Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சபரிமாலா: சாதனையாளர்களை உருவாக்கும் ‘ஒன் உமன் ஆர்மி’

அனிதா மரணம், அதைத்தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் கிளர்ச்சி, இவற்றுக்கிடையே ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஒற்றை மனுஷியாக ஈர்த்து இருப்பவர், ஆசிரியை சபரிமாலா. கடந்த சில நாள்கள் முன்பு வரை திண்டிவனம் வைரபுரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை. இப்போது நீட் எதிர்ப்புப் போராளி. மட்டுமல்ல. சமத்துவக்கல்விக்கான போராளியும்கூட.

ஆசிரியை பணியை ராஜினாமா செய்தவர் என்ற அளவில்தான் அவர் பெயர் வெளியே தெரிகிறது. ஆனால், அதற்கு முன்பே அவர் ஆயிரம் பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உள்ளனர். பேச்சாளர். பட்டிமன்ற நடுவரும்கூட. தன் மகனை அரசுப்பள்ளியில் சேர்த்து, செயல்வீரராகவும் இருக்கிறார். இவருடைய கணவர் ஜெயகாந்தன், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்.

இங்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட செயல்கள் எதுவுமே கிடையாது. சபரிமாலாவின் பணித்துறப்பின் மீதும் சில எதிர்மறை விமர்சனங்கள் வரவே செய்கின்றன. தனியார் தொலைக்காட்சி பட்டிமன்றங்களில் நடுவராக இருந்தார்; வலுவான பொருளாதார பின்னணி கொண்டவர் என்றெல்லாம் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். சரி…வலுவான பொருளாதார பின்னணி உள்ள எத்தனை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சபரிமாலாவைப்போல் துணிச்சலான முடிவெடுத்தார்கள்?

இத்தகைய சூழ்நிலையில், ‘புதிய அகராதி’ இணைய ஊடகத்திடம் அவர் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். ஆசிரியர் நலன், கல்விக்கொள்கை, ஆசிரியர்களின் நிலை, தனிப்பட்ட சாதனைகள் குறித்தெல்லாம் பேசினார்.

புதிய அகராதி: எத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்ய துணிந்தீர்கள்?

சபரிமாலா: அனிதாவின் மரணம் மிகப்பெரிய இழப்பு. ஓரு ஆசிரியராக என்னுடைய எழுச்சியை வெளிப்படுத்த வேண்டும் எனும்போது, அதற்கு ஆசிரியர் பணி தடையாக இருந்தது. அப்படி ஒரு அரசுப்பணி தேவையில்லை என்பதால்தான் பணியை ராஜினாமா செய்தேன்.

புதிய அகராதி: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளபோது ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராடுகிறார்களே?

சபரிமாலா: ஆசிரியர்கள் சம்பளத்துக்காக போராடும்போது, இவர் சமத்துவக் கல்விக்காக போராடுகிறார் என்று என்னைப்பற்றி போஸ்ட் போடுகிறார்கள். அந்த கான்செப்டே தப்பு. ஆசிரியர்கள் 70 ஆயிரம் சம்பளம் கேட்கிறார்கள் என்றால், ஒரு லட்சம் ரூபாய் சந்தோஷமாக கொடுத்துட்டு, அவர்களிடம் நல்லா வேலை வாங்கிக்கணும். இந்தா… வீடு வேணுமா வெச்சிக்கோ. கார் வேணுமா வெச்சிக்கோ. லோன் வேணுமா வாங்கிக்கோ. மனநிறைவான கல்வியை, 100 சதவீதம் அடைவுத்திறன் கொடுங்கள் என்று ஊ க்கப்படுத்தி வேலை வாங்க வேண்டிய ஒரே விஷயம் கல்விதான்.

கல்விக்குள் இருந்துதான் அத்தனை பேரும் வெளியே வருகின்றார்கள். இன்றைக்கு எம்எல்ஏக்களுக்கு என்ன சார் சம்பளம்? அவர்கள் சம்பாதிக்காத காசா? சுருட்டாத பணமா? அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு லட்ச ரூபாய் சம்பளம் தருகிறார்கள். குழந்தைகளுக்காக ஆவி போக உழைப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்களை சம்பளத்துக்காக போராட வைப்பதே தேசத்தின் அவமானம் .

ஆட்சியாளர்களை ஃபின்லாந்து நாட்டில் போய் பார்க்கச் சொல்லுங்கள். உலகத்தின் மிகச்சிறந்த கல்வியை அந்த நாடு கொடுக்கிறது. அங்கு ஆசிரியர்களுக்கு ராணுவப் பயிற்சிகூட உண்டு. மந்திரிக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை ஆசிரியர்களுக்கும் உண்டு. ஃபின்லாந்தில், 7 வயதில்தான் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர். ஆசிரியர்களை மதிக்காத எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.

புதிய அகராதி: அப்படியெனில் உங்கள் போராட எத்தனை ஆசிரியர்கள் வந்துள்ளனர்?

