Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரஜினிக்கு சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு; லதா ரஜினிகாந்த் வழக்கு!

பணமதிப்பிழப்புத் திட்டத்தை நரேந்திர மோடி அறிவித்தபோது, அதை வரவேற்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், அந்த திட்டத்தால்தான் வருமானம் பாதிக்கப்பட்டதாக அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், இந்த வளாகத்தில் உள்ள ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, அதில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

இதற்காக அந்தக் கடைக்கு அவர் மாதம் 3,702 ரூபாய் வாடகை செலுத்தி வந்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் கடையின் வாடகையை உயர்த்தியது.

இதுகுறித்து மாநகராட்சி சார்பில் லதா ரஜினிகாந்திற்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், மார்ச் மாதம் முதல் 21,160 ரூபாய் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் திடீரென்று ஆறு மடங்கு வரை வாடகை உயர்த்தியதால் லதா ரஜினிகாந்த் கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து மாநகராட்சியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்தார்.

லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் என்ற வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:

சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையிலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் கடந்த பல வருடங்களாக நாங்கள் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அதில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறோம். இதுவரை அதற்கு மாத வாடகை கட்டணம் ரூ.3,702 செலுத்தி வருகிறோம்.

இந்நிலையில் திடீரென கடை வாடகையை மாநகராட்சி பல மடங்கு உயர்த்தியுள்ளது. மார்ச் மாதம் முதல் முன் தேதியிட்டு வாடகை கட்டணம் ரூ.21,160 செலுத்த வேண்டும் என்று அறிவித்து உள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு எங்களுக்கு பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வாடகை கட்டண உயர்வு தொடர்பாக முறையாக ஆய்வு நடத்த வேண்டும்.

அதோடு வாடகை கட்டண உயர்வை ரத்து செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். மேலும் பழைய கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரே நிகழ்வின் தன்மை ஒவ்வொருவர் பார்க்கும் அல்லது உணரும் கோணத்திற்கேற்ப மாறுபடுகிறது. இதற்கு ரஜினிகாந்தும், அவருடைய மனைவி லதாவும்கூட விதிவிலக்கு அல்ல.