Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்? சாதிய ஒடுக்குமுறையை துகிலுரியும் பரியேறும் பெருமாள்! #PariyerumPerumal

தமிழ் சினிமாக்களில்
இதுநாள் வரை ஆகிவந்த
காட்சி மொழியையும்,
நாயகத்தனத்தை
தூக்கிப்பிடித்தலையும்
சுக்கல் சுக்கலாக்கி,
புதிய தடத்தை அமைத்துக்
கொடுத்திருக்கிறது,
பரியேறும் பெருமாள்.
தமிழ் ரசிகனின் ரசனையையும்
பல படிகள் உயர்த்தி
இருக்கிறது.
இனி, பரியேறும்
பெருமாளுக்கு முன்,
பரியேறும் பெருமாளுக்குப்
பின் என்று தமிழ்
சினிமாக்களை
காலவரிசைப்படுத்தலாம்.

 

மய்யக் கதாபாத்திரம்

 

நம்முடன் தெரு முனை கடையில் தேநீர் அருந்தும் சராசரி இளைஞனைத்தான் கதிர் பிரதிபலிக்கிறார். அவர்தான் பரியேறும் பெருமாள். கதை நாயகன். மய்யக் கதாபாத்திரம் அவருக்கானது என்றாலும், படத்தில் வரும் வேறு சில துணை பாத்திரங்களே இந்தக் கதைக்கு அடர்த்தியைக் கூட்டியிருக்கின்றன.

 

இரண்டே காட்சியில் வந்தாலும் திரை பார்வையாளர்களை அச்சச்சோ… அவரை விட்டுடுங்கடா என சொல்ல வைத்திருக்கும் பரியேறும் பெருமாளின் தந்தையாக வரும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ்; படத்தின் முதல் காட்சியிலேயே இடைநிலை ஆதிக்க சாதியினரால் கொடூரமாக கொல்லப்படும் கருப்பி நாய்; திட்டமிட்ட கொலையை திட்டமிடாத விபத்துபோல் அனாயசமாக செய்துவிட்டுப் போகும் மேஸ்திரி தாத்தா (கராத்தே வெங்கடேசன்); நம்மாளுகள்ல ஒருத்தனாவது படிக்கணும்டே எனக்கூறும் ஆர்கேஆர் ராஜா ஆகிய பாத்திரங்கள் மய்யப் பாத்திரத்தின் கனத்திற்கு நிகரானது.

சாதிய ஒடுக்குமுறைகள்

 

பெரியார், அம்பேத்கர்
ஆகியோர் சாதிய
ஒடுக்குமுறைகள்,
வர்ண பேதங்களுக்கு
எதிராக போர்க்குரல்
எழுப்பியதை அற்புதமான
காட்சி மொழியாக
தந்திருக்கிறார் இயக்குநர்
மாரி செல்வராஜ். இதற்கு
முன்னர் தென்மாவட்டங்களை
மய்யப்படுத்திய படம் என்றாலே,
அரிவாள் வீச்சுகளும் ரத்தம்
தெறிக்கும் காட்சிகளுமே
நிறைத்திருக்கும். அல்லது,
சாதி பெருமை
பேசக்கூடியவையாக
இருக்கும்.

 

அவற்றில் இருந்து முற்றிலும்
மாறுபட்டு தனித்து நிற்கிறது
பரியேறும் பெருமாள்.
ஒவ்வொரு பாத்திரங்களும்
முதிர்ச்சியுடன் வார்க்கப்பட்டு
இருக்கின்றன. உதாரணத்திற்கு,
திருநெல்வேலிக்கு பக்கத்தில்
இருக்கும் புளியங்குளம் என்ற
சிற்றூரில் இருந்து
முதல் தலைமுறை
பட்டதாரி கனவுகளோடு
திருநெல்வேலி
சட்டக்கல்லூரியில்
சேர வருகிறான்
நாயகன் கதிர்.

 

அவரிடம் கல்லூரி முதல்வர்,
‘சரி… படிச்சி என்ன
ஆகப்போறீங்க…?’ எனக் கேட்பார்.
அதற்கு கதிர், ‘நான் பெரிய
டாக்டர் ஆகப்போறேன் சார்,’ என்பார்.
அந்தக் காட்சியைப் பார்த்த
மாத்திரத்தில், திரையரங்கில்
பார்வையாளர்கள் ‘களுக்’ என
சிரித்து விட்டதை காண
முடிகிறது. அதற்குப் பிறகு,
அந்த முதல்வர் நாயகனைப்
பார்த்து, ‘தம்பீ…
சட்டக்கல்லூரியில் படித்தால்
டாக்டர் ஆகி ஊசியெல்லாம்
போட முடியாது’ என்பார்.
அதற்கு நாயகன்,
‘அது தெரியும் சார்…
நான் சொன்னது, டாக்டர்
அம்பேத்கர் போல ஆவேன்’
என்று சொன்னேன் சார்,’
என்பார்.

