சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயல்வெளிகளில் கருப்புக்கொடி நட்டு நூதன போராட்டம் நடத்தினர்.
சென்னை – சேலம் இடையில் புதிதாக எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 277.30 கி.மீ. அமைய உள்ள இந்த வழித்தடத்தில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக தனியார் பட்டா நிலங்கள், விளை நிலங்களை அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணிகள் கடந்த 18ம் தேதி தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது.
இரு போகம் விளையக்கூடிய நிலம், 50 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைக்கும் வற்றாத கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தென்னை, மா, கொய்யா தோப்புகள் என மீட்டெடுக்க முடியாத இயற்கை வளங்களும் இந்த சாலைக்கு இரையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சேலம் மாவட்டம் முழுவதும் பசுமைவழி விரைவுச்சாலைக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் சேலத்தை அடுத்த ராமலிங்கபுரத்தில் சிலர் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்த காவல்துறையினர் கருப்புக்கொடிகளை உடனடியாக அவிழ்த்து எறியும்படியும், இல்லாவிட்டால் கைது செய்வோம் என்றும் விவசாயிகளை மிரட்டினர். இதற்கு பயந்து கொண்டு சிலர் கருப்புக்கொடிகளை அவிழ்த்தனர். சில இடங்களில் காவல்துறையினரே அப்புறப்படுத்தினர்.
அதேநேரம், காவல்துறையினருக்கு போக்குக் காட்டும் விதமாக மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் சிலர் தங்கள் வயல்வெளிகளில் கருப்புக்கொடி நட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் பன்னீர்செல்வம், பழனியம்மாள், சித்ரா, தனலட்சுமி ஆகியோர் தங்கள் வயல்களில் கருப்புக்கொடி நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரம்பக்கட்ட நிலம் அளவீடு முடிந்தாலும்கூட, இன்னும் இந்த திட்டத்தின் மீதான மக்களின் கோபம் கொஞ்சமும் தணியவில்லை. 21 லட்சம் ரூபாய் முதல் 9.04 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்று சேலம் கலெக்டர் ரோகிணி கூறினாலும், அதன் மீது இன்னும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் குள்ளம்பட்டி விவசாயிகள் கூறினர்.
முத்து மனைவி சித்ரா கூறுகையில், ”பேளூர் மெயின் ரோட்டிலேயே எங்களது பாக்குத் தோப்பு, தென்னந்தோப்பு இருக்கு. இதில் 200 மரங்கள் பசுமை வழிச்சாலையால் அழிகின்றன. கிணறு, போர்வெல்லும் போகுது. நீராதாரமே பறிபோன பின்னர், எஞ்சியுள்ள மரங்களுக்கு எப்படி தண்ணீர் ஊற்ற முடியும்?
நாங்கள் வீட்டில் இல்லாதபோது 500 போலீசாரை கொண்டு வந்து, இந்த தளவில் இருந்து அந்த தளவு வரைக்கும் நிறுத்தி வைத்து, முட்டுக்கல்லை போட்டுவிட்டு போயுள்ளனர். போலீசாரை வைத்து எங்களை மிரட்டுகின்றனர். எங்களிடம் கருத்தே கேட்காமல் தன்னிச்சையாக நிலத்தை எடுத்துக் கொள்வதை எப்படி ஏற்க முடியும்?
என் கணவருக்கு 50 வயசு ஆகுது. ரெண்டு ரூபாய் சம்பளத்துல இருந்து மில்லுல வேலை பார்க்கிறாரு. எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் இருக்காங்க. அவர்களை எப்படி படிக்க வைப்போம்?
பிள்ளைங்களுக்கு கல்யாணம் காட்சினு அவங்கள எப்படி இனிமே கரை சேர்ப்போம்னு தெரியல. இது தவிர இந்தியன் பேங்குல நகை அடமானம் வெச்சி 2.50 லட்சம் கடன் வாங்கியிருக்கிறேன். வெளி ஆட்களிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கோம். அதையெல்லாம் எப்படி கட்ட முடியும்?
