Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீட் தேர்வுக்கு கமல் சொன்ன தீர்வு!

கல்விக்கொள்கை வகுக்கும் உரிமை மாநில அரசுகளின் வசம் கொண்டு வந்தால், நீட் தேர்வு பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைத்துவிடும் என்று நடிகர் கமல்ஹாசன் யோசனை தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு போன்ற சமகால பிரச்னைகள் குறித்து டிவிட்டர் பக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மேடையை, அவ்வப்போது அரசியல் விமர்சன கருத்து சொல்லும் தளமாகவும் பயன்படுத்தி வருகிறார்.

கடந்த வார நிகழ்ச்சியின்போது, ‘நான் இனி அரசியல்வாதிகளை வெளியில் இருந்து விமர்சிக்கவோ நக்கல் செய்யவோ முடியாது. எனக்கு இனி முகமூடி தேவையில்லை,’ என்றுகூறி, அரசியல் களத்தில் இறங்கி விட்டதை வெளிப்படையாகவே சொன்னார். அந்த மேடையில், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு இரங்கலும் தெரிவித்தார். திங்கள்¢ முதல் வெள்ளிக்கிழமை வரை களைகட்டாத பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு, கமல்ஹாசன் வரக்கூடிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்றைய (செப். 9) பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் நீட் தேர்வு தொடர்பாக சில கருத்துகளை கமல்ஹாசன் கூறினார். அவர் பேசியது:

உங்களிடம் ஒரு சிறிய செய்தி. நீட் பற்றியது. பிக்பாஸ் மேடையில் எதற்கு அதைப் பற்றியெல்லாம் பேசுகிறீர்கள்? இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்று சிலர் சொல்லலாம். அப்படியே பொழுதை போக்கிவிட முடியாது. எனக்கு ஒரு கடமை இருக்கிறது. நமக்கு ஒரு கடமை இருக்கிறது. இன்று நம் பிள்ளைகள் தெருவில் நிற்கிறார்கள். நிறுத்தி விட்டோம். அங்கே நிற்கும் பிள்ளைகள் யார்? விளையும் பயிர்கள். விளையும் பயிர், தெருவில் முளைக்காது. விவசாயம் தெரிந்தவர்களுக்கு அது தெரியும்.

இதுக்கு என்னதான் சொல்லப்போறீங்க. அப்படியென்றால் போராட வேண்டுமா என்று கேட்டால், போராட வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது. நாம் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை எங்கோ தவற விட்டுவிட்டோம் என்பதுதான் என் பாமரத்தனமான கருத்து. என் கருத்து விமர்சனத்துக்கு உரியது. நல்ல விமர்சனமாக இருப்பின் சந்தோஷப்படுவேன். கடும் விமர்சனமாக இருப்பின், சரி… உங்களுக்கு தெரிந்த யோசனைகளை சொல்லுங்கள் என்று உங்களிடம் கேட்பேன்.

கல்வியை, கல்வித்திட்டங்களை வகுக்கும் பொறுப்பை மாநிலங்கள் கையில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பன்முகம், பல்மொழி என்றிருக்கும் இந்த நாட்டில் அந்த உரிமை அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இருந்தது என்று சில பெரியவர்கள் சொன்னார்கள். எங்கே தவற விட்டோம் என்று கேட்டபோது, எமர்ஜென்சியின் போது அதை மையத்தில் வைத்துக்கொண்டார்கள் என்று சொன்னார்கள். அதன்பிறகு திருத்தங்கள் கொண்டு வந்தார்களே. நம் தளைகள் எல்லாம் உடைக்கப்பட்டு, இனி எமர்ஜென்சி வராது என்றார்களே. அப்போது ஏன் திருத்தத்தை செய்யவில்லை என்று கேட்டேன். பதில் இல்லை. இந்தக் கேள்வியை உங்கள் முன்பும் வைக்கிறேன்.

மாநிலங்கள் கல்வித்திட்டங்கள் வகுக்கும் அந்தஸ்தை, பொறுப்பை, சக்தியை, பலத்தை தங்கள் கையில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இப்போது நடந்ததற்கு என்ன சொல்கிறீர்கள்? பக்கத்து மாநிலங்கள் எல்லாம் நீட் தேர்வை ஒத்துக்கொண்டார்களே. நீங்கள் மட்டும் ஒத்துக்கலையே என்று கேட்கலாம். அவர்கள் எல்லாம் தேவையான முன்ஜாக்கிரதை, தயார் நிலையில் இருந்தார்கள். அதனால் அவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடிந்தது. இங்கு அதற்கான எந்த ஏற்பாடுகளையும் நாம் செய்யவில்லை.

நாம் என்று சொல்லும்போது, அரசுதானே என்று சொல்லலாம். அப்படியெனில் மறுபடியும் நாம் அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டிருக்க வேண்டும். நான், அரசு என்று சொல்வது நம்மையும் சேர்த்துதான். இந்த குரலை நாம் இன்னும் முன்னாடியே ஆரம்பித்திருக்க வேண்டும். விழித்திருப்பது, இனி நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை. நம் கடமையும் கூட. ஒரு கடமையைச் செய்த சந்தோஷத்துடன் செல்கிறேன்.

இந்த மாதிரி ஒரு இடத்தில் சுயநலமாக சொல்கிறாரே என்று யாரும் சொல்லிவிட முடியாது. நான் பேசுவது சுயநலம் இல்லை. இனிமேல் கமலஹாசன் பள்ளிக்கூடம் போகப்போறதில்லை. இதுதான் என் பள்ளி. இங்குதான் நான் கற்றுக்கொண்டு இருக்கிறேன். என் கல்வி தொடர்கிறது. எந்த ‘நீட்’டும் என்னைத் தடுக்க முடியாது. ஆனால் நம் பிள்ளைகள் அப்படி கிடையாது. அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது திடீரென்று நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது மாநில பட்டியலில் இருந்து கல்வி, பொதுப்பட்டியலுக்கு ஓசையின்றி மாற்றம் செய்யப்பட்டது. அதனால் கல்விக்கொள்கைகளை வகுப்பதில் மாநில அரசுகள் தங்களின் அடிப்படை உரிமையை இழந்துவிட்டன. அதனால் மீண்டும் கல்வியை, பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அதைத்தான் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கே உரிய பாணியில் சுட்டிக்காட்டி பேசினார்.