டாக்டர் அம்பேத்கர் போல ஆவேன்

ஏதோ ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்திருக்கும் அந்த இளைஞன் டாக்டர் ஆகி விடுவதாக அறியாமல் சொல்லிவிட்டார் என்று அவரை கேலி செய்து, பார்வையாளர்களைப்போல் சிரித்து விடாமல், அந்தக் கல்லூரி முதல்வர் மிகுந்த முதிர்ச்சியோடு, நாயகனை தனியாக அழைத்து, சட்டம் படித்தால் டாக்டர் ஆக முடியாது. வக்கீல்தான் ஆக முடியும் என்று புரிய வைக்கிறார். இப்படி சின்னச்சின்ன பாத்திரங்களையும் முதிர்ச்சியுடன் படைத்திருக்கிறார் இயக்குநர். அந்தக் காட்சியில், டாக்டர் அம்பேத்கர் போல ஆவேன் என்று நாயகன் சொன்னபோது திரையரங்கில் பலத்த கரவொலி.

 

படத்தின் முதல் காட்சியிலேயே பரியன் என்ற பரியேறும் பெருமாளின் செல்ல நாய் கருப்பி, ஆதிக்க சமூகத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டு விடுகிறது. ரயில் தண்டவாளத்தில் கருப்பி, ரத்தமும் சதையுமாக செத்துக்கிடக்கும் காட்சியே, இந்தப் படம் எதைப்பற்றி பேசப்போகிறது என்பதை கட்டியம் கூறி விடுகிறது.

 

தண்டவாளத்தில் கருப்பியின் உடல் பாகங்கள் சிதறிக் கிடக்கும் அந்தக் காட்சியும், நாயகனை ரயில் தண்டவாளத்தில் கிடத்தி ஆணவக்கொலை செய்ய முயலும் காட்சியும் ஓமலூர் கோகுல்ராஜ், தர்மபுரி இளவரசன் ஆகியோரின் ஆணவக்கொலை நிகழ்வுகள் நம் கண்முன்னே நிழலாடுகின்றன.

 

ஆணவக்கொலை

 

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு செலுத்தி இந்தியா உலக சாதனை படைத்துவிட்டதாக மார்தட்டுகிறோம். அதேநேரத்தில்தான், உடுமலை சங்கர், கோகுல்ராஜ், இளவரசன் போன்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இடைநிலை ஆதிக்க சாதியினரின் வெறியாட்டத்திற்கு பலியாக்கப்படுவதும் அரங்கேறுகின்றன.

இந்த ஆணவக்கொலைகளைப் பற்றியும் அழுத்தமாக, அற்புதமான காட்சிமொழிகளில் பேசுகிறது பரியேறும் பெருமாள். கூட்டம் நிரம்பி வழியும் ஓடும் பேருந்தில் இருந்து, ஓர் இளைஞனை மேஸ்திரி தாத்தா கீழே தள்ளி விட்டு கொன்று விடுகிறார்.

 

அதற்கு அடுத்தக் காட்சியில், அந்தப் பேருந்தில் ஓர் இளம்பெண் மட்டும் கடைசி இருக்கையில் அமர்ந்தவாறு வெடித்து அழும் காட்சி காட்டப்படுகிறது. இந்த காட்சி மொழி, படம் முடிந்து வெளியே வந்த பிறகும் மனதை பாடாய்ப்படுத்துகிறது.

 

மற்றொரு காட்சியில், வீட்டின் நடுக்கூடத்தில் மகள் மயங்கிய நிலையில் தரையில் கிடப்பாள். ‘பாவி மவ இப்படி பண்ணிட்டாளே…’ என்று பெற்றோர், சுவரில் சாய்ந்து அரற்றிக்கொண்டிருக்க, உள்ளே நுழைவார் அந்த மேஸ்திரி தாத்தா.

 

‘நான் பாத்துக்கறேன்… ரெண்டு பேரும் கொஞ்சம் அப்படி போங்க…’ என்று வெளியே அனுப்பிவிட்டு, மயங்கிக் கிடக்கும் அந்த இளம்பெண்ணின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டி விடுவார். கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கவிட்டு விடுவார். எதற்காக அவர் அப்படி செய்தார்? ஏன் செய்தார்? என்பதற்கெல்லாம் வசனங்கள் இல்லை.

