Wednesday, May 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வடிவேலு அவதாரம் எடுக்கும் தமிழக அமைச்சர்கள்; ”பாவம் அவங்களே கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க!”

சினிமாவில் வரும் காமெடி காட்சிகளை விட நம்ம ஊர் அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சும், அசட்டுத்தனமான நடவடிக்கைகளும் நம்மை நகைச்சுவையால் திணறடிக்கின்றன என்றால் மிகையாகாது.

நடிகர் விஜய் நடித்த ‘காவலன்’ படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு, ஏதாவது குண்டக்க மண்டக்க சொல்லிவிட்டு ‘பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு’ என அப்பாவியாகக் கூறுவார். அதேபோல்தான் அமைந்திருக்கிறது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சும்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ”தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் உள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து கொசுக்கள் கட்டுக்கடங்காமல் உள்ளது. அதை கட்டுப்படுத்த எய்ம்ஸ் போன்ற சிறப்பு மருத்துவர்களை அனுப்பி வையுங்கள்” என்று சொன்னதாகக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியா? அல்லது மன்மோகன் சிங்கா? எனத் தெரியாமல் அப்பாவியாக பேசினார் திண்டுக்கல் சீனிவாசன். அந்தக் கூட்டம் முடியும் வரையிலும்கூட அவர் தன் தவறை உணரவே இல்லை. திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

ஏற்கனவே ஜெயலலிதா மரணம் குறித்து பேசுகையில், ”அப்போலோவில் அம்மா இட்லி சாப்பிட்டாங்க. சட்னி சாப்பிட்டாங்கனு பொய் சொன்னோம். அவங்க இட்லியும் சாப்பிடல. சட்னியும் சாப்பிடல,” என்றார். அவருடைய பேச்சைத் தொடர்ந்தே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கும் அளவுக்கு விவகாரம் பெரிதாக உருவெடுத்தது.

நடிகர் விவேக் ஒரு படத்தில், ‘யாருமே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்துற…?’ எனக் கேட்பார். அதேபோல் வெகு சிலரே இருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, மூதாட்டியைப் பார்த்து, ‘ஏய் கெழவி கொஞ்சம் பேசாம இரு,’ என்று அதட்டினார். அதன் வீடியோ காட்சிகளும் இப்போது வைரல் ஆக உலா வருகிறது.

இவர் மட்டுமல்ல. மேலும் சில அமைச்சர்களும் ஏடாகூடமாக பேசி வருவதும் தமிழகத்தில் அண்மைக் காலமாக அரங்கேறி வருகிறது.

நதிகள் இணைப்பு குறித்து ஈஷா அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி மணிரத்னம், கர்நாடக பாடகி சுதா ரகுநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.

அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மூன்று பேருமே சுதா ரகுநாதன் பெயரை தவறாகவே உச்சரித்தனர். இத்தனைக்கும் மூவருமே அழைப்பிதழில் அச்சிடப்பட்ட பெயரை பார்த்துப் படித்தும் தவறாகவே கூறினர்.

திண்டுக்கல் சீனிவாசன் சுதா ரகுநாதனை, ‘சுதா ரங்கநாதன்’ என்றதுடன், அவரை பரத நாட்டியக் கலைஞர் என்றும் கூறினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘சுதா ரகுராமன்’ என்றும், ஓ.பன்னீர்செல்வம் அவரை, ‘சுதா ரங்குநாதன்’ என்றும் கூறினார்.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் அளவுக்கு அதிகமாக வறுபட்ட ‘தெர்மாகோல்’ புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘வீடுகளில் சாணி மெழுகினால் கொசுக்களே வராது. டெங்குவை ஒழிக்க அதுதான் சிறந்த வழி,’ என்று சிரிக்காமல் சீரியஸாக ஒரு யோசனையை முன்வைத்தார்.

”கொசு கடிக்காமல் இருக்க எல்லோரும் கொசு வலை ஆடை அணிய வேண்டும்” என்றும், ”இந்த ஆண்டு மழை அதிகமானதால் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது” என அப்பாவித்தனமாக அவர் சொல்லும் கருத்துகள் ஆளும்கட்சி மீது அதிருப்தி ஏற்படுத்தினாலும், செல்லூர் ராஜூவை நகைச்சுவை நடிகராகவே இணையவாசிகள் பார்க்கின்றனர். இன்றைய தேதியில் செல்லூர் ராஜூ எது சொன்னாலும் அதை ட்விட்டரில் ஹேஷ்டேக் செய்ய பெரும் ரசிகர் பட்டாளமே (!) இருக்கிறது என்றால் பாருங்களேன்.

இப்படித்தான் அண்மையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை மரணம் அடைந்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார். அதைப்பற்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ”ஹெச்.ராஜாவின் தந்தை இறப்புக்காக முதல்வர் வாழ்த்துச்செய்தி அனுப்பி இருக்கிறார்,” என்றார்.

இவர்கள் எல்லாம் இப்போதுதான் இப்படியா அல்லது எப்போதுமே இப்படித்தான் பேசுவார்களா? என வியக்கும் அளவுக்கு அவர்களின் பேச்சும் செயலும் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தனிப்பட்ட முறையில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்காமல் இருந்தனர். தங்களது பணிவையும், விசுவாசத்தையும் காட்டும் விதமாக ஜெயலலிதா ஹெலிகாப்டரில் பறந்து வரும்போதுகூட கீழே இருந்து கைகூப்பி வணக்கம் தெரிவிப்பதும், அவர் வரும் காரின் டயரை தொட்டுக் கும்பிடுவதுமாக இருந்த அதிமுகவினர், இப்போது ஊடகங்கள் முன்பும், பொதுவெளியிலும் உளறிக்கொட்டுவது மக்களிடையே அதிருப்தியையும், அதேநேரம் புன்முறுவலையும் ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் வடிவேலு விஷாலுடன் ‘கத்தி சண்டை’, விஜய்யுடன் ‘மெர்சல்’ என என்னதான் ரீ-என்ட்ரி கொடுத்து விட்டாலும், அவருடைய காமெடி காட்சிகள் பெரிதாக எடுபடவில்லை. நடிகர் வடிவேலு, யதார்த்த வாழ்வில் இருந்துதான் தனக்கான காமெடி காட்சிகளை உருவாக்குவதாக அடிக்கடி கூறுவார்.

அமைச்சர்களின் பேட்டிகள், வடிவேலுவின் கூற்றைத்தான் மெய்ப்பிக்கின்றன. வடிவேலுவின் வெற்றிடத்தை தமிழக அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் நிரப்புவதாகவும் வெகுசன மக்கள் கருதுகின்றனர்.