Saturday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக். 18, 2017) 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது ‘மெர்சல்’.

நடிப்பு: விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா, ‘யோகி’ பாபு. இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; ஒளிப்பதிவு: விஷ்ணு; தயாரிப்பு; ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ்; இயக்கம்: அட்லீ.

படத்தின் துவக்கத்தில் சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, போட் கிளப் ஆகிய இடங்களில் மருத்துவத்துறை தொடர்பான ஆட்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இதற்கிடைய பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் விஜய், அங்கு ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த அரங்கிலும் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.

இதைத் தொடர்ந்து சத்யராஜ், இந்த கொலைகளுக்குக் காரணம் விஜய்தான் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்கிறார். உண்மையில் இந்த கொலைகளைச் செய்தது யார்? அதை விஜய் எப்படி கண்டுபிடிக்கிறார்? கொலையாளியின் நோக்கம் என்ன என்பதை 2 மணி நேரம் 50 நிமிடங்களில் சொல்லி முடிக்கிறது மெர்சல்.

எடுத்துக்கொண்ட கதைக்கரு அருமை. அரசு மருத்துவமனைகளின் சேவை ஏன் தரமின்றி போகின்றன? தனியார் மருத்துவமனைகள் பெருக என்ன காரணம்? அதன் பின்னணியில் உள்ள அரசியலையும், மருத்துவத்துறையில் நிகழும் ஊழலையும் இந்தப் படம் பேசுகிறது.

இப்படி ஒரு விஷயத்தை அதுவும் ஒரு கமர்ஷியல் ஹீரோவை வைத்துச் சொல்லும் துணிச்சலுக்காகவே இயக்குநர் அட்லீயையும், அதை திரையில் மிரட்டலாக சொல்லிய நடிகர் விஜயையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

ஆனாலும், இயக்குநர்கள் சங்கர், முருகதாஸ் ஆகியோரின் முந்தைய படங்களின் சாயல்கள் மெர்சல் படத்திலும் இடம் பெறுவதை நம்மால் உணராமல் இருக்க முடியாது. ஏன் அட்லீ? இயக்குநர் அட்லீ என்றாலே, பழைய கள்ளை புதிய மொந்தையில் கொடுப்பார் என்பதற்கு அவருடைய ‘ராஜாராணி’, ‘தெறி’ படங்களே ஊதாரணம். மெர்சல் படமும் விதிவிலக்கு இல்லை.

இருப்பினும், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமான காட்சிகளால் கதையைச் சொல்வதில் அட்லீ கைதேர்ந்தவர் என்பதை மெர்சல் படத்தை பார்க்கும்போது உணரலாம்.

இந்த படத்தில், தளபதி என்ற பாத்திரத்தில் கிராமத்து இளைஞர் மற்றும் டாக்டர் மாறன், மேஜிக் கலைஞர் என மூன்று பாத்திரங்களில் விஜய் நடித்திருக்கிறார்.

படத்தின் முதல் பாதி, சில டுவிஸ்ட், சென்டிமென்ட், கொஞ்சம் காமெடி என மெதுவாக நகர்கிறது. வடிவேலு காமெடியனாக மட்டுமின்றி, குணச்சித்திர பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

முதல் பாதியில் சொல்லப்பட்ட டுவிஸ்ட்டுகளை இரண்டாம் பாதியில் அவிழ்க்கிறார் விஜய். இரண்டாம் பாதியில் வரும் ஃபிளாஷ்பேக்கில் நித்யாமேனன் காட்சிகள் இடம் பெறுகின்றன. அவரும் கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக செய்து முடித்திருக்கிறார். விஜய்க்கும், நித்யாமேனனுக்கும் ‘கெமிஸ்ட்ரி’ ஒத்துப்போகிறது.

பாடல் வெளியீட்டின்போதே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ‘ஆளப்போறான் தமிழன்…’ என்ற பாடல், படத்தின் துவக்கத்தில் ஹீரோ அறிமுக காட்சியில் இடம்பெறும் என்று ரசிகர்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால், இந்தப்பாடல் படத்தின் இரண்டாம் பாதியில்தான் இடம் பெறுகிறது.

இந்தப்பாடலுக்கு திரையரங்குகளில், ரசிகர்களிடம் எழும் கரவொலி அடங்க வெகு நேரமாகிறது. காதை கிழிக்கும் அளவுக்கு விசில் சத்தம். தமிழர்கள் சாதிக்கும் இடங்களில் எல்லாம் இனி, ஆளப்போறான் பாடல் இடம்பெற்றாலும் ஆச்சர்யப்ப டுவதற்கில்லை. நா.முத்துக்குமாரின் வெற்றிடத்தை இனி பாடல் ஆசிரியர் விவேக் நிரப்புவார் என எதிர்பார்க்கலாம்.