 

குரூர மனநிலை

 

சாதி ஆதிக்க வர்க்கத்தின் குரூர மனநிலையை இப்படியான காட்சி மொழியினூடாக இயக்குநர் உணர்த்தி விடுகிறார். போகிற போக்கில் குரூரமான கொலைகளை அரங்கேற்றும் அந்தக் கிழவர் மீது பார்வையாளர்களுக்கும் அச்சம் தொற்றிக்கொள்கிறது. கூடவே, அவர் மீதான வெறுப்பும் வந்துவிடுகிறது.

 

இப்படி அந்த மேஸ்திரி தாத்தா திரையில் நிகழ்த்தும் மூன்று கொலைகளும் வெவ்வேறு வகையிலானவை. ஆனால் அவை கொலை என்றே நிரூபிக்க முடியாத கொலைகளாக அரங்கேற்றப்படுகின்றன.

 

‘ஏரியில் மூழ்கிய முதியவரை காப்பாற்ற முயன்ற வாலிபர் பலி’ என்றோ, ‘பேருந்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி’ என்றோ தினசரிகளில் வெளியாகும் செய்திகளின் பின்னணியில் இப்படியான குரூரங்களும்கூட நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் ஊடக செய்தியாளர்கள், காவல்துறையினர் சொல்வதைத்தானே செய்தியாக்குகின்றனர்.

 

செவ்வணக்கம்

தமிழில், பேசும் படங்கள் வெளியாகி 87 ஆண்டுகள் ஆன நிலையில், வரலாற்றில் முதன்முதலாக, நாயகனின் அப்பாவாக, தெருக்கூத்தில் பெண் வேடமிட்டு ஆடும், சற்றே திருநங்கை சாயலுடனான பாத்திர வார்ப்பை நிருவியதற்கே இயக்குநர் மாரி செல்வராஜூக்கு செவ்வணக்கம் வைக்கலாம்.

 

கல்லூரியில் நடந்த ஒரு தவறுக்கு நாயகனின் தந்தையை அழைத்து வரச்சொல்வார் கல்லூரி முதல்வர் (‘பூ’ ராம்). தந்தையை அழைத்துச் சென்றிருப்பார் நாயகன். முதல்வர் அறைக்குள் நுழைவதற்குமுன் மகனிடம், ‘பரியா… பயப்படாம பேசலாம்ல…?’ எனக்கேட்பார். அதற்கு பரியன், ‘அப்படித்தான்பா பேசணும். போய் பேசுங்க,’ என்றுகூறி அனுப்பி வைப்பார். ‘அப்படித்தான் பேசணும்’ என்று ஒடுக்கப்பட்டோருக்கான நம்பிக்கை குரலாக இயக்குநர் பதிவு செய்திருப்பதாக கருதுகிறேன். இதுபோல் படம் நெடுக படிமங்களுடன் கூடிய வசனங்கள், காட்சிகள் ஏராளம்.

 

திருநங்கை சாயலுடன் கொண்டை போட்டிருக்கும் பரியனின் தந்தையை, ‘எங்க வேட்டிய அவுத்துக்காட்டு நீ ஆம்பளையானு பாக்கணும்,’ என்று அவரை தூரத்திச்சென்று வேட்டியை உருவி, அரை நிர்வாணமாக ஓட விடுகின்றனர் கல்லூரி மாணவர்கள். மனிதன், தன்னைத் தாக்க வரும் விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளும் வழிமுறைகளை அறிந்திருக்கிறான். ஆனால் மனிதனிடம் இருந்து தப்பித்துக்கொள்ளத்தான் மனிதர்க்கு வழியேதுமில்லாது போய்விடும் வலியை அந்தக் காட்சி எல்லோர் மனதிலும் ஆழமாக தைத்து விடுகிறது.

 

தந்தையின் மானம் காக்க அவரை துரத்திக்கொண்டு ஓடும் நாயகனின் மூச்சிரைப்பும், தந்தையின் மூச்சிரைப்பும் இந்த விமர்சனக் கட்டுரை எழுதும்போதும் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அப்போது உயரமான கோணத்தில் ஸ்ரீதரின் கேமரா நிலைக்குத்தி நிற்கிறது.

