Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தோக்குறோமா ஜெயிக்குறோமாங்குறது முக்கியமில்ல… முதல்ல சண்ட செய்யணும்! வடசென்னை விமர்சனம்!! #VadaChennai

தமிழ் சினிமாக்காரர்களாலும் உலகப்படங்களை எடுக்க முடியும் என்பதற்கான புதிய நம்பிக்கையை தனது ‘ஆடுகளம்’, ‘விசாரணை’ படங்களின் வாயிலாக நிரூபித்த இயக்குநர் வெற்றிமாறனிடம் இருந்து, மற்றொரு உலகத்தர படமாக வெளிவந்திருக்கிறது, ‘வடசென்னை’.

 

விளிம்புநிலை மக்களின் கதை:

 

‘இது வடசென்னை மக்களின் வாழ்வியல் கதை அல்ல’ என்று மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் சொல்லிவிட்டுத்தான் கதைக்குள் பயணிக்கிறார் வெற்றிமாறன். ஆனால், படம் நெடுக வடசென்னையில் வசிக்கும் பெரும்பான்மை விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத்தான் வணிகத்தன்மையோடு கொடுத்திருக்கிறார்.

 

வடசென்னையில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் கடத்தல் என கொடிக்கட்டி பறக்கிறது இரண்டு கோஷ்டி. ஒன்று, குணா (சமுத்திரக்கனி) தலைமையிலான கோஷ்டி. இன்னொன்று, செந்தில் (கிஷோர்) கோஷ்டி. இந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே, கேரம் போர்டு சாம்பியனாவதும், அதன்மூலமாக ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு வேலை பெற்று விடும் கனவுடனும் இருக்கும் சாமான்ய குப்பத்து இளைஞன் அன்பு (தனுஷ்) சிக்கிக் கொள்கிறான். அவன், அந்த கும்பலிடம் இருந்து மீண்டு வந்தானா? என்ன ஆனான்? என்பதை உண்மைக்கு நெருக்கமாக விவரிக்கிறது வடசென்னை.

 

அதிமுக கொடி, சின்னம்:

வடசென்னை என்ற டைட்டிலே தீப்பற்றி எரிவது போலத்தான் காட்டப்படுகிறது. முதல் காட்சியில், ஹோட்டலில் உள்ள ஒரு மேஜை மீது குருதி தோய்ந்த, சதைத்துண்டுகள் ஒட்டிய அரிவாள்களும் கத்திகளும் பொத்தென்று விழுகின்றன. இன்னும் இருபத்தஞ்சு வருஷத்துக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று பேசியபடியே, சமுத்திரக்கனி, கிஷோர், சாய்தீனா, ‘அவுட்டு’ பவன் ஆகிய நால்வரும் அமர்ந்து பேசுகின்றனர். படம் எதை நோக்கிப் பயணிக்கப் போகிறது என்பதை இந்த முதல் காட்சியே குருதி தெறிக்க விவரித்து விடுகிறது.

 

படம் 1987ல் இருந்து தொடங்கி நிகழ்காலம் வரை பயணிக்கிறது. அந்தந்த காலத்திற்கே ஏற்ற உடைகள், ஒப்பனைகள், அப்போது அதிகமாக பயன்படுத்தப்பட்ட பொருள்கள் என பார்த்துப்பார்த்து காட்சிப்படுத்தியிருக்கின்றனர். ஒரு காட்சியில் ‘பாயும்புலி’ ரஜினி ரசிகர் மன்ற பெயர்ப்பலகையும்கூட இடம் பெற்றிருந்தது. மற்றொரு காட்சியில் அதிமுக கொடி, சின்னம் இடம் பெற்றதோடு, அக்கட்சியின் பிரமுகராகவே வருகிறார் ராதாரவி.

 

குப்பத்துவாழ் மக்கள்:

 

நெய்தல் நிலத்தையொட்டி உள்ள குப்பத்துவாழ் மக்களுக்கு அரசியல்வாதிகளாலும், காவல்துறையினராலும் இடைஞ்சல் ஏற்படுகிறது. போப்பாண்டவர் வருகையின் பெயரால், பன்னெடுங்காலமாக வசிக்கும் விளிம்புநிலை மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சதி நடக்கிறது. மீன்பிடித்தலையே ஆதாரமாகக் கொண்டு வாழும் மக்களின் படகுகள் பறிமுதல் செய்யப்ப டுகிறது.

