Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ப.பா.மோகன் பராக்… பிறழ் சாட்சிகள் ‘கிலி!’ சுவாதியிடம் மீண்டும் விசாரிக்க முடிவு!!#Gokulraj #day15

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அந்தர் பல்டி அடித்த சுவாதி, அவருடைய தாயார் உள்ளிட்ட முக்கிய சாட்சிகள் சிலரிடம் மறு விசாரணை நடத்த சிபிசிஐடி தரப்பு முடிவு செய்திருப்பது, யுவராஜ் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

பொறியியல் பட்டதாரி:
கோகுல்ராஜ்

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் (23), கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. படித்தபோது, தன்னுடன் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் கோகுல்ராஜ் நெருக்கமாக பழகி வந்தார்.

 

தலை துண்டிக்கப்பட்ட நிலையில்…

 

கல்லூரி படிப்பு முடிந்த பிறகும்கூட சில வேளைகளில் அவர்கள் சந்தித்து வந்துள்ளனர். அப்படி கோகுல்ராஜ், 23.6.2015ம் தேதி சுவாதியைச் சந்திக்க நாமக்கல்லுக்குச் சென்றிருந்தார்.

 

பின்னர் இருவரும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். அன்று இரவு கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. மறுநாள் மாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவருடைய சடலம் கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர்.

 

ஆணவப்படுகொலை:

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல்தான், அவரை ஆணவப்படுகொலை செய்திருக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்தன. அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவுகள் மூலம், கோகுல்ராஜ் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

 

சாட்சிகளிடம் விசாரணை:
யுவராஜ்

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

 

இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. எதிரிகள் தரப்பில் யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

 

இதுவரை அரசுத்தரப்பில் சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி மட்டும் ஆஜராகி வந்த நிலையில், கோகுல்ராஜின் தாயார் சித்ரா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், அரசுத்தரப்பு கூடுதல் வழக்கறிஞராக பவானி பா.மோகன் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஜன. 5ம் தேதி முதல் அவர் தன்னை இந்த வழக்கில் நீதிமன்ற விதிகளின்படி இணைத்துக் கொண்டார்.

 

திருச்செங்கோடு விஏஓ:
விஏஓ மணிவண்ணன்

இந்நிலையில், அரசுத்தரப்பு சாட்சியான திருச்செங்கோடு விஏஓ மணிவண்ணன், வியாழக்கிழமையன்று (ஜனவரி 10, 2019) நீதிபதி இளவழகன் முன்னிலையில் சாட்சியம் அளித்தார்.

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சதீஸ், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகர், அவருடைய மனைவி ஜோதிமணி உள்ளிட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறித்தும், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் குறித்தும் சாட்சியம் அளித்தார்.

 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றிய செல்போன்கள் இவைதானா? என்று விஏஓ மணிவண்ணனிடம் காட்டி, ஊர்ஜிதம் செய்து கொண்டார். அவற்றை அரசுத்தரப்பு சாட்சிக் குறியீடு செய்யும்படியும் நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்தார்.

எதிர்தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை:
வழக்கறிஞர் அரவிந்த்

அப்போது யுவராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் குறுக்கிட்டு, ‘இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27ன் கீழ், கைதான நபர்கள் யாரும் தாங்கள் செல்போனை மறைத்து வைத்திருந்ததாக ஒப்புதல் வாக்குமூலத்தில் சொல்லாதபோது,

 

அதை சாட்சி குறியீடு செய்யத் தேவையில்லை,’ என்று ஆட்சேபனை தெரிவித்தார். அதற்கு நீதிபதி இளவழகன் சற்று கடுமையாக, அதையெல்லாம் நீங்கள் ஆர்கியூமென்டில் (விவாதம்) பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.

 

சலசலப்பு:

 

அப்போது கூடுதல் அரசுத்தரப்பு வழக்கறிஞரான பவானி பா.மோகன் எழுந்து, எதிர்தரப்பு வழக்கறிஞரின் ஆட்சேபனையை ஏற்கக்கூடாது என்று தெரிவிக்கிறார். அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டு, எதிர்தரப்பு வழக்கறிஞரின் ஆட்சேபனையை நிராகரித்தார். இதனால் நீதிமன்ற அவையில் ஓரிரு நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.