 

அங்கே கம்யூனிஸ்ட் கட்சிக்கொடி உள்பட அனைத்துக் கட்சிகளின் கொடிகளும் பறந்து கொண்டிருக்கின்றன. இப்படி பார்த்து பார்த்து, பல காலமாக தன் மனதுக்குள் ஊறப்போட்டியிருந்த காட்சிகளையே படம் முழுக்க பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

 

பரியனுக்கு நேர்ந்த அவமானம்

 

சாதிய போக்குடன் நடந்து கொள்ளும் சக மாணவன் ஒருவன் தந்திரமாக பரியனை, மாணவிகளின் கழிவறைக்குள் தள்ளிவிட்டு கதவை மூடிவிட்டு ஓடிவிடுகிறார். சக மாணவிகளின் முன்பாக பரியன் தலைகுனிந்தவாறே வெளியே வரும் காட்சி, பார்வையாளனின் மனதுக்குள் கலக்கத்தை உண்டுபண்ணுகிறது.

அதற்கு அடுத்தக் காட்சியில், பரியனுக்கு நேர்ந்த அவமானம், அவன் செய்த தவறுகள் குறித்து பெண் பேராசிரியர் ஒருவரும், ஆண் பேராசிரியர் ஒருவரும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றனர். அந்த ஆண் பேராசிரியர் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை அவருடைய ஒப்பனையில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.

 

அந்தக் காட்சியில், பரியனை அழைத்து விசாரிக்கும் கல்லூரி முதல்வர் (பூ ராம்), ‘எங்கப்பா யார் தெரியுமா… ரோட்டோரம் செருப்பு தைக்கிற சாதாரண தொழிலாளி. எங்கள எல்லாரும் ஏறி மிதிப்பாங்க. ஆனா நாம முன்னேறணும்னா படிப்பு ஒண்ணுதான் ஒரே வழினு அப்ப முடிவு பண்ணேன். பேய் மாதிரி படிச்சேன். அப்போ யார் யாரெல்லாம் என்னை ஓட ஓட விரட்டினாங்களோ அவங்கள்லாம் இப்போ என்ன பார்த்தா ‘அய்யா… சாமி’னு கையெடுத்து கும்பிடறாங்க…,’ என தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். யாருக்கு எதை சொல்ல வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜ் கருதினாரோ, அதை அந்தக் கல்லூரி முதல்வர் வாயிலாக புரிய வைத்து விடுகிறார்.

 

அப்போது பெண் பேராசிரியர், ‘என்ன சார் கண்டிச்சு வைப்பீங்கனு பார்த்தேன்…’ என்று சொல்ல, அதற்கு அந்தக் கல்லூரி முதல்வர், ‘ஒண்ணு… படிச்சு முன்னேறட்டும். இல்லேனா சண்ட போட்டு சாகட்டும்,’ எனும்போது திரையரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகினது.

 

ஆதிக்க சாதியினர்

 

இந்தப் படம் ஏதோ ஒரு தரப்பினரின் மீது மட்டும் செலுத்தப்படும் ஒடுக்குமுறைகளை மட்டுமே பேசுகிற படமாகி விடக்கூடாது என்பதில் இயக்குநர் எச்சரிக்கையாகவே இருந்திருக்கிறார்.

 

எந்த ஆதிக்க சாதியினர், பரியனையும், அவனது தந்தையையும் அவமானப்படுத்துகின்றனரோ, கொலசாமிக்கு செய்யும் சேவையாக நினைத்து ஆணவக்கொலைகளை நிகழ்த்துகின்றனரோ அதே சமூகத்தில் இருந்துதான் நாயகன் மீது காதல், பாசம், பரிவு கொள்ளும் நாயகி ஆனந்தியின் பாத்திரமும், ‘டேய்… நான் சாதி பாத்துதான் உன்கூட பழகுறனாடா…’ என்று எல்லா நேரத்திலும் உற்ற நண்பனாக உடன் இருக்கும் நண்பர் யோகி பாபுவின் பாத்திரமும் வார்க்கப்பட்டு இருக்கின்றன.

 

சொல்லப்போனால் நாயகியின் தந்தையாக வரும் மாரிமுத்து பாத்திரமும், சாதிய ஒடுக்குமுறைகளை விரும்பாதவராகத்தான் இருக்கிறார். ஆனாலும், அங்காளி பங்காளிகளின் நெருக்கடிகளால் அவரும் சாதிய கோட்பாடுகளுக்கு ஆட்பட நேரிடுகிறது.

 

நாயகியின் அழைப்பின்பேரில் அவருடைய வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்கிறார் நாயகன். அங்கே, நாயகியின் உறவினர்களால் கொடூரமாக தாக்கப்படுகிறார் பரியன். அவர் மீது சாதித் திமிரில் சிறுநீர் கழித்தும் அவமானப்படுத்துகின்றனர்.