 

வெளிநாட்டு கப்பல்களில் வரும் இறக்குமதி பொருள்களை ஊக்கடிக்கும் கும்பல் தலைவன் ராஜன் (அமீர்), குப்பத்து மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுக்கிறான். ராஜன் கூடவே பயணிக்கும் குணா (சமுத்திரக்கனி), செந்தில் (கிஷோர்), வேலு (‘அவுட்டு’ பவன்), பழனி (சாய் தீனா) ஆகியோர் உள்ளூர் அரசியல்வாதியால் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஒருகட்டத்தில், அவர்களே ராஜனை கொடூரமாக கொன்றும் விடுகின்றனர்.

 

வஞ்சகத்தின் உச்சக்கட்டம்:

 

ராஜன் அவர்களை தன்னுடைய தொழிலின் (!) வாரிசுகளாக ஆளாக்கி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில், அவர்களாலேயே வீழ்த்தப்படுவது வஞ்சகத்தின் உச்சக்கட்டம். ராஜன் கொல்லப்படும் நிகழ்வும், நிகழ்விடமும் அத்தனை கச்சிதம். ராஜன் ஒன்று நினைத்திருக்க, குணா, செந்தில், பழனி, வேலு ஆகியோர் வேறு ஒரு முடிவில் இருக்கிறார்கள். யார் மனதையும் யாரும் அறிய முடியாது. ராஜனின் தம்பியாக வரும் டேனியல் பாலாஜி கண் முன்னே அண்ணன் கொலை செய்யப்பட்டாலும், அவனால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது.

 

இந்த உலகில் விசுவாசம் என்ற ஒன்று யாரிடமும் இல்லை என்பதை பல காட்சிகளில் அப்பட்டமாக உணர்த்துகிறார் இயக்குநர்.

 

திரைமொழி:

இன்றைய கார்ப்பரேட்மய சூழல், ஒருவர் உயர வேண்டுமானாலும் துரோகத்தால், வஞ்சகத்தால் புறமுதுகில் குத்தவும் தயங்கக்கூடாது என்ற புதிய தர்மத்தை கற்றுக்கொடுத்து வருகிறது. அத்தகைய வன்மங்கள், இந்தப்படம் முழுவதுமே விரவிக்கிடக்கின்றன. ‘மக்களே போல்வர் கயவர்’ என்பான் வள்ளுவன். அதைத்தான் வடசென்னை திரைமொழியிலும் காண முடிகிறது. இங்கே எல்லோருமே நல்லவர்கள்தான்… அவர்கள் கெட்டவர்களாக இல்லாத தருணத்தில் மட்டும்.

 

என்ன மாதிரியான சூழலில் ராஜன் மக்கள் தலைவனாக உருவெடுத்தானோ, அதேபோன்ற சூழல் அன்புவுக்கும் நிகழ்கிறது. புதிதாக சாலை அமைப்பதற்காக வடசென்னையின் சேரிபுறங்களை அப்புறப்படுத்த ரோடு காண்டிராக்டர் ஒருவர் அரசியல்வாதிகள், உள்ளூர் ரவுடிகள் மூலம் குடைச்சல் கொடுக்கிறார்.

 

குணாவிடம் நிபந்தனை:

 

இதற்காக அந்த ரோடு காண்டிராக்டர் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கும் குணா, செந்தில் ஆகியோரை ஒன்றாக இணைந்து செயல்படுமாறு சமாதானம் செய்து வைக்கிறார். அப்போது செந்தில், தன்னை சிறையில் கொலை செய்ய முயன்ற ஆள் யார் என்று சொன்னால் சமாதானம் ஆகத்தயார் என்று குணாவிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறார்.

