Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திரிபுரா: இடதுசாரிகளுக்கு தோல்வியும் அல்ல; பாஜகவுக்கு வெற்றியும் அல்ல!

திரிபுரா மாநிலத்தில் கூட்டணி சகிதமாக அமோக வெற்றி பெற்று இடதுசாரிகளின் கோட்டையைத் அனாயசமாக தகர்த்தெறிந்துள்ளது பாஜக. கால் நூற்றாண்டு காலமாக ‘லால் சலாம்’ முழக்கம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்த அந்த மாநிலத்தில், தேர்தல் முடிவு வெளியான நேற்றிலிருந்து ‘பாரத் மாதா கி ஜே’வும், ‘வந்தே மாதரம்’ முழக்கமும் எதிரொலிக்கின்றன.

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிந்து, முடிவுகள் நேற்று (மார்ச் 3, 2018) வெளியாகின. மூன்று மாநில தேர்தல் முடிவுகளிலும் ஒரு நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. அது, நீண்ட காலம் ஆட்சியில் இருப்போரை மாற்ற வேண்டும் என்று மக்கள் யோசித்திருப்பது தெரியவருகிறது.

குறிப்பாக, திரிபுரா. அது, காலங்காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றிபெற்று 20 ஆண்டுகளாக முதல்வர் பதவியை அலங்கரித்து வந்த மாணிக் சர்க்கார், எளிமையின் மொத்த வடிவம். ஊழலற்ற ஆட்சி.

வெளிப்படையான நிர்வாகம். ஆனால் இது மட்டுமே போதாது என அம்மாநில மக்கள் ஒருமனதாக தீர்மானித்திருக்க வேண்டும். அதன் எதிரொலிதான், அங்கு மாணிக் சர்க்கார் இந்தமுறை தோல்வியைத் தழுவ நேர்ந்துள்ளது.

திரிபுரா இடதுசாரிகள், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள்தான். ஆனால், செங்கோட்டையைத் தகர்த்த மமதை பாஜகவிடம் தெரிகிறது. எள்ளி நகையாடும் போக்கும் அத்தனையும் மூன்றாம் தர, நாலாம்தரமானவை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான பிருந்தா காரத் நெற்றியில் அணிந்திருக்கும் சிவப்பு பொட்டின் அளவுக்குக்கூட, இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி பரப்பளவு இல்லை என்கிறார் ஒரு பாஜக ஆதரவாளர்.

பலரும் சொல்லி வைத்தாற்போல் மாணிக் சர்க்காரை, கேரளாவுக்கும், மேற்கு வங்கத்திற்கும், வங்கத்திற்கும் துரத்தி அடிக்கின்றனர். இப்போதைக்கு கம்யூனிஸ்டுகளுக்கு கேரளாவைத் தவிர வேறு எங்கும் கிளைகள் இல்லை என்றும் கிண்டலடி க்கிறார் மற்றொரு ஆர்எஸ்எஸ் பிரமுகர்.

இத்தகைய விமர்சகர்கள், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதை மறந்துவிடுகின்றனர்.

சரி. நாட்டிலேயே ஏழை முதல்வர்தான்; சொந்தமாக வீடுவாசல்கூட இல்லாதவர்தான், மாணிக் சர்க்கார். பிறகு ஏன் அவர் தலைமையிலான கட்சி தோல்வியைத் தழுவியது?

கடந்த ஜனவரி மாத இறுதியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தியாளர் மாணிக் சர்க்காரிடம், ”இந்த முறை பாஜக உங்களுக்கு சவாலாக இருக்கிறதே. அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால்…” எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு மாணிக் சர்க்கார், ”ஹாஹா…” என சிரித்தவர், ”இதே கேள்வியை மக்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். இந்தமுறையும் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்வோம்,” என்றார்.

அந்தளவுக்கு அவர் தன் நிர்வாகத்தின் மீதும், தன் மக்களின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார். ஆனால் தேர்தல் முடிவோ அவருடைய நம்பிக்கைக்கு நேர்மாறாக அமைந்தது. இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு வேறு என்னதான் காரணமாம்….

