Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”பணமதிப்பு நீக்கம் முற்றிலும் தோல்வி!”: பாஜக மூத்த தலைவர் பேச்சு

பணமதிப்பு நீக்கத்தின்போது பிரமதர் நரேந்திர மோடி சொன்ன ஊழல், கருப்புப் பணம் ஒழிப்பு, பயங்கரவாதம் தடுப்பு ஆகிய அனைத்து நோக்கங்களும் முற்றிலும் தோல்வி அடைந்திருக்கிறது என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நடுவண் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா

பொருளாதார பேராசிரியர் அருண்குமார் எழுதிய ‘பணமதிப்பு நீக்கமும் கருப்புப் பொருளாதாரமும்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் டெல்லியில் நடந்தது.

பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் நடுவண் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் தன்னை, ‘ஆளும் கட்சிக்குள் இருக்கும் எதிர்க்குரல்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் பேசியது:

நடுவண் அரசின் அனைத்து முடிவெடுக்கும் அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் மட்டுமே குவிந்து கிடக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி என்ற ஒரே ஒரு கொள்கை வகுப்பாளரை மட்டுமே இந்த அரசு கொண்டிருக்கிறது. அதனால்தான் அவர் யாரிடமும் கொஞ்சம்கூட கலந்து ஆலோசிக்காமல் பணமதிப்பு நீக்க முடிவை தனி ஒருவராக எடுத்துவிட்டார்.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அன்று 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்கள் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார். அப்போது அவர் ஊழலை ஒழிக்கவும், கருப்புப் பணத்தை தடுக்கவும், பயங்கரவாதத்தைத் தடை செய்யவும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த மூன்று நோக்கங்களில் ஒன்றில்கூட பணமதிப்பு நீக்கத்தால் வெற்றிபெற முடியவில்லை. அந்த நடவடிக்கை முற்றிலும் தோல்வி அடைந்திருக்கிறது.

இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா பேசினார்.

முன்னதாக பேராசிரியர் அருண்குமார் எழுதிய புத்தகம் பற்றி அவர் குறிப்பிடுகையில், ”கருப்புப் பொருளாதாரம் குறித்து பல ஆண்டுகளாகவே அருண்குமார் தீவிரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். பணமதிப்பு நீக்கத்தால் கிராமப்புற பொருளாதாரமும், அமைப்பு ரீதியல்லாத தொழில்களும் பெரிதும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத் தலைமுறையினர்கூட பாதிக்கப்படலாம் என்றும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்,” என்றார்.

பேராசிரியர் அருண்குமார் கூறுகையில், ”பணமதிப்பு நீக்க நடவடிக்கை கிராப்புற பொருளாதாரம், அமைப்பு ரீதியல்லாத துறைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றின் இழப்பு எவ்வளவு என்பது பற்றி முழுமையான தரவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. ஆனாலும், பல ஆண்டுகளுக்கு பொருளதாரத்தை இந்த நடவடிக்கை பாதிக்கும்,” என்று குறிப்பிட்டார்.

பிஜூ ஜனதா தளத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள எம்பி ஜெய் பாண்டா, பாஜகவில் இணையலாம் என்ற கருத்து நிலவுகிறது. அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பணமதிப்பு நீக்கம் குறித்து இரு விதமான கருத்துகளை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ”ஆமாம். பணமதிப்பு நீக்கம், இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தது. புழக்கத்தில் இருந்த 86 விழுக்காடு பணத்தையும் ஒரே நேரத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இது கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதில் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தின.

கல்லூரிகள் பணத்தைக் கையாள்வதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரத்தினக்கல் மற்றும் நகை வியாபாரிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் பாதிக்கப்பட்டனர்,” என்றார் ஜெய் பாண்டா.

ஜவஹர்லால் நேரு பல்கலை பொருளாதார பேராசிரியர் தீபக் நய்யார் பேசுகையில், ”உலகில் எந்தெந்த நாடுகளில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அங்கெல்லாமே பொருளாதாரம் பெரும் சீரழிவைச் சந்தித்தது. இந்தியாவில் அந்தளவுக்கு மோசமாக நடக்கவில்லை. நாம் ஓரளவுக்கு ஸ்திரமான பொருளாதார நிலையைக் கொண்டிருந்ததால் பணமதிப்பு நீக்கத்தால் இங்கு பெரும் சீர்குலைவு நடக்காவிட்டாலும், இழப்பு அதிகமாகவே இருந்தது.

பேராசிரியர் அருண்குமார்

பணமதிப்பு நீக்கத்திற்காக சொல்லப்பட்ட காரணங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. குறிப்பாக ஊ-ழல், கருப்புப் பண சுழற்சியை கட்டுப்படுத்துவதில் நாம் தவறி விட்டோம். புழக்கத்தில் இருந்த பணமெல்லாம் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்தது. அது தீண்டப்படாததாகிவிட்டது. அவ்வளவுதான் பணமதிப்பு நீக்கத்தின் பலன்,” என்றார்.

மீண்டும் பேசிய யஷ்வந்த் சின்ஹா, ”பணமதிப்பு நீக்கம் போன்ற மோசமான நடவடிக்கைகளுக்குப் பிறகும் பாஜக அரசியல் ஆதாயம் அடைகிறது எனில், அது ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதால்தான். பணமதிப்பு நீக்கத்தை நியாயப்படுத்தி, அல்லது பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி பரப்புரை செய்வதில் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கும் ஊடகங்கள் பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றன,” என்றார்.