 

காதலிக்காக நிகழ்த்தப்பட்ட ஒரு கொலையில் இருந்து உயிரைக் காப்பாற்றியதற்காக குணாவின் மீது ஏற்பட்ட விசுவாசத்தின்பேரில்தான், சிறைக்குள் அவருக்காக செந்திலை கொலை செய்ய முயல்கிறார் அன்பு. அந்த நன்றிக்காக தன்னை குணா காட்டிக்கொடுக்க மாட்டார் என்று அன்பு நம்புவது ஒருபுறம் இருந்தாலும், பணத்துக்காக குணா தன் பெயரைச் சொல்லி விடுவாரோ என்ற பதற்றத்தையும், தவிப்பையும் தனுஷ் ஒருசேர வெளிப்படுத்தும் காட்சி ஒன்று போதும், தமிழ் சினிமாவில் தனுஷ் தவிர்க்க முடியாத கலைஞன் ஆகிவிடுதற்கான சான்று.

 

கார்ப்பரேட் முதலாளிகளுக்காக:

 

ரோடு போடுவதற்காக குடிசைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனத்துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்காக, அதே குப்பத்து தாதாக்கள் சுய ஆதாயத்திற்காக குரல் கொடுப்பது கள யதார்த்தம். நாம் யாரை நம்புகிறோமோ அவர்கள்தான் நம்மை வீழ்த்தும் சக்தியாக மாறுவார்கள் என்பதன் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது அந்தக் காட்சி.

 

அந்தக் காட்சியில் அன்பு, ‘நாங்க பேசறதே உனக்கு புரியலேங்கிற… அப்புறம் உனக்கு எப்படி எங்க வாழ்க்க புரியும்?’ எனக் கேள்வி எழுப்பும்போது திரையரங்கில் விசில் ஓசை காதைக்கிழிக்கிறது.

 

”தொழிலு செய்ற எடத்துலேர்ந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி எங்களுக்கு வூடு கட்டிக்கொடுப்ப. அப்புறம் எதுனா அக்கியூஸ்டு வோணும்னா எங்க குட்சைக்கு வந்து புடிப்ப… நாங்கள்லாம் ஏன் இப்டி இருக்கோம்னு கேக்கறியே… எங்கள அங்க கொண்டு போய் வெச்சது யார்னு என்னிக்காவது யோசிச்சிக்கிறியா?” என்ற நறுக்குத் தெறிக்கும் கூர்மையான வசனங்கள், சேரிவாழ் மக்கள் நேரடியாக ஆளும் வர்க்கத்தைப் பார்த்துக் கேட்பதாகவே கொள்ளலாம்.

கூர்மையான வசனங்களால்…

வளர்ச்சி என்ற பெயரில், துரத்தப்பட்ட / துரத்தப்படும் மக்களிடம் இருந்து அந்த வசனங்களுக்கு திரையரங்கில் பலத்த கையொலிகள் எழுவதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது. பூர்வகுடிகளை, அவர்களின் நிலத்தைவிட்டு துரத்தப்படுவதும், அதனால் எழும் எதிர்ப்பை சரிக்கட்ட அவர்களுக்கு வேலை தருவதாகக் கூறப்படும் வெற்று வாக்குறுதிகளுக்கும் கூர்மையான வசனங்களால் தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குநர்.

 

ரவுடிஸம் பண்ணுவோம்:

 

”எங்கள காப்பாத்திறதுக்காக சண்ட போடறதுக்கு பேரு ரவுடிஸம்னா கண்டிப்பா ரவுடிஸம் பண்ணுவோம்”, ”நம்ம ஊருக்காக நாமதான் சண்ட செய்யணும். இங்க தோக்குறோமா ஜெயிக்கிறோமாங்கிறது முக்கியமில்ல. முதல்ல சண்ட செய்யணும்…” என்பது போன்ற சம்மட்டி அடி வசனங்களுக்கும் குறைவில்லை.

 

ஒருசில காட்சிகளைத் தவிர, மற்ற இடங்களில் தனுஷ் என்ற மாஸ் ஹீரோவும், ஒரு பாத்திரமாகவே வந்து போகிறார். மூன்று வெவ்வேறு காலவெளியை வெளிப்படுத்தும் வகையில் தனுஷ் தன்னுடைய தோற்றத்தை மாற்றியிருப்பதும், அதற்காக உடலை வருத்திக்கொண்டு உழைத்திருப்பதும் கலையின் மீதான அவரின் அசுரத்தனமான வேட்கையைக் காட்டுகிறது.

