Wednesday, May 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!

நிலவேம்பு குடிநீர், டெங்கு காய்ச்சலை தடுக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் இல்லாததால், அதை விநியோகிப்பதை நிறுத்தி வைக்குமாறு நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இணையவாசிகள் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சல் தாக்கம் இருந்து வருகிறது. சுமார் 12000 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல், இன்ன பிற இனம் காண முடியாத காய்ச்சல் காரணமாக கடந்த சில மாதங்களில் 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், டெங்கு காரணமாக 40 பேர் மட்டுமே இறந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுளது.

இதற்கிடையே, நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுவதாகவும், ரத்தத்தில் பிளேட்டிலெட் செல்கள் அதிகரிப்பதாகவும் அரசே கூறி வருகிறது. ஆனால், கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் நிலவேம்பு குடிநீர் குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று அரசுத்தரப்பு அறிவித்து உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நமது ‘புதிய அகராதி’ இதழுக்கு பேட்டி அளித்த, தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் இளங்கோ, நிலவேம்பு குடிநீர் டெங்குவை கட்டுப்படுத்தும் என்பதற்கான ஆராய்ச்சிப்பூர்வ தகவல்கள் ஏதுமில்லை என்று கூறியிருந்தார். அவருடைய கருத்தை, டெல்லியில் இருந்து தமிழகம் வந்துள்ள சிறப்பு மருத்துவர்கள் குழுவும் ஆமோதித்துள்ளது.

இது இப்படி இருக்க, நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆராய்ச்சியை அலோபதியார்தான் செய்ய வேண்டும் என்றில்லை. பாரம்பரிய காவலர்களே செய்திருக்க வேண்டும். பக்கவிளைவு என்பதும் பாரம்பரியம்தான்,” என்றும், ”ஆராய்ச்சி முடிவுகள் வரும் கிடைக்கும்வரை, நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க வேண்டுகிறேன். அதுவரை மற்ற பணிகள் தொடரட்டும்,” என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு வழக்கம்போல் இணையவாசிகள் கமல்ஹாசனின் கருத்தை ஆதரத்தும், கிண்டலடித்தும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், ”நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது. திரைத்துறையினர்தான் வேண்டுமென்றே நிலவேம்பு குடிநீர் பற்றி வதந்தி பரப்புகின்றனர்,” என்று கமல்ஹாசனின் பெயரை குறிப்பிடாமல் கருத்து தெரிவித்து இருந்தார்.

உண்மையில் நிலவேம்பு குடிநீர் பயனுள்ளதா இல்லையா என்பது குறித்து தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் இளங்கோவிடம் கேட்டோம்.

”நிலவேம்பு பற்றி சித்த மருத்துவர்கள் அக்பர் பாஷ், மணிவண்ணன் மற்றும் ஒருவர் உள்பட மூவர் குழு, ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். ஏ.பென்னிகுலேட்டா என்பது நிலவேம்பின் தாவரவியல் பெயர். இதன் இலைகளை காய வைத்து, அதை சில ஆண் எலிகளுக்கு 20 மி.கி. வீதம் தினமும் மாலை நேரத்தில் கொடுத்து வந்தனர். இப்படி தொடர்ந்து 6 மாதம் கொடுத்துள்ளனர்.

மருத்துவர் இளங்கோ

பிறகு அந்த எலிகளை சோதித்தபோது அவற்றின் விதைப்பைகள் சுருங்கி இருந்தன. விந்து உற்பத்தியும் நின்று போயிருந்தது. ஆண் எலிகள் மலட்டுத்தன்மை அடைந்திருந்தன. இந்த முடிவுகளை அவர்கள் 1990ம் ஆண்டில் வெளியிட்டனர். இதுபற்றி, ‘இண்டியன் ஜார்னல் ஆப் எக்ஸ்பரிமென்டல் பயாலஜி’ என்ற இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதைத்தான் இப்போது சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

நான் நிலவேம்பு கஷாயத்திற்கு எதிரானவன் அல்ல. நிலவேம்பு கஷாயம் என்பது ஒரு மருந்து என்பதை மறந்துவிட்டு, ஏதோ டீ ஊற்றிக் கொடுப்பதுபோல் சில அமைப்புகளும், அரசும் பல இடங்களில் காய்ச்சல் கண்டவர்களுக்கு கப்புகளில் ஊற்றிக் கொடுத்து வருவது வேடிக்கையாக இருக்கிறது.

நிலவேம்புக்கு டெங்குவை குணமாக்கும் திறன் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இதுவரை இந்திய மருந்து ஆராய்ச்சிக்கழகம் ஆய்வுக்கு உட்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை. எந்த ஒன்றையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்காத வரை மருந்தாக பரிந்துரைக்கக் கூடாது என்பதுதான் உலக விதி. ஆனால், தமிழக அரசாங்கமே நிலவேம்பு குடிநீரை பரிந்துரைப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. டெங்கு சர்ச்சையை கட்டுப்படுத்தும் ஆயுதமாக நிலவேம்பு குடிநீரை அரசு பயன்படுத்துகிறது.

அதை குடித்தால் பிளேட்டிலெட் அணுக்கள் அதிகரிக்கின்றன என்பதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அதேபோல் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகிறது என்பதும் ஏற்புடையதல்ல.

டெல்லியிலும், கேரளாவிலும் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள அரசுகள், நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யவில்லையே. அதற்குக் காரணம், கொசுக்கள் உற்பத்தியாவதை அந்த மாநில அரசுகள் முழுவீச்சில் செயல்பட்டன. அதனால் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழக அரசு, அதைச் செய்ய தவறிவிட்டது.

மலேரியா, யானைக்கால் வியாதிகளுக்கு காரணமான கொசுக்கள் பாதிக்கப்பட்டவரை கடித்துவிட்டு, ஆரோக்கியமானவரை மீண்டும் கடிக்கும்போது அவருக்கும் அந்த நோய்கள் தொற்றுகின்றன. ஆனால், டெங்குவை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் அப்படியல்ல.

டெங்கு பாதிப்பு உள்ள ஒருவரை கடிக்கும் ஏடிஸ் கொசுக்கள், டெங்கு வைரஸை முட்டை&கொசுப்புழு&கொசு வரை சந்ததிக்குக் கடத்திச்சென்று விடும். அதனால்தான் புதிது புதிதாக பிறக்கும் கொசுக்களிடமும் டெங்கு வைரஸ் கிருமிகள் இருக்கின்றன. இந்த அடிப்படை உண்மையை தமிழக அரசு புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் டிராபிகல் மெடிசின் புத்தக வழிகாட்டுதல்கள்படி செயல்பட்டாலே, அலோபதி மருத்துவத்தின் மூலம் டெங்கு காய்ச்சலை முழுமையாக குணப்படுத்திவிட முடியும்,” என்கிறார் மருத்துவர் இளங்கோ.

நிலவேம்பை வைத்து அரசியல் செய்யாமல், இப்போதாவது இந்திய அரசாங்கம் அதைப்பற்றிய முழுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.

– பேனாக்காரன்.