Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தலித் வாக்காளர்கள்தான் டார்கெட்! நாமக்கல்லில் திமுக பரபர… அதிமுக கொர்ர்…#ParliamentElection

 

பதினாறாவது மக்களவையின் ஆயுள் காலம் 2019, மே மாதத்துடன் முடிவு பெறுகிறது. மார்ச் முதல் வாரத்தில், பதினேழாவது மக்களவை தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவும், கருணாநிதி இல்லாமல் திமுகவும் சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் இது என்பதால், தமிழக தேர்தல் களம் முன்னெப்போதையும் விட சூட்டைக் கிளப்பும்.

 

திமுக வேகம்

ஆளும் அதிமுகவைக் காட்டிலும் திமுக தரப்பு, மக்களவை தேர்தல் பணிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரொம்பவே வேகம் காட்டி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம், மாவட்டந்தோறும் நிர்வாகிகள் கருத்துக்கேட்பு கூட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் வரை நடத்தி முடித்துவிட்டது.

 

தேர்தல் நெருக்கத்தில் மக்களைச் சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது எல்லாம் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறைதான் என்றாலும், இம்முறை திமுக தலைமை, தேர்தல் பொறுப்பாளர்களுக்கு வகுத்துக் கொடுத்திருக்கும் திட்டங்கள் ரொம்பவே ஸ்பெஷலானது. வாக்காளர்களை நுணுகி அணுகும் வகையில், ஒரு பகுப்பாய்வு முறையை வகுத்துக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.

 

நாமக்கல் மக்களவை தேர்தல் களம்
எஸ்ஆர்.பார்த்திபன்

நாமக்கல் மக்களவை தேர்தல் களத்தில் நாம் சந்தித்த நிகழ்வுகளும், திமுகவுக்குள் இத்தனை மாற்றங்களா? என்றே ஆச்சர்யம் கொள்ளச் செய்தது.

 

நாமக்கல் மக்களவை தொகுதி பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏவும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான எஸ்ஆர்.பார்த்திபன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

 

கரம் கோக்க வைத்தனர்

 

கோஷ்டி கானம் பாடிக்கொண்டிருந்தால், கரை சேர முடியாது என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள். இவர்கள் செய்த முதல்வேலையே, இருவேறு துருவங்களாக இருப்பவர்களை ஒன்று சேர்த்ததுதான். நாமக்கல் மாவட்ட செயலாளர் காந்திசெல்வனையும், அவருக்கு எதிராக கம்பு சுழற்றி வந்த முன்னாள் செயலாளர் பார் இளங்கோவனையும் ஒன்றாக கரம் கோக்க வைத்தனர்.

 

புது அணுகுமுறை

 

திமுக தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத புது அணுகுமுறையையும் இவர்கள் கையாண்டு வருகின்றனர். என்னவென்றால், மாவட்டம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி என்ற அளவில் மட்டுமே நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்திலோ ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வார்டுவாரியாக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுகின்றனர்.

 

இப்படி நுட்பமாக தேடிச்சென்று பேசுவதால், ஒவ்வொரு கட்சிக்காரரின் மனநிலை மட்டுமின்றி கட்சி சாராத மக்களையும் சந்திக்க முடிகிறது என்கிறார்கள் திமுகவினர்.

 

திண்ணை பிரச்சாரம்

நாட்டாமங்கலம், கல்யாணி, கண்ணூர், களங்காணி, புதுச்சத்திரம் என பட்டியல் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திண்ணை பிரச்சாரக் கூட்டங்களையும் பொங்கலூர் பழனிசாமி, எஸ்ஆர்.பார்த்திபன், காந்திசெல்வன் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

 

முக்கிய தலைகளுக்கு மரியாதை

 

சின்னச்சின்ன கிராமங்களிலும் பயணிக்கும் இவர்கள், அங்குள்ள திமுக வார்டு செயலாளர், ஊரின் முக்கிய தலைகளுக்கும் சால்வை அணித்து மரியாதை செலுத்துகின்றனர். முன்பெல்லாம் இதற்கான செலவை அங்குள்ள கட்சிக்காரர்கள் தலையில் கட்டிவிடும் போக்கு இருந்தது. அந்த நிலை இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது.

