Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதோடு, இறைச்சிக் கழிவுகளால் நிரம்பி இன்னொரு கூவமாக உருமாறி வருகிறது.

போடிநாயக்கன்பட்டி ஏரியில் கழிவு நீர் கலக்கும் காட்சி.

கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற சில நாள்களில் நடந்த அனைத்துத்துறை ஆய்வு க்கூட்டத்தில், ஏரிகள், நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தார்.

இதற்காக, கடந்த நிதியாண்டில் மட்டும் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1519 பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது கூறினார்.

குடிமராமத்துப் பணிகள் என்பது, நிலத்தடி நீரை செறிவூட்ட ஆகச்சிறந்த வழிமுறை என்பதால், துவக்க நிலையில் இத்திட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே பல ஏரிகள் தூர்வாரப்படாமல் கைவிடப்பட்டது.

குறிப்பாக, சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், போடிநாயக்கன்பட்டி ஏரி, தூர்வாரப்படாமல் உள்ளதால், கடும் ஆக்கிரமிப்பில் சிக்கிக்கிடக்கிறது.

குடிமராமத்துப் பணிகள் நடக்காததால் ஆகாயத்தாமரை மண்டிக்கிடக்கின்றன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த ஏரியில் விடப்படுவதால், ஒரு காலத்தில் சீர்மிகு ஏரியாக இருந்த போடிநாயக்கன்பட்டி ஏரி இப்போது சிதிலமடைந்து கிடக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் போடிநாயக்கன்பட்டி ஏரி, பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானதா? மாநகராட்சிக் கட்டுப்பாட்டில் உள்ளதா? வருவாய்த்துறை பராமரிப்பில் உள்ளதா? என்பதிலும் அதிகாரிகள் முதல் எம்எல்ஏக்கள் வரை பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த ஏரியை மீட்பதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் சேலம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த குமரனைச் (44) சந்தித்தோம். பசுமைத் தாயகம் அமைப்பின், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர்.

ஏரியில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்…

”சேலம் மாநகராட்சி 20வது கோட்டத்திற்கு உட்பட்டது போடிநாயக்கன்பட்டி ஏரி. இந்த ஏரி, 20.79 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஒரு காலத்தில், இந்த ஏரியில் நீர் நிரம்பி, மீன் வளம் மிகுந்திருக்கும். இங்குள்ள இளைஞர்கள் எல்லோரும் போடிநாயக்கன்பட்டி ஏரியில் குதியாட்டம் போட்டோம். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில், ஏரியின் அழகு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.

இந்த ஏரியை நம்பி போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டி, கந்தம்பட்டி, மல்லாங்காட்டானூர், காட்டூர், சிவதாபுரம் ஆகிய பகுதிகளில் 1500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வந்தது. நிலத்தடி நீரும் பாதுகாக்கப்பட்டு வந்தது. இன்று ஆக்கிரமிப்பு, கழிவு நீர் கலப்பு காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளது. பாசன பயன்பாடும் நின்றுவிட்டது.

ஏற்காடு மலையில் இருந்து வழிந்து வரும் மழை நீரானது மாமாங்கம் ஓடை – ரெட்டிப்பட்டி – பழைய சூரமங்கலம் வழியாக போடிநாயக்கன்பட்டி ஏரிக்கு வருகிறது. இந்த ஏரி நிரம்பியதும் வாய்க்கால்கள் வழியாக கோனேரி – சம்பு ஓடை – திருமணிமுத்தாறு வழியாக வீரபாண்டி ஏரியில் சென்று சேர்ந்து விடும். இந்த நீர்வழித்தடங்கள் முற்றிலும் ஆக்கிரமிப்பில் உள்ளன.

குமரன்

 

மாநகரின் பல பகுதிகள் மற்றும் சேலத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தும் வெளியேற்றப்படும் சாக்கடைக் கழிவு நீர், போடிநாயக்கன்பட்டி ஏரியில்தான் கலக்கப்படுகிறது. பலர் இறைச்சிக் கழிவுகளை இந்த ஏரிக்குள் வந்து கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.

இந்த ஏரியை புனரமைக்கும்படி சேலம் மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தேன். ஆனால் மாநகராட்சி நிர்வாகமோ, வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் இந்த ஏரி வருவதால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.

ஆனால் வருவாய்த்துறையிடம் கேட்டால், அந்த ஏரி ஏதோ, ‘செய்து பணித்துறைக்கு’ சம்பந்தப்பட்டது என்று பதில் தெரிவித்தது. அது என்ன ‘செய்து பணித்துறை?’ என்பதற்கு இன்றுவரை விளக்கம் இல்லை.

செல்வராஜ்

இதுகுறித்து பொதுப்பணித்துறையின் சரபங்கா வடிநில உபகோட்டத்திற்கும் மனு அளித்தேன். அவர்களும், ‘போடிநாயக்கன்பட்டி ஏரி பொதுப்பணித்துறையைச் சார்ந்தது அல்ல’ என்று பதில் அளித்துவிட்டனர். அப்படியெனில், இந்த ஏரி யாருக்குதான் சொந்தமானது?

