Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

2 பாடங்களுக்கு மறு தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு; மாணவர்கள் கொதிப்பு#CBSE

தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொருளியல் ஆகிய இரு பாடங்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ இன்று (மார்ச் 28, 2018) அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எஸ்எஸ்எல்சி மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் 28 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு, இம்மாதம் 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வந்தது. இன்று (மார்ச் 28, 2018) பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்தேர்வு நடந்தது.

இத்தேர்வுக்கான வினாத்தாள், தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே வெளியானதாக புகார்கள் எழுந்தன. கையால் எழுதப்பட்ட வினாத்தாள் ஒன்று வாட்ஸ்அப்பில் நேற்று இரவே வெளியானது. அதிலுள்ள பல வினாக்கள் இன்றைய கணிதத்தேர்விலும் இடம் பெற்றிருந்தன.

இதேபோல் கடந்த 26ம் தேதி நடந்த பிளஸ்2 மாணவர்களுக்கான பொருளியல் தேர்வின்போதும், முன்கூட்டியே கையால் எழுதப்பட்ட வினாத்தாள் ஒன்று வெளியானது.

இன்றுடன் அனைத்துத் தேர்வுகளும் முடிந்த நிலையில், திடீரென்று சிபிஎஸ்இ நிர்வாகம், பத்தாம் வகுப்பு கணிதம் மற்றும் பிளஸ்2 பொருளியல் ஆகிய இரு பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தி தெரிவித்ததாகவும், இந்தப் புகார்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்பு, கடந்த 15ம் தேதி அன்று நடந்த பிளஸ்2 கணக்குப்பதிவியல் தேர்வின்போது வினாத்தாள் வெளியானதாக புகார்கள் எழுந்தன. ஆனால், இன்றைய அறிவிப்பில் அது தொடர்பாக எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.

சிபிஎஸ்இ நிர்வாகத்தின் நிர்வாகக் குளறுபடியால்தான் இதுபோன்ற தவறுகள் நடந்துள்ளதாக பெற்றோர்களும், மாணவர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் சாரு என்ற மாணவி, ”என்னாச்சு…? மறுபடியும் முழு பாடங்களையும் எப்படி நாங்கள் படிப்போம்?. மறு தேர்வு என்பதை நினைத்தாலே யாரோ என் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுப்பதுபோல் இருக்கிறது. ஆரம்பத்தில் இதுபோன்ற புகார்களை சிபிஎஸ்இ மறுத்தது.

இப்போது மறு தேர்வு என்கிறது. எல்லாம் நகைப்பாக இருக்கிறது. எங்கள் வாழ்க்கை என்ன தமாஷா? இப்போது 100க்கு 100 மதிப்பெண்கள் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பல மாணவர்களுக்கு மறுதேர்வு மூலம் அந்த நம்பிக்கை தகர்ந்துவிடும். இந்த அமைப்பு முறையே சரியில்லை,” என்று பதிவிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு படிக்கும் பிரணவ் விஜூ என்ற மாணவர், ”அப்பாடா…இன்று நடந்த கணிதத் தேர்வுடன் எல்லாம் முடிந்தது என்று மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், மறு தேர்வு என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வினாத்தாள் கசியும் அளவுக்கு சிபிஎஸ்இ அதிகாரிகள் எல்லாம் என்னதான் செய்கிறார்களோ?,” என்று ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிராக்ருத் சவுஹான் என்ற பதிவர், ”மறு தேர்வு என்பது நிச்சயம், மாணவர்கள் நலனுக்கு எதிரானது. சிபிஎஸ்இ நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்,” என்று காட்டமாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.