 

எங்கோ மூலையில் இருக்கும் ஊராட்சி மன்ற வார்டு செயலாளர்களுக்கு அணிவிப்பதற்காக சால்வை, மலர் மாலைகள், பூங்கொத்துகள் வரை அனைத்தையும் தேர்தல் பொறுப்பாளர்களே கையோடு எடுத்துச் சென்றுவிடுகின்றனர். இதெல்லாமே திமுகவினருக்கே கூட கொஞ்சும் புதுசுதான்.

 

கோயிலடியோ, மரத்தடி நிழலோ அங்கேயே அவர்கள் பாய்களை விரித்துப்போடச் சொல்லி தரையில் அமர்ந்து தேர்தல் வேலைகளைப் பேசுகின்றனர்.

 

காலை 8 மணிக்கெல்லாம் கிராமங்களுக்கு படையெடுக்கும் திமுக தேர்தல் பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் இரவு 11 மணி வரை மக்கள் சந்திப்புக் கூட்டங்களில் பங்கேற்கின்றனர். மைக் செட்டுக்கெல்லாம் இடமில்லை. உரத்துப் பேசுகிறார் பார்த்திபன்; அவருக்கு வழிவிட்டு அடக்கி, ஆனால் ஆழமாக பேசுகிறார் பொங்கலூரார்.

 

தனித்தொகுதிகள்
பொங்கலூர் பழனிசாமி

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள் சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியிருக்கின்றன. இவற்றில் ராசிபுரமும், சேந்தமங்கலமும் தனித்தொகுதிகள். இந்த ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் பரமத்தி வேலூர் தவிர மற்ற ஐந்தில் அதிமுகவே வெற்றி பெற்றிருக்கிறது.

 

ஜெயலலிதா எனும் வசீகர ஆளுமை இல்லாத இந்நிலையில், மக்களை அதிமுக அளவுக்கு இறங்கிச் சென்று சந்திப்பது மட்டுமே திமுக கரையேற ஒரே வழி என்பதை உணர்ந்திருப்பதாக சொல்கின்றனர் நாமக்கல் மாவட்ட உடன்பிறப்புகள்.

 

தரையில் அமர்ந்து…

 

இதுவரை நாமக்கல் மாவட்ட திமுக, ஒருவித எஜமானத்தனத்துடனேயே மக்களை அணுகி வந்த நிலையில், ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் தரையில் அமர்ந்து பேசுவது, பெரிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது.

 

நாமக்கல் மக்களவை தொகுதி வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டியல் சமூகத்தினர்தான். அவர்களின் ஆதரவு இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில்தான் எங்கெல்லாம் பட்டியல் சமூகத்தினர் திரளாக வசிக்கின்றனரோ அங்கெல்லாம் தேடித்தேடிச் சென்று சந்தித்து கைகுலுக்கி வருகின்றனர்.

 

நாட்டாமங்கலம் கிராமத்தில் எஸ்ஆர். பார்த்திபன் பேசுகையில், அங்குள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நூறுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.

 

அவர்கள், ”எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தவரைக்கும் அவங்களுக்குதாங்க நாங்க ஓட்டுப் போட்டுக்கிட்டு வந்தோம். ‘அம்மா’ இறந்த பிறகு அதிமுககாரங்களே இங்க யாரும் வந்து பார்க்கலீங்க. இப்போதான் முதல்முறையாக நீங்கள்லாம் வந்திருக்கீங்க,” என்றதை திமுக பொறுப்பாளர்களே சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

குடும்பத்தில் ஒருவராக தளபதி

 

அதற்கு எஸ்.ஆர். பார்த்திபன், ”ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சி கலகலத்துவிட்டது. உங்களுக்கு என்றென்றைக்கும் அண்ணனாகவும், தம்பியாகவும் குடும்பத்தில் ஒருவராகவும் நம் தளபதி (மு.க.ஸ்டாலின்) இருப்பார். எங்களை நம்பி வாங்க,” என்று கையெடுத்துக் கும்பிட்டதை மக்களும் கைத்தட்டி ஆரவாரித்தனர்.