♦ காரணம் 1: திரிபுரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்னும் நான்காவது சம்பளக்குழு பரிந்துரைப்படிதான் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் பலமுறை போராடிப் பார்த்தும் மாணிக் சர்க்கார் அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், நடந்து முடிந்த 2018ம் ஆண்டு தேர்தலின்போது, 7வது ஊதிய விகிதம் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அது, அரசு ஊழியர்களிடம் எடுபடவில்லை.

♦ காரணம் 2: இளைய சமூகத்தினர் இயல்பாகவே இடதுசாரி சித்தாந்தத்தைவிட்டு சற்று எட்டியே நிற்கின்றனர். அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கத் தவறியிருக்கிறது மாணிக் சர்க்கார் அரசு. கணிசமான அரசு வேலைகளிலும் இடதுசாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகளே ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.

திரிபுரா தலைநகர் அகர்தலா தவிர மற்ற பகுதிகளில் நவீனமயம் என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு பின்தங்கியிருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம், கணிசமான இளம் வாக்காளர்கள் மத்தியில் இடதுசாரிகள் மீது உச்சக்கட்ட வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

♦ காரணம் 3: மனித மனங்களில் இயல்பாகவே கெட்டிப்பட்டிருக்கக் கூடிய தலைமுறை இடைவெளி. கால் நூற்றாண்டு காலமாக ஒரே ஆட்சி. அதில் மாணிக் சர்க்காரே தொடர்ந்து நான்கு முறை முதலமைச்சர். இதுபோன்ற அம்சங்களில் மக்களும் உளவியல் ரீதியாக ஒருவித சலிப்பைச் சந்திக்கின்றனர். அதன் தாக்கமும் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

♦ காரணம் 4: மாணிக் சர்க்காரை பொருத்தவரை கரைபடியாக கரங்களுக்குச் சொந்தக்காரர். ஆனால் அது மட்டுமே அந்த மாநிலத்திற்குப் போதாது. திரிபுராவில் அண்மையில் எழுந்த, நிதி நிறுவனங்களின் மீதான மோசடி புகார்களை தேர்தல் நெருக்கத்தில் பாஜக தரப்பு, அரசுக்கு எதிரான விமர்சனமாக முன்வைத்தது. சர்க்கார், வங்க பேரினவாதி என்றும் கூச்சல் போட்டது.

♦ காரணம் 5: திரிபுராவில் கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 10 இடங்கள் முதல் 12 இடங்கள் வரையில் கைப்பற்றி இருக்கிறது. இந்த முறை அக்கட்சி ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் களத்தில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலரை, பாஜக தங்கள் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டதும் பாஜகவுக்கு திரிபுரா வசமாக முக்கிய காரணம்.

இப்படி சில காரணிகளை இடதுசாரிகளின் தோல்விக்குக் காரணங்களாக அடுக்குகின்றனர். ஆனால், திரிபுராவின் சித்தாந்ததிற்கு சற்றும் ஒவ்வாத, அதுவும் பூச்சியத்தில் இருந்து ஒரு கட்சி, நாலு கால் பாய்ச்சலில் ஆட்சியைப் பிடித்துவிட இவை மட்டும்தான் காரணங்களாக இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.

 

அதீத தன்னம்பிக்கை:

 

மாணிக் சர்க்கார் தன்னுடைய வெளிப்படையான நிர்வாகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுவிட்டார். இந்தமுறையும் முதல்வராக நீடித்துவிடுவோம் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். எண்ணத்தில், கொண்ட நம்பிக்கையில் பழுதில்லை. ஆனால், எதிரிகளின் வியூகங்களை அவர் அசட்டையாக விட்டுவிட்டார் என்பதையும் மறுக்க முடியாது.

அங்கு கணிசமாக உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் சென்றமுறை காங்கிரஸ் கட்சியை ஆதரித்தன. இந்த தேர்தலில் அவை, இடதுசாரிகளை ஆதரிக்க தாமாகவே முன்வந்து மாணிக் சர்க்காரிடம் பேச்சு நடத்தின. ஆனால் சர்க்கார், கிறிஸ்தவ என்ஜிஓக்களின் ஆதரவு வேண்டாம் என மறுத்துவிட்டார். காரணம், பல என்ஜிஓக்கள் வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நன்கொடை பெற்று வருவதுதான்.

