Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்!

பாஜகவின் அதிகாரப் பசி, ஜனநாயகத்தை தொடர்ந்து கேலிக்கூத்தாக்கி வருவது, தேர்தல் அரசியல் மீதான நம்பகத்தன்மையை வெகுசன மக்களிடையே நீர்த்துப் போகச் செய்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டன. திரிபுராவில் மட்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சி 35 தொகுதிகளில் வென்று இருந்தது. ஆனால் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பாஜகவால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.

நாகாலாந்து மாநிலத்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 18 இடங்களிலும், அதனுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இக்கட்சிகளுக்கு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு வழங்க, 32 எம்எல்ஏக்களுடன் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி ஆட்சியைக் பிடித்துள்ளது.

மேகாலயா மாநிலத்தில் தொடர்ச்சியாக இரண்டுமுறை வெற்றி பெற்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 21 இடங்களே கிடைத்தன. தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு வெறும் 2 தொகுதிகளே கிடைத்தன. சுயேட்சைகள் உள்ளிட்ட பிற கட்சிகள் 17 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தன.

மேகாலயாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் கொல்லப்பட்டதால் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஓரிடம் காலியாக விடப்பட்டு, 59 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஏற்கனவே கோவா மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வென்று இருந்தது. ஆனால், இரண்டாம் இடம் பிடித்த பாஜக, அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது. அதேநிலை மேகாலயாவிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் மேலிடத்தின் நம்பிக்கைக்குரிய மூத்த தலைவர்களான அகமது படேல், கமல்நாத் ஆகியோர் உடனடியாக மேகாலயா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களும், அந்த மாநில ஆளுநர் கங்கா பிரசாத்திடம் தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி முதலில் கடிதம் கொடுத்தனர். இது போன்ற தருணங்களில்தானே ஆளுநர், பாஜக மீதான விசுவாசத்தைக் காட்ட முடியும்? கங்கா பிரசாத், காங்கிரஸ் கொடுத்த கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டு, ‘சென்று வாருங்கள்’ என்று மட்டும் சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்.

பாஜவிடம் சென்று யாராவது 21 பெரிதா? 2 பெரிதா? எனக்கேட்டால் இரண்டுதான் பெரிது என சிரிக்காமல் பதில் சொல்லும். எனில், இ….ர…ண்…டு தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜகவோ அல்லது அதன் ஆதரவு பெற்ற கட்சியோதானே மேகாலயாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற புதிய அரசியல் மரபை இங்கும் பதிவு செய்யும் வேலைகளில் இறங்கியது.

அதற்காக யாரை வேண்டுமானாலும், எவ்வளவு கேட்டாலும் கொடுத்து வளைத்துப் போடுங்கள் என்றது பாஜக மேலிடம். இந்த ‘வளைத்தலில்’ கைதேர்ந்தவரான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், அமைச்சருமான ஹிமந்த் பிஸ்வா ஷர்மாவை மேகாலயாவுக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தது பாஜக மேலிடம்.

அதற்காக காங்கிரஸ் கட்சி வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகச் சொல்லிவிட முடியாது. எம்எல்ஏக்களை இழுப்பது என்பது பேரத்தின் சக்தியைப் பொருத்தது. அதில் காங்கிரஸ் கட்சி ரொம்பவே பின்தங்கியிருந்தது. ஆனால், சங்கிகள் இறங்கி வந்து அடித்தார்கள்.

காங்கிரஸ் தவிர யார் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் ஆதரிக்க தயார் என்றுகூறி 19 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடத்தில் இருந்த தேசிய மக்கள் கட்சியை தூண்டிவிட்டது. பெரும்பான்மை ஆதரவு பெறுவதற்காக சுயேட்சைகளை இழுக்கும் வேலைகளையும் பாஜகவே முன்னின்று திறம்பட செய்தது.

ஆட்சியமைக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் தேசிய மக்கள் கட்சி, பாஜக சேர்த்து 21 எம்எல்ஏக்கள் மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட சுயேட்சைகள் ஆதரவுடன் ‘பிராந்திய ஜனநாயக கூட்டணி’ என்ற புதிய கூட்டணியை பாஜக உருவாக்கியுள்ளது. இப்போது பாஜக ஆதரவுடன் கூடிய புதிய கூட்டணி அங்கு ஆட்சி அமைக்க தயாராகிவிட்டது.

இந்த நாட்டில் பாஜக ஆட்சி அல்லது பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அல்லது பாஜக ஆட்டுவிக்கும் பொம்மை ஆட்சி (உதாரணம்: தமிழ்நாடு, பீஹார்) என்ற சித்தாந்தத்தை பாஜக மீண்டும் ஒருமுறை மேகாலயாவில் வலுவாக சாதித்துக் காட்டியிருக்கிறது.

பாஜகவின் இந்த உத்தி, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ரொம்பவே சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. ஒரே இரவில் பணத்தை மதிப்பிழப்பு செய்ததுபோல், 24 மணி நேரத்தில் ஜனநாயகத்தை மதிப்பிழப்பு செய்துவிட்டதாக பலர் கொந்தளித்துள்ளனர். இதற்காக ட்விட்டரில், #DemocracyDemonetised என ஹேஷ்டேக் செய்திருந்தனர்.