பேங்குல கடன் கேட்டா, என்ன சூரிட்டி வெச்சிருக்கீங்கனு கேட்கறீங்க. இப்போது எல்லா நிலத்தையும் பறித்துக்கொண்டால் சூரிட்டிக்கு என்ன செய்வோம்? நாங்கள் தற்கொலை பண்ணிக்கிறது தவிர வேறு வழியே இல்லையா?
நாங்க சாப்பிட்டும் சாப்பிடாமலும்கூட மரங்களை தண்ணீர் ஊற்றி காப்பாத்திருக்கோம். நீங்கள் அனாமத்தா எடுத்துட்டுப் போனா எப்படீங்க? எங்களுக்கு எங்களோட நிலம்தான் வேணும். உங்க இழப்பீடே வேணாம். இங்கே ஆட்சி நடக்கல. அராஜகம்தான் நடக்குது,” என்றார்.
பன்னீர்செல்வம் என்ற விவசாயி கூறுகையில், ”வேறு எங்கேயாவது இதுபோன்ற செல்வாக்கான நிலத்தைக் காண்பித்துவிட்டு இந்த நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு பணமோ இழப்பீடோ எதுவும் வேண்டாம். அரசு கொடுக்கும் இழப்பீடு என்பது மக்கள் கையில் ஆறு மாசம்கூட தாங்காது.
எல்லாவற்றையும் செலவு செய்துவிட்டு, விவசாயிகள் பிச்சைக்காரர்களாக அலைய வேண்டியதுதான். அதன்பிறகு எவனையாவது அடிச்சுப் பிடுங்க வேண்டியதுதான். நாடு கொள்ளைக்கார நாடாகத்தான் மாறும்,” என்றார் காட்டமாக.
மின்னாம்பள்ளியைச் சேர்ந்த மூதாட்டி பழனியம்மாள், தனக்குச் சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலமும், தென்னந்தோப்பும், குடியிருக்கும் மெத்தை வீடும் பசுமை வழிச்சாலை திட்டத்தால் பறிபோவதாக கூறினார்.
”நாங்கள் யாருமே நிலத்தைத் தர முன்வராதபோது நாங்களாக கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். இந்த வயசான காலத்துல அரசாங்கம் கொடுக்கிற இழப்பீடு பணத்தை வெச்சிக்கிட்டு நான் போர்த்தியா படுத்துக்க முடியும்? நாங்க நாலஞ்சு பேர்தான் வீட்டுல இருக்கோம்.
வேணும்னா எங்கள வரிசையா நிக்கவெச்சி சுட்டுப்புட்டு நிலத்தை எடுத்துட்டுப் போகட்டும். ரோடு வேணும்னா எடப்பாடி தன்னோடு வீட்டையும், நிலத்தையும் தரட்டும். இருக்கற நிலத்தையும் அளந்து எடுத்துட்டுப் போயிட்டா எங்களோட வயித்துப் பொழப்புக்கு எங்கே போவோம்?,” என்றார் மூதாட்டி பழனியம்மாள்.
முருகேசன் மனைவி தனலட்சுமி, ”எங்களுக்கு சொந்தமான 50 சென்ட் நிலமும் அதில் உள்ள தென்னை, வாழை, வீடு எல்லாத்தையும் நாங்க வீட்டில் இல்லாதபோது அளந்து முட்டுக்கல் போட்டுட்டுப் போயிட்டாங்க.
எங்கள் நிலத்தை கொடுக்க கொஞ்சமும் விருப்பம் இல்லை. நிலத்தை பறித்துக்கொண்டால் நாங்கள் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு எங்கே போவது? சாவதைத்தவிர வேறு இல்லை. எங்களுக்கு இழப்பீடு எதுவும் வேண்டாம். எங்கள் நிலத்தை எங்களிடமே விட்டுவிடுங்கள்,” என கண்ணீர் மல்கக் கூறினார்.
– பேனாக்காரன்