 

மண்டியிட வைக்கும் ராஜன்:

 

தான்தான் படிக்காமல் வழிதவறி விட்டேன் என்ற ஒப்புதலோடும் குற்ற உணர்வோடும் அடுத்த தலைமுறையை படிக்கச்சொல்லியும், விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்துமாறு சிங்காரவேலர் மன்றத்தைத் திறந்து வைக்கும்போதும், விளிம்புநிலை மக்களுக்காக காவல்துறை அதிகாரியை கடலுக்குள் கடத்திச்சென்று அரசாங்கத்தை மண்டியிட வைக்கும் போதும் ராஜனாக வரும் அமீர், குப்பத்து மக்கள் மனதில் மட்டுமின்றி ரசிகர்களின் மனதிலும் இயல்பாகவே சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறார்.

 

ராஜன் மீது காதல் கொண்டு, அவனையே மணக்கும் ஆண்டிரியா, சற்றும் எதிர்பாராத ‘நெருக்கமான’ காட்சிகளால் கலவரப்படுத்தி இருக்கிறார். ராஜன் மறைவுக்குப் பிறகு, அவனைக் கொன்ற குணாவுடன் குடும்பம் நடத்தத் தலைப்படுகிறார் ஆண்டிரியா. எகிப்தின் 13ம் தாலமியை வீழ்த்திய ஜூலியஸ் சீசரை பின்தொடர்ந்த கிளியோபட்ரா பாத்திரம்போல் இருக்கிறதே என்று நினைத்திருந்தேன். ஆனால் என் யூகத்தை அடுத்த சில காட்சிகளிலேயே முறியடித்திருந்தார் இயக்குநர்.

 

ராஜன் பொண்டாட்டிடா…

”இப்பவும் நான் ராஜன் பொண்டாட்டிடா…!” என கண்களில் பழிவாங்கும் வெறியுடன் கனல் கக்கும்போதுதான் ஆண்டிரியா, அடடே! சொல்ல வைத்து விடுகிறார். ராஜன் கொலைக்கு குணாவின் பக்கத்தில் இருந்து கொண்டே அவனை வஞ்சம் தீர்க்க துடிக்கும் சந்திரா எனும் பாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்திப் போகிறார் ஆண்டிரியா.

 

நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி சொல்லவே வேண்டாம். அவரின் அறிமுகமே அதிரிபுதிரியாகத்தான் இருக்கிறது. நாயகியை எதை வைத்து தனுஷ் அடையாளம் கண்டுபிடிக்கிறார் என்பதை படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அப்படி அடையாளப்படுத்தும் காட்சிக்காக வேல்ராஜின் கேமரா கோணம் இளசுகளை ரசிக்க வைக்கவும் தவறவில்லை.

 

லிப் டூ லிப்

 

‘டேய் பசங்களா… வூட்டாண்ட யார்னா பெரியவங்க இருந்தா கூட்ணு வாங்கடா…’ என்று எகிறும்போதும், ‘கிறுக்குக்கூ…..’ ‘ஒம்…….ள’, ‘……..த்தா’ என ‘ஏ’கத்துக்கும் கெட்ட வார்த்தைகளால் அன்புவையும், அவனது நண்பனையும் தெறிக்க வி டும்போதும் அச்சு அசல் குப்பத்துப் பெண் பத்மா பாத்திரத்தை தனக்குள் வரித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். துணிச்சலாக, ‘லிப் டூ லிப்’ காட்சிகளிலும் தாராளம் காட்டியிருக்கிறார்.

படத்தின் முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் சிறைச்சாலைக்குள்ளேயே நடக்கிறது. கதைக்கு அவ்வளவு நீளமான காட்சிகள் தேவையா? என்ற எண்ணம் எ-ழாமல் இல்லை. ஆனால், காலம் காலமாக குற்றப்பின்னணியில் வாழும் மக்களைப் பற்றிச் சொல்லும்போது, அவர்களின் வாழ்வியலில் சிறைச்சாலையும் ஓர் அங்கமாகி விடுகிறது. அதனால்தான் அத்தகைய காட்சிகள் வைத்திருப்பார் எனக் கருதுகிறேன்.