நேற்று நாடு முழுவதும் டிரெண்டிங் ஆனதில் ‘மோடியின் ஜனநாயகம்’ இரண்டாம் இடத்தில் இருந்தது. ட்விட்டரில் பலர் பதிவிட்ட கருத்துகளும் உங்கள் பார்வைக்கு இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

 

 

 

 

பிரபல வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன், ”ஜனநாயக மதிப்பிழப்பு என்பது உண்மைதான். மேகாலயா, கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில தோற்று இருந்தாலும், பாஜகவால் ஆட்சி அமைக்க முடிகிறது. அது அவர்களின் திறமையைக் காட்டுகிறது. அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறது பாஜக. அதனிடம் எந்த வித ஜனநாயக நியமங்களும், தர்மமும் இல்லை,” என்று காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

 

 

 

”வெறும் இரண்டு எம்எல்ஏக்களை மட்டும் வைத்துக்கொண்டு மேகாலயாவில் தன்னுடைய நிழல் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டது பாஜக. ஏற்கனவே மணிப்பூர், கோவாவிலும் இதே வழிமுறைகளையே கையாண்டது. மக்களின் தீர்ப்புக்கு அக்கட்சி மதிப்பளிக்கவில்லை. பணத்தைக் கொண்டு சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துக்கொண்டது பாஜக,” என்று சாடியிருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி.

பாஜகவின் இந்த உத்தி, இப்போது அல்ல. கடந்த 2014 தேர்தலில் அருண் ஜெட்லி, ஸ்மிருதி இராணி ஆகியோர் தோல்வி கண்டிருந்தனர். ஆனால், அவர்கள் இருவரையுமே கேபினட் அமைச்சர்களாக்கி அழகு பார்த்திருக்கிறது பாஜக மேலிடம். மக்கள் வேண்டாம் என நிராகரித்தவர்களை அமைச்சர் பதவியில் அமர்த்தும்போது, அங்கே ஜனநாயகமும், மக்கள் தீர்ப்பும் தானாகவே மதிப்பிழந்து போய்விடுகிறது. இந்திய தேர்தல் முறையில் உள்ள மிகப்பெரும் முரண் இது.

மேகாலயாவில் சுயேட்சை எம்எல்ஏக்களை விலை கொடுத்து பாஜக வாங்கியதை சித்தரிக்கும் விதமாக பலரும் பகடியாக கார்ட்டூன்களை வெளியிட்டுள்ளனர். ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட்டில் பாஜக தலைவர் அமித் ஷா டிராலி வண்டியை நகர்த்திச் செல்வது போலவும், அங்கே விற்பனைக்கு தயார் நிலையில் சுயேட்சை எம்எல்ஏக்கள் நின்று கொண்டிருப்பதுபோலவும், அவர்களின் அருகில் அமித் ஷா நிற்பது போலவும் சித்தரித்துள்ளனர்.

”இதுதான் ஆட்சி அமைக்கும் நடைமுறை எனில் தேவையில்லாமல் ஏன் தேர்தலை நடத்த வேண்டும்? எதற்காக செலவு செய்ய வேண்டும்? பேசாமல் பூவா? தலையா? போட்டுவிடலாமே…?” என்று பத்மராணி இண்டியன் என்பவர் குத்தலாக பதிவிட்டுள்ளார்.

 

 

 

”பாஜக என்பது தார்மீக நெறிகள் திவாலான ஒரு கட்சி. அதன் நோக்கம், அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே. அதனிடம் அறம் என்பது சிறிதளவும் இல்லை. மேகாலயாவில் இரண்டு சீட் வென்றதை வெட்கமே இல்லாமல் புகழ்பாடிக் கொண்டிருக்கிறது,” என்கிறார் சீமா.

 

 

 

சுபம் என்ற பதிவர், மோடி என்ற பெயருக்கு புது விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது அவருடைய பெயரை ஆங்கிலத்தில் எம் ஓ டி ஐ என்று எழுதி, ”மர்டரர் ஆஃப் டெமக்ரடிக் இண்டியா” (M – Murderer O – of D – Democratic I – India) என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஜனநாயக இந்தியாவின் கொலைகாரர் என்று கடுமையாக சாடியுள்ளார்.

 

 

 

டெட் ஆஸ் டுடு என்ற பதிவர், ”தேசத்தந்தையைக் கொன்றது போன்றதுதான் மேகாலயா விவகாரமும். ஆர்எஸ்எஸ்காரர்கள் எப்போதும் ஜனநாயகத்திற்கும், பன்மைத்துவத்திற்கும் எதிரானவர்கள். அவர்கள் நீதிபதிகளைக் கொல்வார்கள்; சிந்தனையாளர்களைக் கொல்வார்கள்; சாமானியர்களைக் கொல்வார்கள்; அவர்களுக்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டும்தான் இலக்கு,” என்கிறார்.

 

 

 

”பணபலத்தின் உதவியுடன், ஜனநாயகத்தின் அனைத்து விதிகளையும் தன் இஷ்டத்திற்கு வளைத்துவிட பாஜக வெறிகொண்டு அலைகிறது. பாஜகவின் இந்த எழுச்சி, நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கு மிகவும் ஆபத்தானது. உண்மையில் நாடு இப்போது அபாய நிலையில் இருக்கிறது,” என்கிறார் குக்கி44.

 

 

 

சையது மக்பூல் என்பவர், ”ஜனநாயகம் என்பது மக்களால் ஆளப்படுவது. ஆனால், அந்த சொல்லை நீக்கிவிட்டு, ”பணத்தால் + ஹிட்லர்த்துவ கட்சியால் + சங்கி ஆளுநர்களால்” என்று சேர்த்துக் கொள்ளலாம் என அதிருப்தியுடன் பதிவிட்டுள்ளார்.

மக்களின் அபிமானத்தை இழந்தாலும், செயற்கையாக அத்தகைய அபிமானத்தை உருவாக்கிக் கொள்வது பாஜகவுக்கு நன்றாகவே கைவரப்பெற்றிருக்கிறது. அந்த உபாயம் எல்லா காலத்திற்கும் உதவாது. ஒரு நாள், காவிகளின் சாயம் வெளுக்கும்.

 

– அகராதியார்.