Thursday, May 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: 10 ரூபாய்க்கு 5 தோசை; ரூ.30க்கு முழு சாப்பாடே கிடைக்கும்!

-சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை-

சட்டைப்பையில் வெறும் 20 ரூபாய் இருந்தால்போதும் வயிறார சாப்பிடலாம். முப்பது ரூபாயில் பொரியல், அப்பளம் சகிதமாக முழு சாப்பாடே சாப்பிட முடியும். இதெல்லாம் அனேகமாக சேலத்தில் மட்டுமே சாத்தியமாகக்கூடும் என்பதே நிதர்சனம்.

 

 

சேலம் நகராட்சி, தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய மாநகராட்சியாக 1994ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும், தனிநபர் வருவாய் அடிப்படையில் பெரிய முன்னேற்றங்கள் இல்லை. தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆய்வில், சேலம் மக்களின் தனிநபர் வருவாய் 2004-05 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.29271 ஆக இருந்தது.

 

 

இந்த வருவாய் ஐந்து ஆண்டுகளில், 2010-11 காலக்கட்டத்தில் ஆண்டுக்கு ரூ.48802 ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது சேலம் மக்கள் மாதத்திற்கு சராசரியாக ரூ.4067 பொருளீட்டுகின்றனர். இதை இப்படியும் சொல்லலாம்… அவர்கள் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.135 வருவாய் ஈட்டுகின்றனர் என்றும் கருதலாம்.

 

இதே விகித அடிப்படையில் கணக்கிட்டால்கூட சேலம் மக்களின் தற்போதைய ஆண்டு சராசரி தனிநபர் வருமானம் ரூ.53 ஆயிரத்தைத் தாண்டாது. அதாவது இன்னும் நாளொன்றுக்கு ரூ.150க்கும் குறைவாகவே பொருளீட்டக்கூடிய மக்கள் இங்கு அதிகம். இதை ஒரு வளர்ச்சியாக கருத முடியாது.

 

லட்சுமி

 

தனிநபர் வருவாய் உயர்ந்துகொண்டுதானே இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதைவிட பணவீக்கமும், இதர அத்தியாவசிய பொருள்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்திருப்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

சேலம் மாநகரம் எப்போதுமே முரண்பட்ட அம்சங்கள் கொண்டது. கோடீஸ்வரர்கள் நிறைந்த செவ்வாய்பேட்டை, ஃபேர்லேண்ட்ஸ் மாதிரியான இடங்களும் உண்டு; அன்றாடங்காய்ச்சிகள் நிறைந்த கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை மாதிரியான இடங்களும் உண்டு. இருவேறுபட்ட எக்ஸ்ட்ரீம் எல்லைகளைக் கொண்டது.

 

இங்கு ஒரு வேளை உணவுக்கு நபருக்கு ரூ.1000 செலவழிக்கவும் முடியும். அதற்கான உணவகங்களும் உள்ளன. அதற்கு அப்படியே நேர்மாறாக ஒரு வேளைக்கு நபருக்கு வெறும் 20 ரூபாய் இருந்தால் போதும் வயிறாற பசியாறிக்கொள்ளவும் முடியும். அதுவும் சுவையாக.

 

 

தினக்கூலிக்குச் செல்லும் தொழிலாளர்களின் பசி தீர்க்கும் அட்சயபாத்திரங்களாக தள்ளுவண்டிக்கடைகள், கையேந்தி பவன்கள், தட்டுக்கடைகள் இங்கே ஏராளம். மாநகரில் பரவலாக இருக்கின்றன.

 

அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, கிச்சிப்பாளையம் போன்ற பகுதிகளில் வீ¦ட்டுடன் இணைந்த உணவகங்கள் ஏராளம். வீட்டு முற்றத்திலோ, அல்லது தட்டுக்கடையாகவோ வைத்திருக்கும் உணவகங்களில் எப்போதும் விலை மலிவான உணவு கிடைக்கும் என்பதை உத்தரவாதமாகச் சொல்லலாம்.

