Saturday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா?; தொடரும் மாநகராட்சியின் அலட்சியம்!

சேலம் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டாலும், அதற்கான பூர்வாங்க தகுதிகளைக்கூட இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை. இன்றும் திறந்தவெளி சாக்கடைக் கால்வாய்களுக்குள் எந்த வித பாதுகாப்பு கவசங்களுமின்றி மனிதர்களையே இறக்கிவிடும் அவலம் நீடிக்கிறது.

மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என முதன்முதலில் 1993ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. பின்னர் அந்த சட்டத்தில் மேலும் சில விதிகள் சேர்க்கப்பட்டு, 2013ல் புதிய சட்டமும் இயற்றப்பட்டது. ஆனாலும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி இறக்கும் நிகழ்வுகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளன. இதுபோன்ற மரணங்களில் தமிழகத்தின் பாதிப்பு மட்டுமே 44 சதவீதம் என்கிறது ஓர் ஆய்வு.

 

கடந்த நான்கு ஆண்டுகளில் மனிதக் கழிவகற்றும் பணிகளில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கி 30 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற கள ஆய்வுகள் சொல்கின்றன.

இது ஒருபுறம் இருக்க, திறந்தவெளி சாக்கடைக் கால்வாய்கள், கழிவுநீர் ஓடைகளில் துப்புரவு பணியாளர்களை எவ்விதப் பாதுகாப்புக் கவசமுமின்றி இறங்கி வேலை செய்ய நிர்ப்பந்திக்கும் போக்கும் தொடர்கிறது.

குறிப்பாக, சேலம் மாநகராட்சியில் இதுபோன்ற போக்குகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதெல்லாம் ஒரு விவாதத்திற்குரிய அல்லது கவலைப்படுவதற்குரிய நிகழ்வுகளே அல்ல என்பதுபோல் சேலம் மாநகராட்சி நிர்வாகம் அசட்டையாக இருந்து வருகிறது.

 

மனிதக் கழிவகற்றும் பணிகளில் ஈடுபடும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டால் மட்டுமே தண்டனை என்பதில்லை. அவர்கள் கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கினாலே, சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுதான் அந்த சட்டத்தின் முக்கிய அம்சம்.

மேலும், அவ்வாறு வேலை செய்ய அனுமதித்த நிறுவனம், தனிநபர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியும்.

சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில், 21 கோட்டங்களில் மட்டும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள, எஸ்டபுள்யூஎம்எஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்நிறுவனம், தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணிக்கான ஆள்களை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 

இன்று (மார்ச் 22, 2018) மாலை, சேலம் பாலபாரதி பள்ளி அருகில் (14வது கோட்டம்), திறந்தவெளி சாக்கடைக் கால்வாய்க்குள் துப்புரவுப் பணியாளர்கள் நேரடியாக இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தனி சீருடை, கம் பூட்ஸ், கையுறை, காலுறைகள் வழங்கப்பட வேண்டும். பணிகள் முடிந்த பின்னர் கை, கால்களைச் சுத்தம் செய்து கொள்ள சோப்புகளும் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் மாநகராட்சி நிர்வாகம், ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனமோ இந்த விதிகளை முழுமையாகப் பின்பற்றுவதில்லை. சில நேரங்களில், சீருடை வழங்கப்பட்டிருந்தாலும் அவற்றை அணிவதில் உள்ள அசவுகரியங்கள் காரணமாக துப்புரவுத் தொழிலாளர்கள் அணியாத நிலையும் உண்டு.

 

இதுகுறித்து துப்புரவு தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், ”ஒரு நாளைக்கு 200 ரூபாய் கூலி என்ற ஒப்பந்த அடிப்படையில் எங்களை நியமித்துள்ளனர். எங்களை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், ஊதியத்தில் 500 ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு மாதம் 5500 ரூபாய் வழங்குகின்றனர். அந்த சொற்ப சம்பளத்தைப் பெறவும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஜனவரி மாத சம்பளத்தை, பிப்ரவரி 28ம் தேதிதான் கொடுத்தனர்.

பி.எப், இஎஸ்ஐ போன்ற வசதிகள் இருக்கிறதா?, எதற்காக சம்பளத்தில் 500 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரங்களும் எங்களுக்குத் தெரியாது. இதுபற்றி ஒப்பந்தக்காரர்களிடம் கேட்டால், ‘இஷ்டம் இருந்தால் செய். இல்லாவிட்டால் வேலையை விட்டு நிறுத்திவிடுவோம்,’ என மிரட்டுகின்றனர்.