சபரிமாலா: என்னுடன் போராட ஒரு ஆசிரியர்கள்கூட வரமாட்டேன்கிறார்கள். பயமா? அல்லது வேறு என்ன காரணம் என்று தெரியவில்லை. நான் தங்கம், வெள்ளி நகைகள் அணிவதில்லை. எனக்கு தேவைகளே கிடையாது. என் கணவர் ரயில்வே ஊழியர். அவர் ஒருவரின் சம்பளத்தை வைத்து, என்னால் பிழைத்துக்கொள்ள முடியும். எனக்கு வியாதி வந்தால் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வேன்.

நல்ல கல்வி மட்டுமல்ல; நல்ல சிந்தனை, உணர்வுகள், நன்னெறிகள் இப்படி எல்லாவற்றுக்கும் கல்விதான் அடிப்படை. நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளிலும் ஆசிரியர்களுக்கும் தார்மீக பொறுப்பு இருக்கிறது. ஆசிரியர்களே ஒன்று சேருங்கள். தயவு செய்து வகுப்புகளை புறக்கணியுங்கள். உங்கள் குழந்தைகளுக்காக போராடுங்கள். உங்கள் வகுப்புகளிலும் அனிதாக்கள் படிக்கின்றனர். கல்வியில் சமத்துவத்தை கொண்டு வாருங்கள் என்று சொல்லி வருகிறேன்.

என் போராட்டத்தைக் கேள்விப்பட்டு பத்து ஆசிரியர்கள் என்னிடம் செல்போனில் பேசினார்கள். உங்கள்கூட நாங்கள் இருக்கிறே £ம் என்றனர். ஆனால் ஒருவர்கூட என்னுடன் போராட முன்வரவில்லை. ஆனால், அவர்கள் அப்படி பேசியதே எனக்கு பெரிய விஷயமாகத்தான் இருந்தது. ஏனெனில் என்னிடம் யாரும் பேசமாட்டார்கள். மாற்றுக்கருத்து உள்ள ஆசிரியர்களை தீண்டத்தகாதவர்களாகத்தான் பார்க்கின்றனர். நானே முழுவதும் புறக்கணிக்கப்பட்டுதான் இருந்தேன்.

அனிதாவின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, அவள் முகத்தில் மஞ்சள் பூசப்பட்டு இருந்தது. சடலத்தின்மீது தண்ணீர் ஊற்றும்போது அந்த மஞ்சள் மெல்ல மெல்ல கரைந்தது. அத்துடன் அவளுடைய அத்தனை கனவுகளும் கரைந்து போனது போன்ற ஓர் உணர்வு எனக்குள் இருந்தது. அந்தக் காட்சி எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஏழை பிள்ளைகள் ஓரளவு க்குமேல் வளரவும் முடியாமல், போராடவும் முடியாமல் அடித்து ஒழித்து விடுகின்றனர்.

எத்தனையோ அரசியல் கட்சியினர் இங்கு வந்தனர். அத்தனை பத்திரிகையாளர்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனால் ஒத்த வாத்தியார் இங்கு வரல. பைசா பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறார்களா அல்லது போனால் வேலை போய்விடும் என்று பயப்படுகிறார்களா என்று தெரியவில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

புதிய அகராதி: இந்த நிலை மாற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

சபரிமாலா: இதை மாற்ற வேண்டும் என்றால், ‘ஆசிரியர் பணிதான் என் கனவு’ என்ற உணர்வில் இருப்பவர்களை ஆசிரியர்களாக்க வேண் டும். அப்படிப்பட்டவர்களின் கையில் இந்த நாட்டை ஒப்படைத்தால், முதலமைச்சர் எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் இந்த ஆசிரியர்களால் ஒரு வலுவான இந்தியாவை உருவாக்க முடியும்.

12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படி இல்லாமல் ‘ஆசிரியர் பணி மட்டும்தான் என் கனவு’ என்ற சிந்தனையில் உள்ளவர்களை அழைத்து, அவர்களுக்கு சில ‘டாஸ்க்கு’களை கொடுக்க வேண் டும். ஒரு குழந்தையை உருவாக்குவதற்கான உளவியல் ரீதியான கேள்விகள் மூலம் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் அவர்களுக்கு ராணுவ பயிற்சி மற்றும் அடிப்படை மருத்துவம், செவிலியர் பணி போன்ற சேவைகளிலும் பயிற்சி பெற வைக்க வேண்டும். கிட்டத்தட்ட குடிமைப்பணிகளுக்கு நிகரான பயிற்சிகளை வழங்க வேண்டும். அதன்பின்னர் பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கலாம்.

புதிய அகராதி: ஆசிரியர்கள் எப்போதுமே சவுகரியமான சூழலை விரும்புபவர்களாகத்தானே இருக்கிறார்கள்?

