Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முதுகெலும்பற்ற அடிமைகளும் மூளையற்ற பக்தாள்களும்!

அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு நடந்து வரும் ஆளுநரின் ஆய்வுப்பணிகளுக்கு பல்வேறு மட்டத்திலும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தமிழக அரசை ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாரதியார் பல்கலைக்கழகத்தின பட்டமளிப்பு விழாவிற்காகக் கோயம்புத்தூருக்குச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பட்டங்களை வழங்கியதோடு ராஜ்பவனுக்கு திரும்பி இருக்கலாம். என்ன நினைத்தாரோ, திடீரென்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அரசின் நலத்திட்டப்பணிகள் குறித்த ஆய்வு என்ற பெயரில் கோதாவில் குதித்தார்.

பாஜகவை சும்மாவே தெறிக்கவிடும் எதிர்க்கட்சிகள் விடுவார்களா?. அக்கட்சியை கடும் விமர்சனங்களால் பிராண்டி எடுத்து வருகிறார்கள். ‘தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஆளுநர் ஆய்வு செய்கிறார். அதில் ஒன்றும் தவறு இல்லை’ என்று பாஜக தலைவர் தமிழிசை சொல்ல, அதில் இருந்தே லீடு எடுத்து பேசியிருக்கிறார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமி அரசை முதலில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லுங்கள் என்று சீற்றம் காட்டினார் மு.க.ஸ்டாலின். மேலும், இந்த பொம்மை அரசை ஆளுநர் மூலம் நிர்வாகம் செய்ய பாஜக முயலுவதாகவும் கூறியுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் இருக்கும்போது ஆளுநர் இவ்வாறு அதிகாரிகளுடன் ஆய்வு செய்வதன் மூலம் மாநில சுயாட்சி உரிமைகளில் தலையிடுவது போலாகும் என்று இடதுசாரி கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன.

டிடிவி தினகரன்கூட ஆளுநரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து உள்ள நிலையில், தமிழக அமைச்சர்களான ஜெயக்குமார், வேலுமணி, அன்பழகன் ஆகியோர் வரவேற்றும், இதில் தவறேதும் இல்லையே என்றும் முட்டுக்கொடுத்து பேசியிருக்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலுமே மாநில அரசின் (யூனியன் பிரதேசங்கள் நீங்கலாக) உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் நேரடியாக ஆய்வு செய்வது குறித்து குறிப்பிடப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் நடப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேர்மாறானது.

இது ஒன்றும் பாஜகவுக்கு புதிதல்ல. லோக்பால், காவிரி மேலாண்மை வாரியம், ஆதார் போன்றவற்றில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே பாஜக மதிக்காதபோது, அரசியல் சாசன சட்டத்தையும் மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் என்ன இருக்கிறது?

டெல்லி, புதுச்சேரியில் ஆளுநர்கள் வரம்பு மீறி செயல்பட்ட மாநில நிர்வாகத்தை மிரட்டிப் பணியவைத்ததுபோல் தமிழகத்திலும் அதற்கான வேலைகளை துவங்கியுள்ளதாகவே பன்வாரிலால் புரோகித்தின் செயல்பாடுகளைக் கருத வேண்டியிருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மத்திய அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளது. அதை ஆளுநர் ஆய்வு செய்கிறார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் சொல்வது உண்மையாகவே இருந்தாலும், உத்தரபிரதேசம், பீஹார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது. அங்கெல்லாம் ஆளுநர்கள் இதுபோல் மூக்கை நுழைப்பதில்லையே ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்னும் சிலர், பிரதமரின் பணிகளை குடியரசுத்தலைவர் ஆய்வு செய்யலாமே என்றும் கேலியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவையை குறிவைத்து கோதாவில் இறங்கியது யதேச்சையாக நடந்ததுபோல் தெரியவில்லை. கோவையில் சில பகுதிகளில் பாஜகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுக்கும் மேலாகவே கோவையின் முக்கிய வணிகப் பகுதிகளில் தங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்வதில் அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே ஆளுநரின் இந்த ஆய்வுப்பணிகளை உற்று நோக்க வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மாநில சுயாட்சி மீதான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இன்னொரு முனையில் ஒரே நாடு எந்த சித்தாந்தத்தை நிறுவும் முயற்சியாகவும் பாஜகவின் செயலைக் கருதுகின்றனர்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தமிழகத்தில் ஆளுநர்களாக இருந்தவர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நிகழ்ச்சி அல்லது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மட்டுமே கலந்து கொள்வது மரபாக இருந்தது. அதாவது, அவர்களின் அரசு நிர்வாகப் பணிகளைக் கடந்து அதிகபட்ச நீட்சி இப்படித்தான் இருந்தது.

அரசு நிர்வாகத்தில் ராஜ்பவன் ஆதிக்கம் செலுத்துவதை ஜெயலலிதாவும், கருணாநிதியும் தள்ளியே வைத்திருந்தனர். ஆனால், டெல்லி பாஜக தலைமையிடம் முற்றிலும் சரணைடந்து விட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜகவின் தலையீடுகளை கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றனர். அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

பாஜகவின் எத்தகைய செயல்களுக்கும் முட்டுக்கொடுத்து வரும் முதுகெலும்பற்ற அடிமைகளும், உச்சநீதிமன்றமோ, அரசியல் சாசனமோ எதுவாயிருந்தாலும் என்ன…நினைத்ததை செய்து முடிப்போம் என்ற மனநிலையில் இருக்கும் முட்டாள் பக்தாள்களும் சேர்ந்து தமிழ்நாட்டை சீரழித்து விடுவார்களோ என்ற அச்சமும் எழுந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

– பேனாக்காரன்.