 

அம்மாபேட்டை ஜோதி டாக்கீஸ் செல்லும் வழியில் லட்சுமி உணவகம் இருக்கிறது. லட்சுமியக்கா கடை எங்கே? என்று அப்பகுதியில் ஒரு குழந்தையைக் கேட்டாலும்கூட சொல்லிவிடும். அந்தளவுக்கு லட்சுமி (46) அக்காவும், அவருடைய உணவகமும் ரொம்பவே பிரபலம். 11 ஆண்டாக உணவகம் நடத்தி வருகிறார்.

 

 

குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே காலை டிபனை தயார் செய்து விடுகிறார். இட்லி, தோசை, முட்டை தோசை, எண்ணெய் தோசை, குழிப்பணியாரம், மசால் தோசை என அனைத்தும் உண்டு. உணவுப்பொருள்களின் விலையைக் கேட்டால் அவ்வளவு எளிதில் யாராலும் நம்பிவிட முடியாதுதான். அந்தளவுக்கு விலை மலிவோ மலிவு.

 

பத்து ரூபாய்க்கு நான்கு தோசை தருகிறார் என்றால் விலை என்னவாக இருக்கும் என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பெரும்பாலும் அந்தப்பகுதியினர்தான் அவருடைய வாடிக்கையாளர் என்பதால், யாராவது இருபது ரூபாய்க்கு தோசை கேட்டால் தயங்காமல் 10 தோசைகூட பொட்டலம் கட்டித் தந்து விடுகிறார். அதாவது 10 ரூபாய்க்கு ஐந்து தோசையாக. முறுகலான எண்ணெய் தோசை 5 ரூபாய்.

 

அதேபோல, 10 ரூபாய்க்கு நான்கு இட்லி. முட்டை தோசை வெறும் 15 ரூபாய்தான். ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பின்னர்தான் இந்த விலை. அதற்குமுன் முட்டை தோசை ரூ.12க்குதான் கொடுத்து வந்தாராம். ஆனால், பெரும்பாலான தட்டுக்கடைகளில் வேக வைத்த முட்டையே ரூ.10க்கு விற்கப்படுகின்றன. முட்டை தோசை ரூ.20, ரூ.25, ரூ.30க்கு விற்கப்படும் நிலையில் லட்சுமி அக்கா கடையில் 15 ரூபாய் என்பது ஆச்சரியம்தான்.

 

யுவராஜ்

 

இவ்வளவு குறைந்த விலை இருந்தும்கூட, உணவுப் பொருள்களில் சேர்க்க வேண்டிய எந்த விதமான உபபொருள்களையும் அவர் குறைப்பதில்லை. சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என மூன்று வகைகளும் எந்த நாளும் உண்டு.

 

இப்போது அவர் உணவகம் நடத்தி வரும் இடத்திற்கு மாதந்தோறும் வாடகை கொடுத்து வருகிறார். 10 ஆண்டுக்கு முன்பு வரை அந்த இடத்தின் உரிமையாளரும் அவர்தான் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

 

இந்த கடை நடத்திதான் மூத்த மகன், மகளின் திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார். இன்னொரு மகனை படிக்க வை க்கிறார். இவருடைய கணவர் தறி நெசவுத்தொழிலுக்குச் செல்கிறார். அவர் வேலைக்குச் செல்லும் முன், மனைவிக்கும் ஒத்தாசையாக இருக்கிறார்.

 

 

”சமைக்கத் தேவையான விறகு,
காய்கறிகள், இதர பொருட்கள்,
பாத்திரங்கள் கழுவுவதற்தற்கான
ஆள் கூலி என எல்லா
செலவுகளும் போக எனக்கு
தினமும் என் கூலிதான் மிஞ்சும்.
எங்கேயாவது வேலைக்குப்
போனால் என்ன சம்பாதிக்க
முடியுமோ அந்தக் கூலிதான்
இதிலேயும் கிடைக்குது.