 

தொழில்முறை குற்றவாளிகள்

 

சிறைச்சாலைக்குள்ளும் முக்கிய குற்றவாளிகள் குணா லேபிள், செந்தில் லேபிள் என இரண்டு கோஷ்டியாக பிரிந்து கிடப்பது, ஆசன வாயில் கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்களை பதுக்கிக் கடத்தி வருவது, உள்ளே இருப்பவர்கள் பிரியாணி, செல்போன் சகிதமாக உல்லாசமாக இருப்பது என தமிழக சிறைச்சாலைக்குள் நிகழும் ரகசியங்களை உண்மைக்கு நெருக்கமாக அம்பலப்படுத்தி இருக்கிறார்.

 

‘ஏய்… உன்க்கு எத்தினி தபா சொல்லிக்கினுக்குறேன்…. ஜெயிலுக்குள்¢ள திருடக்கூடாது…. பொய் பேசக்கூடாதுனு,’ என்ற வசனம் இரண்டு இடங்களில் இடம் பெறுகிறது. தொழில்முறை குற்றவாளிகள் தங்களுக்குள்ளும் ஒரு நியதியைப் பின்பற்றுகிறார்கள் என பகடி செய்கிறது இந்தக் காட்சிகள்.

 

சிறைவாசிகள் சாப்பிடும் தட்டுகளையும், பல் துலக்கும் பிரஷ்ஷையும்கூட ஆயுதமாகப் பயன்படுத்துவது, சிறைக்குள் போதைப்பொருள்களை தந்திரமாக கடத்தி வருவது என விவரணைகள் தரப்பட்டுள்ளன. செந்தில் கோஷ்டி, சிறைக்குள் ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய்க்கு பவுடர் ஓட்டுவதாக ஒரு வசனமும் உண்டு.

 

சிறைச்சாலை குற்றங்கள்:

 

சிறைச்சாலை என்பது குற்றம் செய்தவர்கள் திருந்தும் / திருத்தப்படும் இடம் என்று பொதுவெளியில் ஓர் எண்ணம் இருக்கிறது. ஆனால், ‘மகாநதி’ போன்ற படங்களில் சிறைச்சாலை குற்றங்கள் ஓரளவு பதிவு செய்திருந்தாலும், ‘வடசென்னை’ அப்பட்டமாக அங்குள்ள குற்றங்களை காட்சிப்படுத்தி இருக்கிறது.

 

படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் இடம்பெறும் மாந்தர்கள் வெறுமனே இடநிரப்பிகளாக வந்து போய்விடக்கூடாது என்பதில் இயக்குநர் மிகுந்த கவனமாக இருந்திருக்கிறார். செந்திலின் மனைவியாக வரும் பாத்திரம்கூட, ஆண்டிரியாவைப் பார்த்து, ‘உன்ன மாதிரி இல்ல… எனக்கு இருக்கறது ஒரே ஒரு புருஷன்தான்…’ என்று சொல்லும்போது அந்தப் பாத்திரமும் கவனம் பெற்று விடுகிறது.

 

வின்சென்ட் அசோகன், மிடுக்கு:

 

ஒரே காட்சியில் வந்தாலும் வின்சென்ட் அசோகன், மிடுக்கு. ராதாரவிக்கு ஒருவர் கால்களை பிடித்துவிடும் ஒரு காட்சி. அவர் அமீரிடம் பேசிக்கொண்டே இடது காலை அமுக்கி விடும்படி வலது காலால் இடது காலை தட்டி குறிப்பால் உணர்த்தும் காட்சி, அதிநுட்பமானது. ராதாரவியின் நீண்ட திரைப்பயணத்தில், இந்தப்படம் முக்கியமானது.

 

வடசென்னையின் வட்டார வழக்கு மிக அனாயசமாக கையாளப்படுகிறது. கெட்ட வார்த்தைகள் உள்பட. அதேபோல, அந்தப் பகுதிவாழ் மக்கள் அதிகம் புழங்கும் மட்ட (கொலை செய்வது), காஜ்ஜி (பெண் மீது மோகம்), அசால்ட்டு (சுலபமானது), பொருளு (ஆயுதங்கள்), சம்பவம் (கொலையை நிகழ்த்துவது), ஆல்ட்டி (எடுபிடி), அய்ட்டக்காரன் (இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை ரவுடிகள்), தவுலத் (பெரிய ஆள் தோற்றம்), பவுடரு (ஹெராயின்) என வட்டாரச் சொற்களே இயல்பாக பயன்படுத்தப்பட்டு உள்ளன. அதைப் புரிந்து கொள்ள தனி அகராதிதான் வேண்டும்.

