Sunday, February 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘பீக்குஸ்கோத்தெ’ எனும் வாய்ப்பூட்டு!: “பிச்சை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் சவுராஷ்டிரர்கள்”

கடந்த 2016-ம் ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படத்தில், தாயின் உயிரைக் காப்பாற்ற நாயகன் தெருத்தெருவாக பிச்சை எடுப்பார். சாமியார் ஒருவரின் ஆலோசனையின்பேரில் இப்படி நேர்த்திக்கடன் செலுத்தி, தாயின் உயிரைக் காப்பாற்றுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

மொழி, கலாச்சார ரீதியாக பாரம்பரியத்தை கட்டிக்காத்து வரும் சவுராஷ்டிரா சமூக மக்களிடையே இப்படி ஒரு சம்பிரதாயம் இன்றளவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டால், அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அவர்கள் குணமடைந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் உள்பட வேண்டுதல் வைத்த அனைவரும் கோயிலில் சென்று வாயில் ‘அலகு பூட்டு’ குத்திக்கொள்கின்றனர். சிலர், இதை ‘வாய்ப்பூட்டு’ என்றும் சொல்கின்றனர்.

குறைந்தபட்சம் ஏழு ஊர்களில் தெருத்தெருவாக, குடும்பத்துடன், வெறும் காலில் நடந்துசென்று தட்டேந்தி யாசகம் பெறுகிறார்கள். இந்த சம்பிரதாயங்களை சவுராஷ்டிரர்கள், தங்கள் மொழியில் ‘பீக்குஸ்கோத்தெ’ என்கிறார்கள்.

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த குணசேகரன் குடும்பத்தினர் ‘பீக்குஸ்கோத்தெ’ யாசகம் பெற்றனர். குணசேகரன், அவருடைய மனைவி கவிதா, மகன் கார்த்திகேயன், சகோதரர்கள் செந்தில்குமார், ரமேஷ் ஆகிய அய்ந்து பேரும் வாயில் அலகுப்பூட்டு போட்டுக்கொண்டு, யாசகம் பெற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஓராண்டுக்கு முன்பு, குணசேகரன் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டியிருந்தாலும், மற்றொருபுறம் அவர் முறையான சிகிச்சை பெறவும் தவறவில்லை. அவர் நலமடைந்ததன் தொடர்ச்சியாகவே இந்த வேண்டுதலை நிறைவேற்றி உள்ளனர்.

ஏதோ போகிற போக்கில் இந்த பிரார்த்தனையை நிறைவேற்றிட முடியாது. ‘பீக்குஸ்கோத்தெ’ நேர்த்திக்கடனுக்காக 15 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். விரத நாட்களில் பிறர் வீடுகளில் கை நனைக்கவோ, கெட்ட காரியங்களில் கலந்து கொள்ளவோ கூடாது. கணவன், மனைவியிடமும் ‘இடைவெளி’ இருக்க வேண்டும்.

இப்போது சிலர் 7 நாள்கூட விரதம் இருக்கின்றனர். ஆனால் விரத காலத்தில் பின்பற்றப்படும் விதிகளில் எந்த தளர்வும் இல்லை.

‘பீக்குஸ்கோத்தெ’ அன்று காலை பெருமாள் கோயிலில், வேண்டுதல் வைத்த குடும்பத்தினர் வாயில் வெள்ளிக்கம்பியால் அலகுப்பூட்டு போட்டுக்கொள்வார்கள்.

கழுத்தில் மாலை அணிந்து கொண்டு, ஏதுமற்றவர்களாக கையில் தட்டேந்தி தெருத்தெருவாக யாசகம் கேட்டுச் செல்ல வேண்டும்,” என்கிறார் குணசேகரன்.

யாசகத்தின்போது மக்கள் தங்களால் இயன்ற பணம், பொருள்களை மக்கள் பிச்சையாக போடுகின்றனர். பிச்சை இடுபவர் எந்த வயதினராக இருந்தாலும், அலகுப்பூட்டு போட்டவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகின்றனர். சிலர், யாசகர்களின் பாதங்களுக்கு தண்ணீர் ஊற்றி குளிர்விக்கின்றனர்.

“ஒரு காலத்தில், நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் ஏழு ஊர்களில் யாசகம் பெற வேண்டும். இப்போது ஏழு தெருக்களுடன் சுருக்கிக் கொண்டார்கள். யாசகத்தின்போது பெறப்பட்ட பணம், பொருள்களை திருப்பதிக்குச் செல்லும்போது வழிச் செலவுக்கு வைத்துக் கொள்வார்கள்.

செலவு போக எஞ்சியிருப்பது எத்தனை ரூபாயாக இருந்தாலும், திருப்பதி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விட வேண்டும். அலகுப் பூட்டு உள்பட. திரும்பி வரும்போது, சொந்தப் பணத்தைதான் செலவு செய்ய வேண்டும்,” என்கிறார் குணசேகரனின் தாய், லட்சுமியம்மாள் (82).

யாசகம் பெறும் நிகழ்வுதான் என்றாலும், கிட்டத்தட்ட திருமண விழாவுக்கு அழைப்பது போல் அனைத்து நெருங்கிய சொந்த பந்தங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றனர். வெளியூரில் இருந்தாலும் கூட. யாசகம் கேட்கச் செல்வதற்குமுன், உறவினர்களுக்கு கோயில் வளாகத்தில் காலை உணவும் வழங்குகின்றனர்.

“உறவுக்காரர்களிடம் பேச்சு வார்த்தை இல்லா விட்டாலும்கூட, ‘பீக்குஸ்கோத்தெ’ நிகழ்வின்போது படியேறி அழைப்பது மரபு,” என்கிறார் குணசேகரனின் சகோதரி பிரியா.

இதன்மூலம், நெருங்கிய பந்தங்களுடன் கூடிப்பிரியும் சந்தர்ப்பம் கிடைக்கிறது என்கிறார், அவருடைய அக்காள் மகன் பாலு.

வாயில் மாட்டிய அலகுப் பூட்டு, ‘பீக்குஸ்கோத்தெ’ ஊர்வலம் முடிவதற்குள் தானாக கழன்று கொள்ள வேண்டும். அப்படி கழன்று வராவிட்டால், நேர்த்திக்கடன் வேண்டுதல் வைத்தவர்களிடம் ஏதோ குறை இருப்பதாக அய்தீகம். அலகுப் பூட்டு கழன்றதுமே ‘பீக்குஸ்கோத்தெ’ ஊர்வலத்தையும் முடித்துக் கொள்கின்றனர்.

தொன்மையான கலாச்சாரங்களில் ஊறிப்போனவர்கள் சவுராஷ்டிரர்கள்.

 

(அக். -2016 அன்று வெளியான ‘புதிய அகராதி’ திங்கள் இதழில் இருந்து… )

 

– பேனாக்காரன்.

%d bloggers like this: