Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழகம்: அடுத்தது ஆட்சி கலைப்புதான்!; காவிகள் திட்டம் தயார்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், உள்கட்சி பூசல் உள்ளிட்ட பிரச்னைகளால் தமிழகத்தில் ஆளும் கட்சி ஸ்திரமற்ற நிலையில் இருப்பதை தொடர்ந்து, இந்த ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் வேலைகளில் காவி கோஷ்டி மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை கைப்பற்றுவதில் ‘பணிவு புகழ்’ ஓ.பன்னீர்செல்வத்துக்கும், மன்னார்குடி கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட போட்டியால் அக்கட்சிக்குள் கடும் பூசல்கள் உருவாயின. ஒருகட்டத்தில், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூட அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடும் காமெடிகளும் அரங்கேறின.

இப்படி நாளொரு பரபரப்பும், மணிக்கொரு ‘பிரேக்கிங் நியூஸ்’களுமாக தமிழக அரசியல் களம் இருந்த நிலையில், ஊழல் வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். கிடைத்த ‘கேப்’பில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும் ஆனார். எல்லாம் சுமூகமாக முடிந்துவிட்டதாக சசிகலா தரப்பு கருதியது. அதற்கேற்ப, ஆட்சி நிர்வாகம் சீராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்பதை காட்டுவதற்காக குடிமராமத்து பணிகள், பொதுப்பணித்துறை பணிகளில் முதல்வரும் கவனம் செலுத்தினார்.

ஆனால், தமிழகத்தில் காலூன்ற அதிமுக மீது குதிரை சவாரி செய்வதும், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் போன்ற விசுவாசிகள்தான் தோதாக இருப்பார்கள் என்றும் கருதிய பாஜக, அவரை வைத்தே கட்சிக்குள் அடுத்தடுத்த நகர்வுகளை முன்னெடுத்தது. ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் ஒரே அணியாக ஐக்கியமானதற்கும் பாஜகவின் கதை, திரைக்கதை வசனம், இயக்கம்தான் காரணம்.

இதையெல்லாம் சற்றும் எதிர்பாராத சசிகலா பெங்களூர் சிறைக்குள் இருந்தவாறே, டிடிவி தினகரனுக்கு சில அஸைன்மென் டுகளை கொடுக்க, அவரும் தன் பங்கிற்கு 19 எம்எல்ஏக்களை சேர்த்துக்கொண்டு ஆட்சிக்கு எதிராக கம்பு சுழற்றினார். எடப்பாடி பழனிசாமியை தூக்கிவிட்டு, தலித் சமூகத்தைச் சேர்ந்தவரும், சபாநாயகருமான தனபாலை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்றெல்லாம் கூவினார்.

மன்னார்குடி கும்பலுக்கு திடீரென்று தலித்துகள் மீது பாசம் வந்துவிட்டதாக கருதிவிடக்கூடாது. தலித் சமூகத்தைச் சேர்ந்த 30 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். அவர்களை தங்கள் தரப்புக்கு ஆதரவாகவும், இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்புக்கு எதிராகவும் கொம்பு சீவிவிடவே இத்தகைய சூழ்ச்சி என்பதாகத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யாரை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்களோ, இப்போது அதே சபாநாயகர் தனபால்தான் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை, கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்து அதிரடித்துள்ளார். அவர் பக்கம் இருந்த ஜக்கையன் சில நாள்களுக்கு முன்பு, இபிஎஸ் அணிக்கு திரும்பியதால் அவர் தலை மட்டும் தப்பியது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட சூட்டோடு, தமிழகத்தில் 18 சட்டப்பேரவை இடங்கள் காலியாக உள்ளதாகவும் அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

இந்த வேகம், இதற்குமுன் ஒருபோதும் ஆட்சியாளர்களிடம் எதிர்பார்த்ததில்லை. ஆளுங்கட்சியின் அதிரடியின் பின்னணியில் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனின் ஆலோசனைகளும் உள்ளதாக கூறப்படுகிறது. 18 பேரை தகுதியிழப்பு செய்தது, கட்சித்தாவல் தடைச் சட்ட விதிப்படி பொருந்தாது என்று முன்னாள் சபாநாயகர்கள் சேடப்பட்டி முத்தையா, ஆவுடையப்பன் போன்றோர் சொல்வது, சபாநாயகர் தனபாலும் அறியாதவர் அல்ல. ஆனால், டிடிவி தினகரன் தரப்பை திணறடிக்க இதுதான் உச்சக்கட்ட ஆயுதம் என்பதும், அதன்மூலம் ஆட்சியின் ஆளுமையைக் காட்டவும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது எடப்பாடி பழனிசாமி அரசு.