 

தாராளமாக புழங்கும் கெட்ட வார்த்தைகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகளால் இந்தப் படத்திற்கு தணிக்கையில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. நிச்சயமாக 18 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் இந்தப்படத்தை பார்ப்பதை, அழைத்துச் செல்வதை தவிர்க்கலாம்.

 

கிஷோர், சமுத்திரக்கனி, ‘அவுட்டு’ பவன், சாய் தீனா, ‘ஜானி’ ஹரி, டேனியல் பாலாஜி, பாவல் நவகீதன், சுப்ரமணிய சிவா, அப்புறம் தனுஷின் மைத்துனராக வரும் தாஸ், அம்மாவாக வரும் மணிமேகலை என எல்லோரும் பாத்திரங்களில் வாழ்ந்திருக்கின்றனர். சக்கர நாற்காலியில், ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு, வாயில் எச்சில் வழிந்தோடும் நிலையில் வரும் கிஷோர், அபாரம். வெற்றிமாறன் படங்களில் மட்டும் கிஷோர் வெளுத்து வாங்குவது எப்படி எனத்தெரியவில்லை.

 

ராஜன் – சந்திரா – ஊர்; ராஜன் – குணா – செந்தில்; அன்பு – பத்மா – சந்திரா என ஒவ்வொரு அத்தியாயங்களையும் முன்பின்னாக நகர்த்தி, ‘நான் லீனியர்’ பாணியில் நேர்த்தியாக கதை சொன்ன விதத்திலும் இயக்குநர் தன் ஆளுமையை நிரூபித்திருக்கிறார்.

 

இந்தப் படத்தின் வெற்றியில் சரிபாதி பங்களிப்பு தொழில்நுட்ப கலைஞர்களுக்குதான் போய்ச்சேர வேண்டும். சிறைச்சாலையில் சாமியானா பந்தலுக்குள் நிகழ்த்தப்படும் வன்முறை காட்சியாகட்டும், தெரிந்தோ தெரியாமலோ ஒரு கொலையை செய்துவிட்டு அன்புவும், அவனது மைத்துனரும் சலவைத்துறை வழியாக ஓடிவரும் காட்சியாகட்டும் வேல்ராஜின் கேமரா தடதடக்க வைக்கிறது. வடசென்னையின், இருள் நிறைந்த சந்து பொந்துகளில் பார்வையாளர்களையும் இழுத்துக்கொண்டு ஓடியிருக்கிறார் வேல்ராஜ்.

 

இதுபோன்ற வாழ்வியலை கச்சாத்தன்மையுடன்தான் சொல்ல வேண்டும் என்று இயக்குநர் முடிவெடுத்து விட்டதாலோ என்னவோ, அதற்கேற்ப பின்னணி இசையால் ஈடு கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயண். நேரடி பாடல்களாக இல்லாமல் கதையினூடாக பயணிக்கும் பாடல்களாக தந்திருப்பதில் அவரின் புத்திசாலித்தனமும் பளிச்சிடுகிறது.

 

அன்புவின் எழுச்சி

சிறைச்சாலை, வடசென்னையின் குடிசைப்பகுதிகள் செட் எனக்கண்டுபிடிக்க முடியாத வகையில் கலை இயக்குநர் அதீத உழைப்பைக் கொட்டியிருக்கிறார். கலை இயக்குநருக்கு விருது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

 

”குட்சையோ குப்பமேடோ இது நம்ம ஊரு. நம்ம ஊருக்காக நாமதான் சண்ட செய்யணும்,” என்கிறார் அன்பு. அன்புவின் எழுச்சியை இரண்டாம் பாகத்தில் காணலாம் என்ற அறிவிப்போடு படம் முடிகிறது.

 

– வெண்திரையான்