சபரிமாலா: ஆமாம். ஆசிரியர்கள் எப்போதுமே கம்ஃபர்டபுளான இடத்தில்தான் இருக்க விரும்புகிறார்கள். அதனால்தான் ஓய்வு பெறும் வரை ஒரே பள்ளி, ஒரே ஊரில் இருக்கிறார்கள். அரசுப்பள்ளியில் சம்பளம் பெற்றுக்கொள்வார்கள். தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைப்பார்கள். மற்ற துறைகள் எப்படி போனாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஆனால் கல்வித்துறை சீரழிந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் மனநிலையில் இருக்கும்போது என்ன செய்ய முடியும் என்று உள்ளிருந்து கேள்வி கேட்பதால்தான் என் வட்டாரத்தில் என்னை புறக்கணித்துவிட்டனர்.

புதிய அகராதி: நிறைய குழந்தைகளை பேச்சாளர்களாக உருவாக்கி இருக்கிறீர்களாமே?

சபரிமாலா: நான் நிறைய பட்டிமன்றங்களில் பேசியிருக்கிறேன். ஆனாலும் தொடர் வாய்ப்புகள் தரப்படவில்லை. ஒரு கால க்கட்டத்தில் என்னை புறக்கணித்தனர். ஏனென்று யோசித்தபோது, சிலர் நான் வளர்ந்து விடக்கூடாது என்ற மனநிலையில் இருப்பதை புரிந்து கொண்டேன். பேச்சுக்கும் வாழ்க்கைக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாமல் உள்ளவர்கள் நிறைந்த ஒரு பேச்சுத்துறை. எனக்குள் இருந்த ஃபயர், என்னுடைய ஒட்டுமொத்த பேச்சாற்றலையும் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண் டும் என்று முடிவெடுத்தேன். அதனால் பெரிய அளவில் பண இழப்பு இருந்தாலும், எந்த ஒரு மேடையிலும் நான் ஏறவில்லை. குழந்தைகளுக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பயிற்சி அளித்தேன்.

அதன் பலனாக, மாவட்ட அளவில் தொடர்ந்து ஐந்து ஆண்டாக என்னிடம் பயிற்சி பெற்ற குழந்தைகள்தான் முதல் பரிசை வென்றனர். அந்தக் குழந்தைகளை 100 பட்டிமன்றங்களுக்கு மேல் களமிறக்கினேன். அவர்களை ஒரு ‘செலிபிரிட்டி’யாக ஊரே கொண்டாடியது. எத்தனையோ மேடைகளில் அந்தக் குழந்தைகளிடம் பலர் ‘ஆட்டோகிராப்’ வாங்கி இருக்கிறார்கள். ‘ஸ்டேன்டிங் ஒவேஷன்’ கிடைத்திருக்கிறது. அவர்கள் எல்லோருமே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள். குழந்தைகள் அதன் மூலம் சம்பாதித்து, வீட்டுக் கடனை அடைத்த சாதனை வரலாறுகளும் உண்டு.

புதிய அகராதி: மறக்க முடியாத ஒரு குழந்தை சாதனையைச் சொல்ல முடியுமா?

சபரிமாலா: கமலேசன் என்ற சிறுவன். அப்போது ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு சரியாக பேச்சு வராது. கொஞ் சம் திக்குவாய். ஒரு நாள் அவனுக்கு ஒரு கவிதையை கொடுத்து மனப்பாடம் செய்து வரும்படி சொன்னேன். அவன் அந்தக் கவிதையை சரளமாக திக்காமல் சொன்னான். ஆனால், கவிதையை ஒப்பித்த பிறகு திக்கித் திக்கித்தான் பேசுவான். அவனு க்குள் ஏதே ஒரு ஃபயர் இருக்கு என்று உணர்ந்தேன். அவன் மீது தனிக்கவனம் செலுத்தினேன். பாரதியார் வேடமிட்டு, பேச்சுப்போட்டிக்கு அனுப்பி வைத்தேன். அவன் திக்காமல் பேச்சுப்போட்டியில் பேசியதோடு, முதல் பரிசும் பெற்றான்.

அவனுக்கு சரியாக பேச்சுப்பயிற்சி (தெரபி) அளித்தால் திக்குவாய் பிரச்னையை சரி செய்ய முடியும் என்று தீர்மானித்து தொடர்ந்து பயிற்சி அளித்தேன். அதன்பிறகு, அரசாங்கம் நடத்திய மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு, தொடர்ந்து மூன்று முறை முதல் பரிசு பெற்றான். இதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையைக் கொண்டு, அவனுடைய அப்பா வாங்கியிருந்த கடனையும் அடைத்தான். இப்போது அந்த மாணவன், இன்ஜினியரிங் படித்து வருகிறான்.

ஆசிரியர்கள் ஒட்டுமொத்த ஆற்றலையும் குழந்தைகளிடம் இறக்கினால், உலகத்திலேயே கிடைக்காத பெரிய சந்தோஷம் ஆசிரியர்களுக்கு கிடைக்கும். மேடைப்பேச்சுக்காக எத்தனையோ விருதுகள், கைத்தட்டல்கள் பெற்றிருந்தாலும், மாணவன் கமலேசன் சாதித்தபோது கிடைத்த சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.

– அகராதிக்காரன்.