அதேபோல் ஐஎன்பிடி கட்சியும் இந்த முறை காங்கிரஸை உதறிவிட்டு, சிபிஎம் கட்சியை ஆதரிக்க முன்வந்தது. ஐஎன்பிடி கட்சி, குறுங்குழுவாதம் பேசக்கூடியது என்பதால், அக்கட்சியின் ஆதரவையும் பெற மறுத்துவிட்டார் மாணிக் சர்க்கார். தன் மீதும், இடதுசாரி சித்தாந்தத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்ட சர்க்கார், இந்தமுறை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டார்.

 

பிரிவினைவாதிகளுடன் பாஜக கூட்டு:

 

ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என்பது, அகண்ட பாரதத்தை விரும்புவது. அதன் பிள்ளையான பாஜகவின் முழக்கமும் அதுதான். ஆனாலும், திரிபுராவைப் பொருத்தவரை பாஜக தன்னுடைய சித்தாந்தத்தை தேர்தல் வெற்றிக்காக முற்றிலும் காவு கொடுத்திருப்பதை உற்று நோக்கினால் உங்களுக்கே விளங்கும்.

ஆம். சித்தாந்தத்தின் மீது பிடிப்பு கொண்ட மாணிக் சர்க்காரின் உத்திக்கு நேர்மாறான முடிவை எடுத்தது பாஜக. திரிபுராவைப் பிரித்தாள நினைக்கும், வங்கதேசத்தில் இருந்து இயக்கப்படும் ஐபிஎப்டி (Indigenous People’s Front, Tripura – IPFT), என்எல்எப்டி (National Liberation of Fron of Tripura –  NLFT), ஏடிடிஎப் (All Tripura Tigers Force – ATTF) ஆகிய பிரிவினைவாத குழுக்களுடன் பாஜக மிகத்துணிச்சலாக இந்தமுறை கூட்டு வைத்தது.

அந்த முடிவுக்குக் கைமேல் பலனும் கிடைத்துள்ளது. திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 35 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களையும் கைப்பற்றியது என்றால், பாஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரிவினைவாத குழுவான ஐபிஎப்டி கட்சி 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.

தேர்தல் வெற்றியின் மீது பாஜகவுக்கு எத்தனை கோரப்பசி இருந்திருக்கும் என்பதை அதன் கூட்டணி முடிவுகளே பறைசாற்றும்.

 

விந்தையான தேர்தல் முடிவு:

 

தேர்தல் களத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தினால் முன்தினாலும் வெற்றி, வெற்றிதான். அதே கதைதான் இந்த தேர்தலிலும் நடந்துள்ளது. திரிபுராவில் பாஜக 35 தொகுதிகளைக் கைப்பற்றி, 43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது 999093 பேர் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

இரண்டாம் இடம் பிடித்துள்ள ஆளும் இடதுசாரி கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால் அக்கட்சி 992575 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது, 42.7 சதவீதம் பேர் மாணிக் சர்க்கார் ஆட்சி தொடர வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். ஆக, பாஜகவுடன் ஒப்பிடுகையில் சிபிஎம் கட்சி வெறும் 6518 வாக்குகளே குறைவாக பெற்று, சரிவை சந்தித்துள்ளது.

அரை விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை பறிகொடுத்துள்ளார் மாணிக் சர்க்கார். புதிய அரசு அமைவதற்கு வழிவிட்டு இன்று (மார்ச் 4, 2018) அவர் திரிபுரா ஆளுநர் ததகதா ராயிடம் தனது ராஜிநாமா கொடுத்துவிட்டு, மக்களுக்கு நன்றி சொல்லி, விடைபெற்றார் மாணிக் சர்க்கார்.

சித்தாந்தத்தையும், நேர்மையையும் மட்டுமே நம்பி களமிறங்கிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு இந்த தேர்தலில் கிடைத்தது தோல்வியும் அல்ல; வெற்றி மீதான வெறியுடன் சித்தாந்தத்தை மறந்து பிரிவினை கும்பலுடன் கைகோத்து அரை விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்த பாஜகவுக்கு இந்த தேர்தலில் கிடைத்திருப்பது வெற்றியும் அல்ல.

 

– பேனாக்காரன்.