போடிநாயக்கன்பட்டி ஏரியில் வெங்கடேஷ், அலமேலு, தனம், கமலம்மாள் மற்றும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வருவாய்த்துறை, எழுத்துமூலம் எனக்கு பதில் அளித்துள்ளது. இதில் வெங்கடேஷ் என்பவர் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர். ஆக்கிரமிப்பாளர்கள் பற்றி தெரிந்த பிறகும்கூட, வருவாய்த்துறையோ, மாவட்ட நிர்வாகமோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ரோகிணி, ஆட்சியர்

மாநகராட்சி, கலெக்டர், பொதுப்பணித்துறை, முதலமைச்சரின் தனிப்பிரிவு என எல்லோரிடமும் புகார் மனு கொடுத்துவிட்டேன். இனி யாரிடம்தான் முறையிடுவது?. எனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது. சிறந்த கலெக்டர்னு விருது வாங்கின ரோகிணியிடமும் மனு கொடுத்துவிட்டேன். இனியும் புகார் மனு கொடுக்கவே வெட்கமாக இருக்கிறது,” என மனம் வெதும்பினார் குமரன்.

போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (51) கூறுகையில், ”சிலர் ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். சிலர் பல ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். நில ஆக்கிரமிப்பு மற்றும் ஆகாயத்தாமரையால் இந்த ஏரி இப்போது சிறு குட்டை போல் சுருங்கிக் கிடக்கிறது.

ஏரி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கிணறு.

அரசுத் தரப்பு அறிக்கைப்படி, இந்த ஏரி 40 விழுக்காடு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஏரியைச் சீரமைக்க, ஆண்டுக்கணக்கில் போராடியும் பயனில்லை. மக்களே ஒன்றுகூடி ஏரியை சீரமைக்கவும் தீர்மானித்து விட்டோம்,” என்றார்.

போடிக்கநாயக்கன்பட்டி ஏரி, ஆக்கிரமிப்பு பிரச்னைகள் மட்டுமின்றி வேறு சில பிரச்னைகளிலும் சிக்கித் தவிக்கிறது. இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல், ஏரிக்கைரையில் உள்ள முள்புதர் ஓரங்களில் மது அருந்துகின்றனர்.

கரையோரம் மின்கம்பங்கள் இருந்தும், மின் விளக்குகள் இல்லாததால் இருள் கவ்விக் கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் அடிக்கடி ‘குடிமகன்கள்’ நகை பறிப்பு மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதும் அன்றாட காட்சிகளாகிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஏரியை ஆக்கிரமித்துள்ளவர்களின் பெயர் பட்டியலை வழங்கிய சேலம் மாநகராட்சி.

சேலம் சூரமங்கலம் ரயில் நிலையத்திற்கு மிக அருகிலேயே இந்த ஏரி அமைந்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை சீரமைத்தால் படகு இல்லம் அமைக்கலாம். அல்லது சிறு அளவிலான பறவைகள் சரணாலயமாகவும் பராமரிக்கலாம்.

சேலத்தை, பொலிவுறு நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) மாற்றுவேன் எனக்கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இறங்கி வருவாரா?

 

//கழிவு நீரை வேறு எங்கே விடுவது?; அதிமுக எம்எல்ஏ கேள்வி//

 

போடிநாயக்கன்பட்டி ஏரி சீரமைப்பு குறித்து சேலம் மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜி.வெங்கடாஜலத்திடம் கேட்டோம்.

வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.

”போடிநாய்க்கன்பட்டி ஏரியை தூர்வாற போன வருஷமே எஸ்டிமேட் போட்டு கொடுத்திருக்கோம். 24 லட்சம் ரூபாய் என்னமோ வந்தது. அப்புறம் மழை வந்து, ஏரி நிரம்பிடுச்சு.

அதனால் டெண்டர் எல்லாம் கேன்சல் ஆகிப்போச்சு. இன்னும் அரை ஏரிக்கு தண்ணீ இருக்கு. அந்த தண்ணீயெல்லாம் வடிஞ்சாத்தானே எஸ்டிமேட் கொடுக்க முடியும்?,” என்றவரிடம், ‘கழிவு நீர் செல்வதை தடுத்தால்தானே நீர் வடியும்?’ எனக்கேட்டோம்.

அதற்கு அவர், ”ஆமா சார்…. கழிவு நீரை வேறு எங்கே விடுவீங்க? வேற இடத்துல கால்வாய் போறதை வளைச்சி விட்டிருந்தா பரவால. அந்த காலத்துல இருந்து அப்படித்தான் இருக்கு,” என்றார்.

அவரிடம், ‘இந்த ஏரி யாருக்குச் சொந்தமானது?’ என்று கேட்டதற்கு, ”அது வந்து சார்… பொதுப்பணித்துறைன்னதும் தெரியல. மாநகராட்சின்னதும் தெரியல,” என தெர்மாகோல் செல்லூர் ராஜுவைப் போல் அப்பாவியாகச் சொன்னார் எம்எல்ஏ ஜி.வெங்கடாஜலம்.

 

– பேனாக்காரன்.