இருக்கலாம். அதனால் பிரச்னைகள் எழ வாய்ப்பு இல்லை. அதேபோல் இருதய துடிப்பும் 60 – 80 வரை இருக்கலாம். பொதுவாகவே பெண்களுக்கு இருதய துடிப்பு சற்று குறைவாகத்தான் இருக்கும்,” என்கிறார் அந்த மருத்துவர்.
இந்த அறிக்கையின் மூலாமாக சசிகலா மீதான களங்கம் துடைக்கப்பட்டதாக தினகரன் ஆதரவாளர்கள் சொல்கின்றனர். எடப்பாடி பழனிசாமி & டிடிவி தினகரன் இடையே ஏற்பட்டுள்ள ஆடு – புலி ஆட்டத்தின் உச்சக்கட்டமாக, இப்படியொரு அறிக்கையை ஊடகங்கள் வாயிலாக தினகரன் தரப்பே வெளியிட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் கசிகின்றன.
இதனால் தினகரன் தரப்புக்கு சில கூடுதல் நன்மைகள் கிடைக்கலாம். முக்கியமாக சசிகலா, ஜெயலலிதாவை தாக்கியதாகச் பரப்பப்படும் அதிகாரப்பூர்வமற்ற குற்றாச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லாமல் போய்விடுகிறது. அடுத்து, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஓரிரு நாள்களில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய போலீஸ் பாதுகாப்பு யாருடைய உத்தரவின்பேரில் விலக்கப்பட்டது?, சாதாரண நோய்த்தொற்று என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதாப் சி.ரெட்டி தொடர்ந்து அறிக்கை வெளியிட்டார். சில நாளில் வீடு திரும்புவார் என்றும் சொன்னார். அல்லது அப்படி சொல்ல வைக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அளித்த பேட்டியின்படி, ஜெயலலிதா கோமா நிலையில்தான் இருந்தார் எனில், அவர் காவிரி விவகாரம் குறித்து மருத்துவமனையில் அதிகாரிகளுடன் ஆலோசித்திருக்க முடியாது; எல்லாவற்றுக்கும்மேல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்புமனுவில் கைரேகை வைத்திருக்க முடியாது.
இதுபோன்ற சிக்கலான சந்தேகங்களுக்கு அப்போது முதல்வர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வமும், முக்கிய பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுமே பதில் சொல்லியாக வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பை இடியாப்ப சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காகத்தான் சசிகலா, தினகரன் தரப்பிலிருந்தே ஜெயலலிதா பற்றிய உடல்நிலை அறிக்கை (பேஷன்ட் கேர் ரிப்போர்ட்) கசிந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வலுத்துள்ளது.
அரசியல் ஆடு-புலி ஆட்டத்தின் அடுத்தக்கட்டம் என்னவோ?