வழக்கறிஞர் பவானி பா.மோகன்

எதிரிகளிடம் இருந்து நான்கு மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக விஏஓ மணிவண்ணன் கூறினார். அவற்றில் மூன்று வாகனங்கள் மட்டுமே நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை அவர் அடையாளம் காட்டினார். நீதிபதி இளவழகன் தன் இருக்கையில் எழுந்து வந்து, அடையாளம் காட்டப்பட்ட வாகனங்களை பார்த்தார்.

 

வழக்கறிஞர் பவானி பா.மோகன்

 

எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் நீதிமன்றத்திற்கு கொண்டு வராததால், சாட்சியிடம் நாளை (இன்று, ஜனவரி 11, 2019) தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றுகூறி, விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

வாகனங்களை அடையாளம் காட்டும் வி.ஏ.ஓ.

யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ நீதிமன்றத்திற்கு வராததால், அரசுத்தரப்பு சாட்சிகளிடம் வேறு நாளில் குறுக்கு விசாரணையை வைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகி வெற்றிபெற்று வரும் வழக்கறிஞர் பவானி பா.மோகன், இந்த வழக்கில் இணைந்த பிறகு சிபிசிஐடி மற்றும் கோகுல்ராஜ் குடும்பத்தினருக்கும் பெரும் நம்பிக்கை பிறந்துள்ளது. அதன் தாக்கம் உடனடியாகவே வெளிப்பட்டது.

 

சுவாதியிடம் மறு விசாரணை:

 

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் கோகுல்ராஜின் தோழி சுவாதியின் வாக்குமூலத்தை ரொம்பவே நம்பியிருந்தனர். கடந்த 10.9.2018ம் தேதி சாட்சியம் அளித்த அவர், ‘கோகுல்ராஜை உடன் படித்த மாணவர் என்ற வகையில் மட்டுமே தெரியும்’ என்றும், ‘கல்லூரி முடிந்த பிறகு அவரை சந்தித்ததே இல்லை’ என்றும் தடாலடியாக அந்தர் பல்டி அடித்தார்.

 

கோகுல்ராஜ் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் 23.6.2015ம் தேதியன்று தான் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குப் போகவே இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். குவிமுச பிரிவு 164ன் கீழ் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஏற்கனவே சுவாதி கூறியிருந்த வாக்குமூலத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வகையில் பிறழ் சாட்சியம் அளித்தார். அவருடைய தாயார் செல்வியும் பிறழ் சாட்சியமாக மாறினார்.

சுவாதி

இதையடுத்து, பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி, அவருடைய தாயார் செல்வி, யுவராஜூக்கு கார் வாங்கிக் கொடுத்த புரோக்கர் செல்வி என்கிற செல்வரத்தினம், யுவராஜ் வைத்திருந்த காரின் முன்னாள் உரிமையாளர் ரமேஷ்குமார், எஸ்டிடி பூத் அதிபர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் மீண்டும் மறு விசாரணை நடத்த அரசுத்தரப்பு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜன. 10) மனுத்தாக்கல் செய்துள்ளது.

 

மேலும், கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அவருடைய அண்ணன் கலைசெல்வன் ஆகியோரிடமும் மறு விசாரணைக்கு அனுமதி கேட்டிருக்கிறது சிபிசிஐடி போலீஸ்.

 

யுவராஜ் தரப்பு அதிருப்தி:

 

முக்கிய சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட மனுத்தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவிமுச சட்டம் பிரிவு 311ன் படி, வழக்கில் தேவைப்படின் சாட்சிகளை திரும்ப அழைத்து விசாரிக்க முடியும் என்பதால் சுவாதி உள்ளிட்டோர் கிலியில் உள்ளனர். இதனால் யுவராஜ் தரப்பும் ரொம்பவே அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

– பேனாக்காரன்.