 

இந்த கடை இருப்பதால்
இங்கு சமைக்கும் உணவையே
சாப்பிட்டுக்கறோம். இது
கொஞ்சம் கஷ்டமான
தொழில்தான்னாலும்
ஒருத்தர்கிட்ட போய்
அடிமையாக வேலை செய்யறத
விட, இது பரவால,”
என்கிறார் லட்சுமி

 

இத்தனை மலிவாகக் கிடைத்தும் இவரிடமும் கடன் சொல்லிப் போவோரும் உண்டு. பெரும்பாலும் யாரும் ஏமாற்றுவதில்லை. மாதம் ஆயிரம் ஓய்வூதியம் பெறக்கூடிய முதியோர்கள் சிலரும் கடனுக்குச் சாப்பிடுகின்றனர். அவர்களுக்கு உதவித்தொகை கிடைத்ததும், லட்சுமியக்காவின் கடனை அடைத்து விடுகின்றனர். யார் யார் எவ்வளவு பாக்கி தர வேண்டும் என்பதை அவர் சுவரில் எழுதி வைத்திருக்கிறார்.

 

 

ஆட்டோ ஓட்டுநரான
சந்தோஷ் கூறுகையில்,
”கையில காசு இருக்கவங்க
அதுக்கேத்த மாதிரி எங்கே
வேணா சாப்பிடலாம்.
இங்க விலை கம்மியா
இருந்தாலும், ருசிக்கு
குறைவில்ல. வயிறும்
கெட்டுப்போகாது. எங்களப்போல
ஆளுங்களுக்கு லட்சுமியக்கா
கடைதான் சரிப்பட்டு வரும்.
கையில காசு இருந்தா
கொடுப்போம். இல்லேனா,
கடன் சொல்லிட்டுப் போய்டுவோம்.
இந்த வசதி எல்லா கடையிலும்
கிடைக்குமா…” என்றவர், தான்
சாப்பிட்டதை கணக்கில்
வைத்துக்கொள்ளுமாறு
மறக்காமல் கூறிவிட்டுச்
சென்றார்.

 

ஜமுனா – நித்தியானந்தம்

 

அம்மாபேட்டை, பொன்னம்மாப்பேட்டையில் மலிவு விலை உணவகங்கள் இருப்பதற்கு இன்னொரு பிரதான காரணமும் உண் டு. இப்பகுதிகளில் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளர்கள் என தினக்கூலித் தொழிலாளர்கள் அதிகம். இந்தப்பகுதிகள் என்றில்லை. சேலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இதுபோன்ற மலிவு விலை உணவகங்கள் இருக்கின்றன.

 

தட்டுக்கடையாக இல்லாமல், முறையான பதிவு பெற்று அம்மன் ஹோட்டல் என்ற பெயரில் வீராணம் மெயின் ரோட்டில் உணவகம் நடத்தி வரும் யுவராஜ், ”முழு சாப்பாட்டை 30 ரூபாய்க்கு தருகிறார். சாப்பாடுக்கு சாம்பார், ரசம், மோர், பொரியல், ஊறுகாய் எல்லாம் உண்டு. கடையில் சாப்பிடும்பட்சத்தில் கறிக்குழம்பும் வாங்கிக் கொள்ளலாம்.

 

இவருடைய கடையில் பரோட்டா ரூ.8, தோசை ரூ.7, இட்லி ரூ.5, முட்டை தோசை ரூ.20, குஸ்கா ரூ.30க்கு விற்பனை செய்கிறார்.

 

”இந்த ஏரியா மக்களை
நம்பி நான் இருக்கிறேன்.
என்னை நம்பி அவர்கள் இருக்கிறார்கள்.
லாபம் என்பது இரண்டாம் பட்சம்தான்.
திருப்திதான் முக்கியம். சராசரியாக,
ஒரு நாளைக்கு ரூ.4000க்கு
வியாபாரம் நடக்கும்.
சப்ளையர்கள், சரக்கு மாஸ்டர்,
மூலப்பொருள்கள், மின்சாரம்
என எல்லா செலவுகளும் போக
எனக்கும் ஒரு ஆள் கூலிதான்
கிடைக்கும்.

 

என்னிடம் வேலை பார்க்கும்
தொழிலாளி பெறும் கூலிக்கும்
எனக்குக் கிடைக்கும்
வருவாய்க்கும் பெரிய
வித்தியாசம் இல்லை. ஆனால்,
நான் இந்த கடையின் முதலாளி.
விலையை ஏற்றினால்
இங்கு வியாபாரம் பண்ண முடியாது.
விலையைக் குறைத்து,
விற்பனையை அதிகப்படுத்திக்கிறோம்.
அதனால்தான் எங்கள் கடைக்கு
மாமூல் கஸ்டமருங்க
அதிகமாக இருக்காங்க,”
என்கிறார் யுவராஜ்.

