Sunday, October 1மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஒரு பழமொழி… ஓஹோனு டிரெண்டிங்!; இந்திய அளவில் முதலிடம் பிடித்தார் மு.க.ஸ்டாலின்!#ஸ்டாலின்_பழமொழி

பொது நிகழ்ச்சியில் ஒரே ஒரு பழமொழியைக் கூறியதன் மூலம் இன்று (மார்ச் 23, 2018) இந்திய அளவில் ட்விட்டர் சமூக ஊடகத்தில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

 

பொதுக்கூட்டமோ, பொதுநிகழ்ச்சிகளோ அரசியல்வாதிகள் குறிப்பு எழுதி வைத்துக்கொண்டு பேசுவது என்பது உலகளவில் நடைமுறையில் இருந்து வருவதுதான்.

தமிழ்நாட்டு அரசியலைப் பொருத்தவரை, திமுக தலைவர் கருணாநிதி மேடைகளில் பேசும்போது எழுதி வைத்துக்கொண்டு பேசுவதில்லை. எத்தனை ஆண்டுகால வரலாறாக இருந்தாலும், அவர் மூளைக் கிடங்கில் இருந்து துல்லியமான தகவல்கள் சுரந்து கொண்டே இருக்கும்.

 

 

கருணாநிதிக்கு நேர் எதிரானவர் ஜெயலலிதா. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அறிக்கையின்றி அவர் மேடையேறுவதே இல்லை.

ஆனால் ஒரு பிரபலத்தின் வாரிசாக இருப்பதில் நிறையவே சங்கடங்கள் நிறைந்தது. பெற்றோர் பயணித்த அதே துறையில் வாரிசுகளும் பயணிக்கும்போது எப்போதும் சவால்களையும், கடுமையான விமர்சனங்களையும் சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும். எல்லா நிகழ்வுகளிலும் பெற்றோரையும், வாரிசையும் ஒப்பீடு செய்வது இயல்பாகவே நிகழ்ந்துவிடும்.

 

 

அத்தகைய உளவியல் ரீதியான ஒப்பீடுகள், சவால்கள், சங்கடங்களைத்தான் இப்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார்.

குறிப்பாக, ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மைனாரிட்டி அதிமுக அரசை எதிர்கொள்வதில் ஸ்டாலினின் அரசியல் செயல்பாடுகள், அவருடைய தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியுடன் ஒப்பிடப்படுகிறது. இதை வைத்து ஸ்டாலினை பலரும் சமூக ஊடகங்களில் பகடி செய்து வருகின்றனர்.

 

 

கடந்த 21.3.2018ம் தேதி திமுக முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.ராஜா எழுதிய ‘2ஜி – அவிழும் உண்மைகள்’ என்ற நூலின் தமிழ்ப்பதிப்பு வெளியீட்டு விழா, கலைஞர் அரங்கத்தில் நடந்தது.

 

 

பேராசிரியர் அன்பழகன், தி.க. தலைவர் கி.வீரமணி, ‘இந்து’ என்.ராம், கவிஞர் வைரமுத்து, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே’ என்பது போல், இந்த நூல் வெளியிடப்படுவதற்கு முன்பே 2ஜி வழக்கில் இருந்து ஆ.ராஜாவும், கனிமொழியும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

 

 

அவர் பேசிய யானை பழமொழிதான் இன்று அவரை ட்விட்டர் சமூக ஊடகத்தில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.

 

 

உண்மையில் இந்தப் பழமொழியின் சரியான வடிவம், ‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்பதுதான். ஆனால், மு.க.ஸ்டாலின் ‘பின்னே’ இருக்க வேண்டியதை ‘முன்னே’ என்றும், முன்னே இருக்க வேண்டிய மணியோசையை ‘பின்னே’ என்றும் கவனக்குறைவாக தவறாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதையும், அவர் ஒரு துண்டு காகிகத்தில் எழுதி வைத்திருந்ததைப் பார்த்துதான் இந்தப் பழமொழியைக் குறிப்பிட்டார்.

 

 

ஸ்டாலின் தவறாகக் கூறிய பழமொழியை வைத்து அவரை வலைத்தளவாசிகள் ட்விட்டரில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். இதற்காக, ‘#ஸ்டாலின்_பழமொழிகள்’ என்று ஹேஷ்டேக் செய்துள்ளனர். இன்று நாள் முழுவதும் இந்த ஹேஷ்டேக்தான் வைரலாகி முதலிடத்தில் உள்ளது.

 

 

இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களை தங்களுக்கான செலவில்லா விளம்பரமாகவே அரசியல்வாதிகள் மாற்றிக்கொண்டு விடுவார்கள். அதற்கு ஸ்டாலினும் விதிவிலக்கு அல்ல.

 

 

ஆனால், பொது நிகழ்ச்சிகளில் ஸ்டாலின் குழப்பமான தகவல்களை தெரிவித்து வருவது இது முதல்முறை அல்ல என்றும் வலைத்தளவாசிகள் சு(கு)ட்டிக் காட்டுகின்றனர்.

 

 

நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் பெயரை தவறுதலாக சரிதா என்று அப்போது ஸ்டாலின் குறிப்பிட்டார். அதேபோல் சுதந்திரதினம், குடியரசுதின தேதிகளைத் தவறுதலாகக் கூறினார். இதையெல்லாம் சேர்த்துவைத்து ஸ்டாலினை ட்விட்டரில் பகடி செய்திருக்கின்றனர் வலைத்தளவாசிகள்.

 

 

சின்னச் சின்ன தகவலைக்கூட அவர் குறிப்பு எழுதிய துண்டு சீட்டைப் பார்த்து படிப்பதும் கேலிக்குள்ளாகியுள்ளது.

‘பம்மல் கே சம்பந்தம்’ என்ற திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், ‘சும்மா வருவாளா சுகுமாரி?’ என்றும், ‘வேதம் சாத்தான் ஓதுறாங்க’ என்று குழப்பமான பழமொழிகளைக் கூறுவார். அதைப்பற்றி விளக்கம் கேட்டால், ‘பழமொழி சொன்னால் அனுபவிக்கணும். ஆராயக்கூடாது’ என்பார்.

 

 

அந்தப் படத்தின் காட்சிகளுடன் மு.க.ஸ்டாலினின் யானை பழமொழியையும் ஒப்பிட்டு கிண்டல் செய்து மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

 

 

பொதுவாழ்வில் ஈடுபடுவோர் மானம், அவமானம் எல்லாம் பார்க்கக் கூடாது என்பார் பெரியார். அதை, மு.க.ஸ்டாலினும் இப்போது நினைவு படுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது.

 

– பேனாக்காரன்.