Monday, June 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. உள்கட்சி பிளவுகளால், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கையறு நிலையில் இருக்கிறது.

முத்துக்குமார், செங்கொடி ஆகியோரின் உயிர் தற்கொடைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதேபோல், மருத்துவப் படிப்பு கானலான விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் காரணமாக, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது.

கடந்த சில நாள்களாகவே வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக ‘மெரீனாவில் ஒன்றுகூடுவோம்’ என்ற பெயரில் தகவல்கள் பரவின. இதனால் உஷார் அடைந்த தமிழக காவல்துறை, மெரீனா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. கடற்கரை பகுதியில் குழுக்களாக சுற்றுவோரிடம் சந்தேகத்துடன் விசாரித்தது. குறிப்பாக மாணவர்கள் நான்கு பேர் கூடினாலே காவல்துறையினர் அவர்களை கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

இந்நிலையில் காவல்துறைக்கு போக்குக் காட்டிவிட்டு, கல்லூரி மாணவர்கள் மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று (செப். 6) அஞ்சலி செலுத்தச் செல்வதுபோல் சென்றனர். சில மணி நேரத்தில் மாணவர்கள் அதிகளவில் திரண்டனர். அங்கேயே அமர்ந்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் மேலிடத்திற்கு தகவல் அளித்தனர். கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டாலும் அங்கு மாணவர்கள் கூடுவதை கட்டுப்படுத்த இயலவில்லை.

 

‘ரத்து செய் ரத்து செய்! நீட் தேர்வை ரத்து செய்!’, ”நீதி வேண்டும் நீதி வேண்டும் அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும்!”, ‘பறிக்காதே பறிக்காதே தமிழக உரிமையை பறிக்காதே!’ என்று கோஷங்களை எழுப்பினர். மாணவர்களுடன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து கொண்டனர்.

போராட்டக் குழுவினருடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை நீட் தேர்வுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் அதனால் அவருடைய நினைவிடத்தில் வந்து போராட்டம் நடத்துவதாகவும் மாணவர்கள் கூறினர்.

அனிதா மரணம், பெரும் சலனத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”நீட் தேர்வில் தமிழக அரசுக்கும் உடன்பாடில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால்தான் வேறு வழியின்றி நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது,” என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா நினைவிடம் மட்டுமின்றி சென்னை கிண்டி கத்திப்பாரா பாலத்திலும் நந்தனம் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், கோவை அரசுக்கல்லூரி மாணவர்கள் திடீரென்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, விரைவில் கலைந்து சென்று விடுவோம் என்றனர். ஆனாலும் சிறிது நேரத்தில், நீட் தேர்வை ரத்து செய்யும்வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, திருவாரூரில் அரசுப்பள்ளி மாணவர்களும் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், மனித சங்கிலி போராட்டமும் நடத்தினர். இதற்கிடையே, மாணவி அனிதாவின் சொந்த ஊரான குழுமூரில் அனிதாவின் உறவினர்கள், கிராம மக்கள் திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் நீட் தேர்வுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ள நிலையில் அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்மீது மெரீனாவில் கூடியிருந்தவர்கள் மீது கடைசிக்கட்டத்தில் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதுபோன்ற நடவடிக்கையில் இறங்கவும் தயக்காம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல்களால் ஆளும் தரப்பு பெரும்பான்மையை இழந்து வருகிறது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, சட்டம் – ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, ஆட்சி கலைக்கப்படும் சூழலும் உள்ளதால், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தடுமாறி வருவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மேலும் வலுக்கும் எனத்தெரிகிறது.

சிஎம்சி அதிரடி: நீட் களேபரங்களுக்கு இடையே, வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவக்கல்லூரி நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளது. இந்தக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பிரிவில் 100 இடங்களும், பட்ட மேற்படிப்பில் 61 இடங்களும் உள்ளன. நீட் தேர்வால், கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பணிபுரிவது தடுக்கப்படும் அபாயம் உள்ளது. மருத்துவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்கிறதா என்பதை நீட் தேர்வு மூலம் கண்டுபிடிக்க முடியாது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் சிஎம்சி கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.