 

பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் எதிரில் சின்னக்கடை வீதி செல்லும் வழியில் உள்ள ஓர் உணவகத்தில் பரோட்டா, இட்லி, தோசை எல்லாமே 5 ரூபாய்க்குக் கிடைக்கும். யுவராஜ், லட்சுமி போன்ற மலிவு விலை டிபன் கடைகள், முழுநேர உணவகங்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் கலவை சாத கடைகளும் ரொம்பவே பிரபலம்.

 

சேலம் 5 ரோடு ரவுண்டானா அருகில் இருக்கும் முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் காபி பாருடன் இணைந்த உணவகத்தில் கலவை சாதம் ச்சும்மா பிச்சுக்கிட்டு ஓடும். 20 ரூபாய் இருந்தால் போதும் தக்காளி, எலுமிச்சை, வெஜிடேபிள் பிரியாணி, தயிர் என மனதுக்குப் பிடித்ததை சாப்பிட முடியும். வயிறு நிறைந்து விடும்.

 

பெரும்பாலும் கலவை சாதத்தைப் பொறுத்தவரை 20க்குக் குறைவாக யாரும் தருவதில்லை. ஆனால், சேலம் பட்டைக்கோயில் பாவடி மகளிர் பள்ளி அருகே கடை வைத்திருக்கும் நித்தாயனந்தம் அப்படி அல்ல.

 

இவரிடம் தக்காளி, எலுமிச்சை, புளி தயிர், சாம்பார், வெஜிடேபிள் பிரியாணி, புதினா என பல வகையான கலவை சாதம் உண்டு. வெஜிடேபிள் பிரியாணி, புதினா ஆகியவற்றை ரூ.20க்கும், மற்ற வகை உணவுகளை ரூ.15க்கும் விற்கிறார். விலை குறைவு என்பதால், அளவு குறைவாக இருக்குமோ என்று எண்ணிவிடத் தேவையில்லை.

 

உடல் உழைப்புத் தொழில் செய்யும் ஒருவருக்கு ஒரு பொட்டலம் உணவு போதுமானது. தரத்திலும், கொள்ளளவிலும் நித்தியானந்தமும், அவருடைய மனைவி ஜமுனாவும் சமரசம் செய்து கொள்வதில்லை. மதியம் 12 மணிக்குக் கடையைத் திறக்கின்றனர். மூன்றரை மணி நேர வியாபாரம். அத்தனையும் பஞ்சாக பறந்துவிடும்.

 

 

சுவை அதிகம்; விலை மலிவு. உள்ளூர்க்காரர் போன்றவற்றால் அப்பகுதி மக்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறார்.

 

”நானும் ஹோட்டல்
கடையில்தான் வேலை
செய்து வந்தேன்.
ஒரு கட்டத்தில்,
நாமே கடை போடலாம்
என துணிந்து இறங்கினேன்.
ஆரம்பத்துல நானும்,
என் மனைவியும் தனித்தனியாக
வேறு வேறு இடத்தில்
தள்ளுவண்டிக் கடைகள்
வைத்திருந்தோம். பிறகுதான்
இங்கேயே ஒரே கடையாக
நடத்திட்டு இருக்கோம்.
இந்த தொழிலில் சம்பாதித்துதான்
வீடு வாங்கினோம். எங்கள்
பிள்ளைகளை படிக்க
வைத்தோம்,” என்கிறார்
நித்தியானந்தம்.

 

ஏழைகளின் பசி தணிக்கும் அட்சயப்பாத்திரங்கள் சேலத்தில் ஏராளம். பசிக்காகச் சாப்பிட வருபவர்களை இதுபோன்ற மலிவு விலை உணவகங்கள் வயிறையும், மனதையும் ஒருசேர நிறைத்து அனுப்புகின்றன என்றால் மிகையில்லை.

 

– பேனாக்காரன்.

பேச: 9840961947
படங்கள்: நாடோடி.