 

ஒரு லட்சம் பேர்

மார்ச் மாதத்திற்குள் நாமக்கல் மக்களவை தொகுதியில், மாற்றுக்கட்சிகளில் இருந்து ஒரு லட்சம் பேரை திமுகவில் இணைப்பது, 1100 இடங்களில் கட்சிக் கொடியேற்றுவது, ஆயிரமாவது கொடியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஏற்ற வைப்பது என மாஸ்டர் பிளான் போட்டு, களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.

 

மக்களவை தேர்தலுக்கான வேலைகள் என்றாலும், செல்லும் இடங்களில் எல்லாம் ‘அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம்’ என்ற முழக்கத்தையும் முன்வைக்கின்றனர். அதற்கு கணிசமான ஆதரவும் கிடைத்து வருகிறது.

 

நாமக்கல் மக்களவை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுள் ஒருவரான எஸ்.ஆர்.பார்த்திபன், மாவட்ட செயலாளர் காந்திசெல்வன் ஆகியோரிடம் பேசினோம்.

 

திமுகவுக்கு வெற்றி

 

”திமுக தொண்டர்கள், பொதுமக்களிடம் பாரபட்சமின்றி சமமாக நடந்து கொள்ள வேண்டும். ஆடம்பரத்தை தவிர்த்து, அவர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்பதுதான் தளபதியின் கட்டளை. அதைத்தான் களத்தில் செயல்படுத்துகிறோம். போகும் இடங்களில் எங்களுக்கு நாற்காலிகள் போடுமாறுகூட கேட்பதில்லை. அவர்களுடன் தரையிலேயே அமர்ந்துதான் பேசுகிறோம்.

 

கொங்கு மண்டலத்தில் 57 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 7 தொகுதிகளில் மட்டுமே கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக வெற்றி பெற்றிருக்கிறது. வரும் மக்களவை தொகுதிகளில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றித்தேடித்தர வேண்டும் என்பதுதான் இலக்கு.

 

பெரிய கிராமங்களில் எழுபது, எண்பதுகளில் ஏற்றப்பட்ட கொடிக்கம்பங்கள்தான் இன்னும் இருக்கின்றன. சிறு சிறு கிராமங்களிலும்கூட இப்போது நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அங்கெல்லாம் விரைவில் திமுகவின் கொடிகள் பட்டொளி வீசி பறக்கும்,” என்றனர்.

 

பட்டியல் சமூக வாக்காளர்களை அள்ளிவர திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கம் வகிக்கிறது. என்றாலும், திமுக கூட்டணியில் வி.சி. இடம் பெற்றால், கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் கட்சிக்குள்ளேயே சலசலப்புகள் இருந்து வருகின்றன. திமுக தலைமையும் அதை கவனமாக கேட்டு வருகிறது.

 

அதனால்தான், பட்டியல் சமூக வாக்குகளை திமுகவே நேரடியாக கவர்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாகவும் ஒரு தகவல் உலா வராமல் இல்லை.

 

இலக்கு
காந்திசெல்வன்

”பட்டியல் சமூகத்தினர் வாக்குகளை இலக்கு வைத்து செயல்படுகிறீர்களா?,” என்று காந்திசெல்வனிடம் கேட்டோம்.

 

”எங்கள் தலைமை அப்படிப்பட்ட இலக்கை வைத்து செயல்படவில்லை. ஆனால், எங்கள் தொகுதியில் பட்டியல் சமூகத்தினரில் பெரும்பகுதியினர் அதிமுகவினராக இருக்கின்றனர்.

 

ஜெயலலிதா மரணத்திற்குப்பிறகு, பட்டியல் சமூகத்தினரின் ஒரே நம்பிக்கை முகமாக தளபதிதான் இருப்பார் என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்தி வருகிறோம். ஒரு காலத்தில் அவர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் திமுகவுக்குத்தானே இருந்தது? அதை இந்த தேர்தலில் மீட்டெடுப்போம். அடுத்த 25 ஆண்டுக்கான வேலைகளை இப்போதே செய்து வருகிறோம்,” என்றார்.

 

திமுகவின் தேர்தல் பணிகள் ஜெட் வேகமெடுத்துள்ள நிலையில், நாமக்கல் மக்களவை தேர்தல் களத்தில் அதிமுக இன்னும் எட்ட நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அக்கட்சியினரே ஆச்சர்யமாகத்தான் பார்க்கின்றனர்.

 

– பேனாக்காரன்.