Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘ஸ்பைடர்’ – திரை விமர்சனம்!

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம் ‘ஸ்பைடர்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நேற்று (செப். 27) வெளியாகி இருக்கிறது. இது ஒரு சைக்கோ திரில்லர் வகைமையிலான படம்.

இந்திய உளவுத்துறையில் ஃபோன் அழைப்புகளை டேப்பிங் செய்யும் பிரிவில் பணியாற்றுகிறார் ஹீரோ சிவா (மகேஷ்பாபு). சட்டத்திட்டங்களை மீறினால்தானே சாதாரண ஹீரோ, சூப்பர் ஹீரோ ஆக முடியும்?. ஸ்பைடர் ஹீரோவும் அப்படித்தான். தனது ‘ஸ்பை ஆப்’ மூலம், அபாயகரமான சூழலில் சிக்கித்தவிக்கும் மக்களின் பிரச்னைகளை கண்டறிந்து, அதாவது ஃபோன் பேச்சை ஒட்டுக்கேட்டு, பிரச்னையில் சிக்கும் முன்பே அவர்களை மீட்கும் வேலைகளில் ஈடுபடுகிறார் மகேஷ்பாபு.

இளம்பெண் ஒருவர் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்க, அவரை காப்பாற்றுவதற்காக உடன் பணியாற்றும் சக பெண் போலீஸ் ஒருவரை அந்த பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். மறுநாள் பெண் போலீஸ் உள்பட இருவரும் துண்டு துண்டாக வெட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார்கள்.

அந்தக் கொலைகளைச் செய்தது யார்? என கண்டுபிடிக்க களமிறங்குகிறார், ஹீரோ. கொடூர கொலைகளைச் செய்யும் சைக்கோ எஸ்.ஜே.சூர்யாதான் எனத் தெரிய வந்த பிறகு, ஹீரோ & வில்லன் இடையே ஆடு-புலி ஆட்டம் ஆரம்பமாகிறது.

பிறர் துன்புறுவதைப் பார்த்தும், இறப்பைப் பார்த்தும் ஆனந்தம் அடையும் சைக்கோ சுடலை என்ற பாத்திரத்தில் பட்டாசு கிளப்பி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவருடைய தம்பியாக பரத். இனிமேல் தமிழ் சினிமாக்களில் பிரகாஷ்ராஜுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம். அந்தளவுக்கு வில்லன் பாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார், எஸ்.ஜே.சூர்யா.

யாரை எப்படி முடிக்க வேண்டும் என்ற விவரங்களை சேகரிப்பதும், அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுப்பதும் தம்பி பரத்தின் வேலை. கனகச்சிதமாக கொலைகளை அரங்கேற்றுவது அண்ணன் எஸ்.ஜே.சூர்யாவின் வேலை. இந்த சைக்கோக்களிடம் மக்கள் காப்பாற்றப்பட்டனரா? அவர்கள் எதனால் சைக்கோ ஆனார்கள்? வில்லன்கள் தண்டிக்கப்பட்டார்களா? என்பதுதான் ஸ்பைடர் படத்தின் மிச்ச சொச்ச கதை.

ஹீரோ என ஒருவர் இருந்தால், ஹீரோயின் என்று ஒருவர் இருக்க வேண்டும்தானே. அதனால் இந்தப் படத்திலும் ரகுல் பிரீத் சிங் என்பவர் ஹீரோயினாக நடிக்காமல் வந்து போகிறார். ‘கஜினி’ படத்தில் கதாநாயகிக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திருப்பார் முருகதாஸ். அப்படி எல்லாம் ஸ்பைடரில் எதிர்பார்க்கக் கூடாது. ஹீரோவை கண்டதும் காதல் கொள்வது, சில பாடங்களுக்கு ஆடுவதைத் தவிர அவருக்கு பெரிதாக வேலைகள் இல்லை.

தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழில் சொந்தக்குரலில் அழகாக டப்பிங் பேசியிருக்கிறார் மகேஷ்பாபு. ஆனாலும், பல நேரங்களில் முகத்தில் எவ்வித எக்ஸ்பிரஷனும் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே முகத்தை வைத்திருக்கிறார். ஒருவேளை, தென்னிந்திய ஜேம்ஸ்பாண்டாக நடிக்க முயற்சிக்கிறாரோ என்னவோ.

தெலுங்கிலும் படம் ரிலீஸ் ஆகிறது என்பதாலோ என்னவோ தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப ஹீரோவுக்கு பில்ட்-அப் காட்சிகளும் உண்டு. ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் இயக்கத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ரசிக்கும்படி இருக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ‘ரிச் லுக்’. ஸ்ரீகர் பிரசாத்தின் கலை இயக்கமும் பேசப்படும்.

வில்லனை பிடிக்க, சீரியல் பார்க்கும் குடும்பத் தலைவிகளை வைத்து ஹீரோ ஒரு மாஸ்டர் பிளான் போடுகிறார். அதை செயல்படுத்தும் காட்சிகளில் தியேட்டரில் கைதட்டலும், விசில் சத்தமும் பறக்கிறது. ரொம்ப சுவாரஸ்யமான காட்சிகள் அவை.

இன்னொரு ரசனைக்குரிய பகுதியும் உண்டு. யாருங்க அந்தப்பையன்? என்று கேட்கும் அளவுக்கு, எஸ்.ஜே.சூர்யாவின் ஃபிளாஸ்பேக் காட்சியில் நடித்திருக்கும் சிறுவன் அனாயசமாக பொளந்து கட்டுகிறான். நிறைய வாய்ப்புகள் வரலாம்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் பெரிதாக ரசிக்கும்படி இல்லை. ஆனால், ஒரு சைக்கோ திரில்லர் படத்துக்கு மிகச்சிறந்த பின்னணி இசையைக் கொடுத்திருக்கிறார் எனலாம். இருந்தாலும், சில இடங்களில் ‘அந்நியன்’, ‘துப்பாக்கி’ போன்ற படங்களில் வந்த பின்னணி இசை துணுக்குகளும் ஆங்காங்கே கேட்கின்றன.

மொத்தத்தில் இந்தப்படம் மகேஷ்பாபுவுக்கு தமிழில் நல்லதொரு அறிமுகம். எஸ்.ஜே.சூர்யாவுக்கு நிறைய வில்லன் வாய்ப்புகள் குவியலாம். ஆனால், இயக்குநராக ஏ.ஆர்.முருகதாஸ் இதில் முழு பெற்றி பெற்றாரா என்பது சந்தேகமே. கிளைமேக்ஸ் காட்சியில் கருத்து திணிப்பும் உண்டு. இருப்பினும், சைக்கோ திரில்லர் வரிசையில், ‘ஸ்பைடர்’ தவிர்க்க முடியாத படம்.  டீசர் இணைப்பு.

– வெண்திரையான்.