நட்சத்திரப் பட்டாளங்கள் அதிகமாக இருக்கும்போது எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிப்பது சவாலானது. அதனால்தானோ என்னவோ காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் இந்தப்படத்தில் ஊறுகாயாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். எஸ்.ஜே.சூர்யா கண்களை இமைக்காமல் பேசும் வசன காட்சியில் பலரின் கவனத்தை ஈர்க்கிறார். ஸ்பைடர் படத்தை அடுத்து, இதிலும் தனக்கான இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் எஸ்.ஜே.சூர்யா.

படத்தில் ஆங்காங்கே வரும் சில வசனங்கள், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை சாடுகின்றன. குறிப்பாக ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு பற்றிய வசனங்கள். கத்தி படத்தில் ஸ்பெக்ட்ரம், கோககோலா பற்றி பேசிய விஜய், இதில் சமகால அரசியலைப் பற்றி தைரியமாக பேசியிருப்பதே அவருடைய அடுத்தக்கட்ட நகர்வைக் காட்டுகின்றன. அட்லீ + விஜய் ஆகியோரின் துணிச்சலை பாராட்டலாம்.

வெளிநாட்டில் நடக்கும் மருத்துவர்கள் மாநாட்டிற்கு, வேட்டி, கருப்பு சட்டை அணிந்து செல்கிறார் டாக்டர் மாறன் பாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய். அந்த மாநாட்டிற்குச் சென்றபோது அவரை பாதுகாவலர்கள் உடைகளை களைந்து பரிசோதனை செய்கின்றனர்.

மாநாட்டில் தமிழில்தான் பேசுவேன் என்று பேசுகிறார். ‘தமிழனின் நிறத்தைப் பார்க்காதீர்கள். அவனது புத்தியை பாருங்கள்’ என்று பேசும் வசனமும் பெரிய அளவில் கைத்தட்டலை அள்ளுகிறது. அங்கு அவர் மனிதநேயத்தைப் பற்றி பேசுகிறார்.

இன்னோர் இடத்தில், ‘கடவுளுக்குக்கூட நாம மசுரத்தான் கொடுக்கிறோம். ஆனா டாக்டரை நம்பி நம்ம உசுரையே கொடுக்கிறோம்’ என்று பேசும் வசனமும் கவனிக்க வைக்கிறது.

மருத்துவத்துறை ஊழல் பற்றி பேசும் இந்தப்படத்தில், விபத்தில் சிக்கிய ஒருவருக்கு நேரும் சம்பவங்கள், முக்கியமான மருந்துகள் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமல் போனால் என்னாகும் என்பதை விளக்கும் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகள் எல்லாம் பழைய படங்களில் நாம் பார்த்துப் பழகிய காட்சிகளாகவே வந்து போகின்றன.

கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் நிச்சயம் பார்வையாளர்களை உறைய வைத்துவிடும். எனினும், மெர்சல் வெளியீட்டிற்கு முன்பு இந்தப் படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் அதில் ஓரளவுதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

படத்தில், மெச்சத்தக்க சில விஷயங்களும் உண்டு. ஒன்று, இசை. ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்பத் திரும்பக் கேட்கத்தூண்டும். அடுத்து, ஒளிப்பதிவாளர் விஷ்ணு. பிரம்மாண்டத்தை பார்வையாளனுக்கு எளிதில் கடத்தி விடுகிறார்.

பிளஸ் என்னென்ன?:

1. படத்தின் ஒட்டுமொத்த சுமையையும் விஜய்தான் சுமக்கிறார். ரசிகர்களுக்கு குறை வைக்காமல் திகட்ட திகட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார். அவருக்கு இயல்பாகவே வரும் காமெடியும் நடிப்புக்கு பலம் சேர்க்கின்றன. பாடல் காட்சிகளில் விஜய்யின் நடன அசைவுகள், இளம் நடிகர்களுக்கு சவால் விடுக்கும்.

2. இசை மற்றும் ஒளிப்பதிவு

3. நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா

மைனஸ் என்னென்ன?:

1. காஜல் அகர்வால், சமந்தா. இவர்கள் இல்லாவிட்டாலும் இந்தப்படத்தில் எந்த தொய்வும் இருந்திருக்காது.

2. படத்தின் முதல் பாதியில் சில காட்சிகளுக்கு கத்தரி போட்டிருந்தால், இன்னும் வேகம் எடுத்திருக்கும்.

காயா? பழமா?: ஒருமுறை பார்க்கலாம்.

 

– வெண்திரையான்.