Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

சாவுக்கு ஒரு ஓட்டு; நோவுக்கு ஒரு ஓட்டு என்று அரசியல் செய்வதில் அதிமுககாரர்கள் கில்லாடிகள் என்பதற்கு, அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக இன்று (டிசம்பர் 20, 2017), வெளியான வீடியோ இன்னுமொரு சான்று.

ஜெயலலிதா இறந்து ஓராண்டு ஆகியும் அவருடைய மரணம் குறித்த சர்ச்சைகள் இறக்கை கட்டிப் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசித்துப் பார்த்தால், அம்மா இட்லி சாப்பிட்டார் என்பது முதல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதாப் சி ரெட்டியின் அண்மைய அறிக்கை முதல் எல்லாவற்றிலும் ஒரு முரண்பாடு இருப்பதை அறிய முடியும்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே சீரியஸ் நிலையில்தான் இருந்தார் என்று பிரதாப் சி ரெட்டி சொன்னதற்கு, சட்டம்&ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதுதான் காரணம் என நியாயம் கற்பிக்கிறார்.

நாளை (டிசம்பர் 21, 2017) ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோவை இன்றைக்கு வெளியிடுகிறார் எனில் உள்நோக்கம் இல்லாமல் இருக்க முடியாது.

இந்திரா காந்தி சாவுக்கு ஓரு ஓட்டு, எம்ஜிஆர் நோவுக்கு ஒரு ஓட்டு என்று வாக்கு சேகரித்ததை அதிமுகவின் முன்னோடிகளிடம் இருந்து டிடிவி தினகரனும் கற்றுக்கொண்டிருப்பார்.

வெற்றிவேல் வெளியிட்டுள்ள அந்த வீடியோ காட்சி, இருபது நொடிகள் ஓடுகிறது. ஜெயலலிதா நைட்டி உடை அணிந்தபடி நோயாளிக்குரிய படுக்கையில் இருக்கிறார். இடது கையில் வைத்திருக்கும் ஸ்ட்ராவுடன் கூடிய டம்ளரில் இருந்து பழச்சாறை உறிஞ்சி குடிக்கிறார். முகத்தில் அணிந்த மாஸ்க் கழுத்து வரை இறக்கிவிடப்பட்டு இருந்தது.

அவருக்கு தலைமாட்டு பகுதியில் சுவரில் இரு கடவுள் படங்கள் இருந்தன. அந்த அறை, சொகுசு வசதிகளுடன் கூடியதாகத்தான் இருக்கிறது. வலது கையில் ரத்த அழுத்தம் பார்ப்பதற்கான உறை சுற்றப்பட்டு இருந்தது. ஜூஸ் குடித்துக்கொண்டே டிவி பார்ப்பதுபோன்று இருந்தது. அந்த அறையில் ஆக்ஸிஜன் சிலிண்டரும் இருந்தது. பின்னணியில் ‘முதல் மரியாதை’ படத்தில் இருந்து ஒரு பின்னணி இசை மட்டும் கேட்டது.

ஜெயலலிதா இறந்தபோது அவருடைய உயரம் மிகவும் குறைந்து இருந்ததாகவும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருடைய ஒரு கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு விட்டதாகவும்கூட அப்போது உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்று வெளியான வீடியோவில் ஜெயலலிதா இரு கால்களையும் நீட்டி படுத்தபடி இருந்தார்.

ஒரு கால் அகற்றப்பட்டது குறித்த கேள்வியில் உண்மை உள்ளது எனில், இன்று வெளியான வீடியோ, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சில நாள்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கலாம்.

வீடியோவை வெளியிட்ட பின்னர் பேசிய வெற்றிவேல், ஜெயலலிதாவின் அனுமதியுடன் சசிகலாவால் பதிவு செய்யப்பட்ட வீடியோ என்றும், இதை வெளியிடுவது பற்றி டிடிவி தினகரன், சசிகலாவுக்கு தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், ஆர்.கே. நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சிலர், ஜெயலலிதா சடலத்தை அச்சிட்டு, சசிகலாவுக்கு எதிரான கருத்துகளுடன் நேற்று மாலை துண்டறிக்கைகள் வெளியிட்டதால்தான் பொறுமை இழந்து இன்று வீடியோவை வெளியிட்டதாகவும் கூறினார்.

ஜெயலலிதா ஒப்புதலுடன் பதிவு செய்யப்பட்டது எனில், கேமராவை ஜெயலலிதா பார்க்காமல் அவர் ஏன் டிவியை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்பது முரணாக உள்ளது. அதனால் அவருக்கே தெரியாமல் இந்த வீடியோ படமாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுக்கிறது.

