Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பாஜகவின் பச்சை துரோகம்!; கிளர்ச்சிக்குத் தயாராகும் தமிழகம்!!

இந்தியாவின் நீதிபரிபாலனத்தையும், மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவத்தையும் தொடர்ந்து சிதைத்து வரும் பாஜக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து மீறியிருப்பதன் மூலம், தமிழகத்திற்கு பச்சை துரோகத்தை இழைத்திருக்கிறது. காவிரி விவகாரத்தில் உறங்கும் எரிமலையாக இருந்த தமிழகம், வெடித்துக் கிளம்பும் எனத் தெரிகிறது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த 16.2.2018ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பில், கர்நாடகா மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் நடுவண் அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.

காவிரி நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று கூறியது. அதன் இறுதித் தீர்ப்பு 2001ல் வெளியானது. அந்தத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் திற ந்துவிட வேண்டும் என்றது. நடுவர் மன்றம் அறிவித்ததைக் காட்டிலும் மேலும் 14.75 டிஎம்சி தண்ணீர் அளவைக் குறைத்துதான் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு அளித்திருந்தது.

இப்படி படிப்படியாக நீர்ப்பங்கீட்டு அளவு குறைக்கப்பட்டதிலேயே தமி-ழகம் வஞ்சிக்கப்பட்டுவிட்டது. இதனால் 90 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு குறைந்து போகும். ஆனாலும், மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று உறுதிபட தீர்ப்பில் சொல்லப்பட்டதால், தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

இறுதித் தீர்ப்பு வெளியாகி 15 நாள்களுக்கு காலமாகியும் நடுவண் பாஜக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்தவித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை.

இதனால், எதிர்க்கட்சிகள், நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் முறையிட்டன. அதையெல்லாம் கொஞ்சம்கூட சட்டை செய்யாத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, 6 வார காலத்திற்குள் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விடும் என்று நம்பிக்கை தெரிவித்தது.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த பதினைந்து நாள்களுக்கும் மேலாக அதிமுக எம்பிக்கள் மக்களவையை முடக்கினர். ஆனால், தெலுங்குதேசம், ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் பாஜக மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க விடாமல் செய்வதற்கு அதிமுகவை, பாஜக பயன்படுத்திக் கொண்டதாகவே பார்க்கப்பட்டது. காவிரிக்காக போராட வேண்டிய கடைசி வாய்ப்பையும் அதிமுக நழுவவிட்டது.

நேற்று முன்தினம் மட்டும் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அனைத்து அதிமுக எம்பிக்களும் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினார். அவர் என்னவோ ஆவேசமாகத்தான் கூறினார். ஆனால், சமூக ஊடகங்களில் அவரின் பேச்சும் நகைச்சுவை நாடகமாகவே பார்க்கப்பட்டது.

இன்று (மார்ச் 29, 2018) மாலை 5 மணியுடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடுவும் முடிந்து விட்டது. ஆனால், நரேந்திர மோடி அரசோ, காவிரி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியவில்லை. அதுகுறித்து விளக்கம் கேட்டு நாளை மறுதினம் (மார்ச் 31) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகச் சொல்கிறது.

கர்நாடகா மாநிலத்தில் மே மாதம் 12ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலை மனதில் வைத்தே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து பாஜக அரசு நழுவியிருக்கிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே அதிகளவில் பலன் பெறுகின்றன. இவற்றில், தமிழகத்தில் ஒருபோதும் பாஜகாவால் காலூன்ற முடியாது.

தென்னிந்திய மாநிலங்களில் இப்போதைக்கு பாஜகவுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், கர்நாடகாவில் பாஜக தேர்தலைச் சந்திப்பதில் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். அதனாலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து கடைசி நாள் கெடு வரை சாதூர்யமாக நழுவியிருக்கிறது நடுவண் பாஜக அரசு.

லோக் பால், லோக் ஆயுக்தா அமைப்புகளை ஏற்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் பலமுறை குட்டு வைத்தும் அதுகுறித்த சிந்தையே இல்லாமல்தான் இருந்து வருகிறது நரேந்திர மோடி அரசு. ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொல்லியும்கூட, அதை கட்டாய நடைமுறையாக்கியது பாஜக.