படிப்பறிவு இல்லாத நாங்கள், இந்த வேலையையும் விட்டுட்டா வேற எங்க சாமி போறது?. இந்த வார்டில் மட்டும் 25 பேர் வேலை செய்கிறோம். இதில் 6 பேர் மட்டும் ஆண்கள். சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் கடினமாக பணிகளை பெண்களால் எப்படி செய்ய முடியும் என்று யாருமே யோசிப்பதில்லை,” என்றனர் கவலையுடன்.

சாக்கடைக் கால்வாயில் இருந்து காலி மதுபாட்டில்கள், இரும்புக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாலிதீன் பைகள் மட் டுமின்றி சாலையோர பழக்கடைகள், சில்லி சிக்கன் கடைகளில் இருந்து அகற்றப்படும் கழிவுகள் என அனைத்தும் திற ந்தவெளி ஓடையில் வீசப்படுகின்றன. அதன் ஆபத்தை அறியாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் கையுறைகள்கூட இல்லாமல் அகற்றி வருகின்றனர்.

விஷவாயு தாக்குதல் அல்லது பாம்புகள், நட்டுவாக்களி, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்து உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னர், அவர்களின் குடும்பத்தினருக்கு சொற்பத் தொகையை நிவாரணமாக அளித்துவிட்டால் போதுமென மாநகராட்சி நிர்வாகம் கருதுகிறதோ என்னவோ!.

வெற்று உடம்புடன், பாதுகாப்பு கவசங்களின்றி அவர்கள் சாக்கடைக்கு கால்வாய்க்குள் இறங்குவதால் தோல் நோய்களும், ஒவ்வாமைகளும் ஏற்படுகின்றன. குரலற்ற, அந்த ஒடுக்கப்பட்ட மக்கள், தங்கள் உடல்நல பாதிப்புக்கு மூல காரணம் இவையென அறியாமலேயே வாழ்ந்து மடிந்து விடுகின்றனர். வந்தபின் வருத்தம் தெரிவிப்பதைவிட வரும்முன் காப்பதை முன்னெடுக்க வேண்டும்.

பாலபாரதி பள்ளி அருகில் துப்புரவு பணியாளர்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருந்த எஸ்டபுள்யூஎம்எஸ் நிறுவன மேற்பார்வையாளர் சந்தோஷ் என்ற இளைஞரிடம் கேட்டதற்கு, ”சார்… எங்களுக்கு பில் பாஸ் ஆனால்தான் நாங்கள் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். மாநகராட்சி ஊழியர்களுக்கே தாமதமாகத்தான் சம்பளம் போடுகிறார்களாம். அதனால்தான் எங்களுக்கும் தாமதம் ஆகிறது.

சீருடை வழங்கவில்லை என்பதில் உண்மை இல்லை. சீருடை, கிளவ்ஸ் எல்லாம் நாங்கள் கொடுத்திருக்கிறோம். அவற்றை அணிந்தால் அதிகமாக வியர்க்கிறது எனக்கூறி யாரும் அணிவதில்லை,” என்றார்.

சீருடையை வேண்டுமானால் அவர்கள் அணியாமல் இருக்கலாம். அதற்காக ஆளையே நேரடியாக சாக்கடைக் கால்வாய்க்குள் இறக்கிவிட்டு வேலை வாங்கலாமா? என்ற வினாவுக்கு அவரிடம் பதில் இல்லை.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷிடம் கேட்டபோது, ”குபோட்டோ என்ற ரோபோ வைத்து சில இடங்களில் சாக்கடைக் கால்வாய்களை சுத்தப்படுத்தி வருகிறோம். 21 வார்டுகளில் துப்புரவு பணிகளை ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்துடன்தான் ஒரு கூட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட விவகாரம் குறித்தும் நான் அந்த நிறுவனத்திடம் விசாரிக்கிறேன்,” என்றார்.

 

சாக்கடைக் கால்வாயில் இறங்கி சுத்தப்படுத்தும் வேலைக்குப் பணித்த ஒப்பந்த நிறுவனத்தின் மீது சேலம் மாநகராட்சி நிர்வாகம், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறுகள் நிகழ்வதை தடுக்க முடியும்.

எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாநகரமே, சாக்கடைக் கால்வாயை சுத்தப்படுத்தும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதில் இருந்து இன்னும் மீளாதபோது மாநிலத்தின் பிற பகுதிகளின் லட்சணம் எப்படி இருக்கும் என்று நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

 

– வழிப்போக்கன்.
பேச: 98409 61947.