ஒருவேளை, அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு (ஃபுளோர் டெஸ்ட்) நடத்தப்பட்டால், அதில் எளிதில் வெற்றி பெறுவதற்கு வசதியாகவே 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட ஒரு காலியிடம் போக, தமி- ழகத்தில் மொத்தம் 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் அதிமுக மற்றும் கூட்டணியைச் சேர்ந்த 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரை கழித்தால் அதிமுக கூட்டணியின் பலம் 117 ஆகும். ஆட்சி நடத்துவதற்கான பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால், 18 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், தமிழக சட்டப்பேரவையின் பலம் 215 என்றாகிறது. அதில் பாதியைவிட ஒரு எம்எல்ஏ கூடுதலாக இருந்தாலே போதும் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பிழைத்துவிடும். அதாவது 108 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தாலே போதுமானது.

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக செப். 20ம் தேதி (நாளை) வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழக ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவ் நேற்று (செப். 18) திடீரென்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார். அவரை சந்தித்த கையோடு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தையும் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பு, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான இரு வழக்குகளும் உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. ஒருவேளை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும்பட்சத்தில், மொத்தப் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்குமேல் பலம் உள்ளதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமி தனது அரியணையைக் காப்பாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், சட்டப்பேரவையின் முழு பலமான 234ல் 118 என்ற ‘மேஜிக் நம்பரை’ பேரவை இழந்து விடுகிறது. அதையே காரணம் காட்டி, தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பை முன்னெடுத்து, குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் பாஜக தயாராகிவிட்டதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கும் ஒரு முன்னுதாரணம் உள்ளது. கடந்த 1988ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜானகி ராமச்சந்திரனுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது சபாநாயகராக இருந்த பி.ஹெச்.பாண்டியன், ஜெயலலிதா ஆதவு எம்எல்ஏக்கள் 33 பேரை தடாலடியாக தகுதிநீக்கம் செய்தார். ஏற்கனவே திமுக எம்எல்ஏக்கள் 10 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர். அதன் பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி ராமச்சந்திரன் 98 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்றார். ஆனாலும், அது முழு பெரும்பான்மை இல்லை எனக்கூறி, அடுத்த நாளே ஆட்சியை கலைத்தது மத்திய காங்கிரஸ் அரசு. அதன்பிறகு ஓராண்டு கழித்தே, சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து, திமுக மகத்தான வெற்றியை பதிவு செய்தது.

அதே உத்தியை இப்போது பாஜக கையாள தயாராகிவிட்டது. ஆட்சிக்கலைப்பு வெற்றிகரமாக நடந்தால், அதற்குக் காரணம் எதிர்க்கட்சிகள் சந்தேகப்படுவதுபோல் பாஜக காரணமாக இருக்க முடியாது; அதிமுக உள்கட்சி பூசல்களே ஆட்சிக்கவிழ்ப்புக்குக் காரணமாகி விட்டதாக பாஜக ‘லாஜிக்’ பேசும். அதனால்தான் டிடிவி தினகரன் தரப்பு, எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தபோதும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெறும் புன்னகையை மட்டுமே பதிலாக தந்து, மும்பைக்கு பறந்துவிட்டார். டெல்லி ‘பிக்பாஸ்’கள் ஓபிஎஸ், இபிஎஸ் முதுகுகளை தடவுவது தட்டிக்கொடுப்பதற்கல்ல; குத்துவதற்காகத்தான் என்பதை மறக்கும் அளவுக்கு அதிகார போதையும், பதவி வெறியும் அவர்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை ஓராண்டுக்கு மேல் நீட்டிப்பதற்கான வழிவகைகளை செய்யவும் பாஜக தயங்காது. 2019 மக்களவை தேர்தலுக்குள் தமிழகத்திற்குத் தேவையான பல நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் பாஜக வியூகம் வகுத்துள்ளது. அதன்மூலம் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று, தேர்தலை சந்திக்கவும் திட்டம் வகுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் தமிழகத்தில் தொழில் நகரம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி சொன்னதும்கூட தேர்தல் வியூகமேயன்றி, தமிழக நலனுக்காக என்று மேலோட்டமாக எண்ணிவிடக்கூடாது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு, அதைத்தொடர்ந்து 18 அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றெல்லாம்கூட பேச்சு எழுந்தது. அப்போதே தமிழக அரசை கலைத்துவிடவும் பாஜக துடித்தது. என்ன காரணத்தாலோ அப்போது பின்வாங்கிய பாஜக, இப்போது தமிழக ஆட்சியைக் கலைப்பதற்கான முழுமையான திட்டத்துடன் களமிறங்கி விட்டதாகவே நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.