வெற்றிவேல் பேட்டி அளித்த சில நிமிடங்களில், கர்நாடகாவில் உள்ள டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, இந்த வீடியோ சசிகலாவுக்கு தெரிந்துதான் வெளியிடப்பட்டதாக கூறியிருக்கிறார்.

அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர், ”ஜெயலலிதா இறந்து ஓராண்டு கழித்து இப்போது வீடியோவை வெளியிட வேண்டிய அவசியம் ஏன்? ஆர்.கே. நகர் இடைத்தேர்தலைக் கருத்தில்கொண்டுதான் வெற்றிவேல் இவ்வாறு வீடியோ வெளியிட்டு இருப்பதாகவும், ஆதாரம் இருந்தால் அதை ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திடம் கொடுத்திருக்கலாமே,” என்றும் கூறியுள்ளனர்.

மற்றொரு எம்எல்ஏவான செம்மலை, ‘வீடியோ எடுத்ததும் தவறு; அதை இப்போது வெளியிட்டதும் தவறு. அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறு வெற்றிவேல் செய்துள்ளளார்,’ என்கிறார்.

ஆட்சி, அதிகாரப்பசி ஒருவரை என்னவெல்லாம் செய்யத் தூண்டும் என்பதற்கு வெற்றிவேலின் இன்றைய வீடியோ வெளியீடு ஒரு சான்று எனக்கூறினால், ஜெயலலிதாவின் சடலத்தின் மாதிரியை வைத்து கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்ததையும் சமமாகத்தான் பாவிக்க வேண்டும்.

ஆர்கே நகர் இடைத்தேர்தல் நேரத்தில், வாக்குப்பதிவை சீர்குலைக்கும் வகையில் இதுபோன்ற வீடியோவை வெளியிடுவதும், அதை மின்னணு ஊடகங்கள் ஒளிபரப்புவதும் குற்றம் என்று தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். வெற்றிவேல் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 126 (1) (பி)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, ‘ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், வதந்தி பரப்புவோருடன் கூட்டமைத்து கீழ்த்தரமான வேலைகளில் சிலர் ஈடுபடுகின்றனர். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அதை கடந்து விட்டோம். ஊடகங்களும் டிஆர்பி-க்காக இப்படி செய்வதை ஏற்க முடியாது,’ என்று ட்விட்டரில் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அவர் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்திலேயே சிறு மருத்துவமனை செயல்பட்டு வந்ததாகவும், அங்கு அவர் சிகிச்சை பெற்றபோதுதான் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்றும் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

அப்பல்லோவில் எடுக்கப்பட்ட வீடியோ எனில், ஜெயலலிதா படுத்திருக்கும் படுக்கை முதல் தலையணை வரை அப்பல்லோ மருத்துவமனையின் இலச்சினை இருக்குமே. ஆனால், வீடியோவில் அதுபோன்ற ஆதாரங்கள் இல்லையே என்றும் சந்தேகம் எ-ழுந்துள்ளது.

யார் என்ன சொன்னாலும், பிரதமருக்¢கு நெருக்கமான வட்டாரத்தில் இருக்கும் வெங்கையா நாயுடு போன்றவர்கள் வந்தபோதுகூட ஜெயலலிதாவை எட்ட நின்றுகூட பார்க்க அனுமதிக்காத வகையில்தான் சசிகலாவின் இரும்புப்பிடி இருந்ததா என்பதெல்லாம் நகைப்புக்குரியது.

சசிகலா, எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, அவர்கள் மூலமாக நரேந்திர மோடி, அப்பல்லோ மருத்துவ நிர்வாகம் ஆகியோருக்கு ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் என்ன நடந்தது என்பது அப்பட்டமாக தெரியும். சக்தி வாய்ந்த, அதுவும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு தலைவரின் சிகிச்சை பற்றிய விவரங்களை மத்திய, மாநில உளவுத்துறைகள்கூட கோட்டை விட்டுவிடுமா என்ன?

ஆக, உண்மை நிலவரம் இப்படி இருக்க அரசியல் சதுரங்கத்தில் முட்டாளாக்கப்படுவது மீண்டும் மீண்டும் அப்பாவி மக்களே. டிடிவி தினகரனின் பிரஷ்ஷர் குக்கர், ஜெயலலிதா வீடியோ மூலமாக தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகும் கடைசியாக ஒருமுறை விசில் அடித்துப் பார்த்திருக்கிறது. அவ்வளவே.

விசில் ஓசை ஆர்கே நகர் மக்களுக்கு கேட்டதா இல்லையா என்பது வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்.

– நாடோடி.