ஆக, இந்த நாட்டின் உச்சபட்ச நீதிமன்ற பரிபாலனத்தையே பாஜக தொடர்ந்து கேலிக்குரியதாக நடத்தி வருகிறது. இந்திய வரலாற்றில், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பாஜக அரசைத் தவிர வேறெந்த அரசும் இந்தளவுக்கு அவமதித்ததில்லை.

பாஜகவை விமர்சித்து கட்டுரை எழுதும்போதெல்லாம் பலர், பாஜகவையும், நரேந்திர மோடியையும் உள்நோக்கத்துடன் விமர்சிப்பதாக என் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அப்படிச் சொன்னவர்கள் எல்லாம் இப்போது எங்கே தங்கள் முகத்தை வைத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை.

ஒரே இரவில் பணமதிப்பிழப்பு செய்து நாட்டையே நடுத்தெருவில் நிறுத்தியது மற்றும் மணிப்பூர், கோவா, திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் திருட்டுத் தனமாக ஆட்சியைப் பிடித்தது மட்டுமே நரேந்திர மோடியின் ஆகப்பெரும் சாதனை.

ஆட்சி அதிகார வெறிக்கு தமிழகம் ஒருபோதும் இரையாகாது என்பதாலேயே பாஜக அரசு, தமிழகத்தின் மீது மறைமுக பொருளாதார தடையை விதிக்கிறதோ என்று கூட ஐயுறுகிறேன்.

காவிரி விவகாரம் என்பது வெறும் நீராதாரம் மட்டுமே அல்ல. விவசாயிகள், விவசாயக் கூலிகள், அவர்களின் குடும்பங்கள் என பெரும் சமூகத்தின் பிரச்னை என்பதை நடுவண் அரசு ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.

ஒரே இரவில் பணமதிப்பிழப்பு செய்து நாட்டையே நடுத்தெருவில் நிறுத்தியது மற்றும் மணிப்பூர், கோவா, திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் திருட்டுத் தனமாக ஆட்சியைப் பிடித்தது மட்டுமே நரேந்திர மோடியின் ஆகப்பெரும் சாதனை.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு நிகரானது என்று சொல்லப்பட்டுவிட்டது. நடுவர் மன்றம் சொன்ன நீர்ப்பங்கீட்டு அளவு மட்டுமே கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்ட இறுதித்தீர்ப்பில் குறைக்கப்பட்டு உள்ளது.

நடுவர் மன்ற தீர்ப்பில் சொல்லப்பட்ட மற்ற அம்சங்கள் தொடர வேண்டும் என்பதுதான் உச்ச நீதிமன்ற இறுதித்தீர்ப்பின் சாராம்சம். ஆனால், நயவஞ்சகமாக பாஜக அரசு கடைசி நாளில் ‘ஸ்கீம்’ என்பதன் அர்த்தம் புரியவில்லை என்பது மிகப்பெரும் சதியாகவே கருதுகிறேன். பாஜக அரசும், பிரதரமர் மோடியும் நரித்தந்திரத்தில் ஈடுபட்டதாகக் கூறி நரியினத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.

ஒரே மொழி, ஒரே இந்தியா முழக்கத்தை முன்வைக்கும் பாஜக முன்வைக்கிறது. ஆனால் அதன் நயவஞ்சகமோ, தனித்தமிழ்நாட்டுக்கான அவசியத்தை நோக்கி உந்தித்தள்ளுவதாகவே பார்க்கிறேன்.

ஆமாம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு நடுவண் அரசும், கர்நாடகா அரசும் கட்டுப்படாதபோது, எந்த ஒரு மாநில அரசுகளும், தனி மனிதர்களுமே யாதொரு நீதிமன்ற அமைப்புக்கும் கட்டுப்படத் தேவையில்லையே!. போலியான ஜனநாயக அமைப்புகளுக்கு யாருமே கட்டுப்படத் தேவையில்லையே?

தண்ணீர் பிரச்னைக்காக விவசாயிகள் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டும் என்றில்லை. நீரின்றி அமையாது உலகு என்பதை வெகுசன மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. இத்தனை நாளும் தமிழ்நாடு உறங்கும் எரிமலையாக இருக்கலாம்; ஆனால் காவிரி விவகாரத்தில் தமிழகம் மாபெரும் யுகப்புரட்சியிலும் கிளர்ச்சியிலும் ஈடுபடுவதற்கான சூழல் கனிந்துவிட்டதாகவே கருதுகிறேன்.

 

– பேனாக்காரன்.