 

கடந்த காலங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலரிடம் குறிப்பிட்ட பிரிவினர் சிறுநீரை குடிக்கச் சொன்ன நிகழ்வுகளும் தமிழகத்தில் நடந்துள்ளன. அந்த நிகழ்வை மனதில் வைத்து திரைமொழியாக்கி இருந்தார் இயக்குநர்.

 

திருமண மண்டபத்தில் தாக்கப்பட்ட பிறகான காட்சியில், பரியனின் மனதுக்குள் ஏன் தன் மீது இத்தனை ஒடுக்குமுறையும், அடக்குமுறையும் அவமானங்களும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன என்ற கேள்விகள் எழுகின்றன. நானும் அவர்களைப்போல மனிதன்தானே? உண்மையில் நான் யார்? என்ற குழப்பமும் அய்யமும் ஒருசேர ஏற்பட்டு விடுகிறது.

 

ரயில் தேடி வந்து கொல்லும் நான் யார்?

 

அந்த குழப்பமான அல்லது
அங்கலாய்ப்புகளை,
‘நான் யார்?’ என்ற
பாடலினூடாக நிகழ்காலத்தில்
நடந்த சம்பவங்களை
இணைத்துக் காட்சிப்படுத்தி
இருப்பார் இயக்குநர்.

 

ரயில் தேடி வந்து
கொல்லும் நான் யார்?,
நதியில் செத்த மீனாய்
மிதக்கும் நான் யார்?
உன் கைபடாமல் தண்ணீர்
பருகும் நான் யார்?,
மலக்குழியில் மூச்சை
அடக்கும் நான் யார்?,
பூக்கும் மரமெங்கும் தூக்கில்
தொங்கும் நான் யார்?,
குடிசைக்குள் கதறி
எறிந்த நான் யார்?…
இப்படி போகிறது
அந்தப் பாடல்.

 

பாடல் காட்சியின்போது
நாயகனைச் சுற்றிலும் பாம்பு,
தேள், கொடிய விலங்குகள்
சூழ்ந்திருக்கின்றன. கைகள்
கட்டப்பட்டு இருக்கின்றன.
நிழல் உருவமாக
கருப்பி நாய் வரும்போதும்,
நான் யார் பாடலின்போது
வரும் மாந்தர்களும் நீல
வண்ணத்தில் காட்டப்படுகின்றனர்.
உழைக்கும் வர்க்கத்தின்
நிறமாக கருதலாம்;
அல்லது ஒடுக்கப்பட்ட
சமூகத்தின் நிறமாக
இருக்கலாம்.

கீழ்வெண்மணி

 

இப்படி ஒவ்வொரு கேள்வியாக விரியும் பாடலில் செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி மரணித்த ஒடுக்கப்பட்டவர்களின் முகமும், கோகுல்ராஜ், இளவரசன் போன்றோரும், கீழ்வெண்மணி குரூர கொலையும், மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிகழ்ந்த கொடூரமும் பார்வையாளர்களின் மனங்களில் இயல்பாகவே வந்து போகின்றன.

 

இறுதிக் காட்சியில் நாயகியின் தந்தை மாரிமுத்து, ‘தம்பி இங்க வாங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்….’ என்று அழைப்பார். நிகழ்விடம், ஒரு தேநீர் கடை. நாயகன் பால் கலக்காத தேநீரும், நாயகியின் தந்தை பால் கலந்த தேநீரும் அருந்துவார்கள். நாயகியின் தந்தை சொல்வார்… ‘நல்லா படிங்க தம்பி… இப்படியே எல்லா காலமும் இருந்துடாது. ஒருநாள் மாறும்ல….’ என்பார்.

 

காலியான இரண்டு தேநீர் குவளைகளும் அங்கே மேசை மீது இருக்க, நாயகி, நாயகியின் தந்தை, நாயகன் கிளம்பிச் செல்வதுடன் படம் முடிகிறது. தேநீர் மேசையில் ஒருபுறம் பால் கலந்த வெற்று தேநீர் குவளையும், மற்றொருபுறம் பால் கலக்காத வெற்று கருப்பு தேநீர் குவளையும் மட்டும் குறியீடாக காட்டப்படுகிறது.

 

ஒரே ஆயுதம் கல்வி

 

இப்படி படம் நெடுக நிறம், சாதி, பொருளாதாரம் என பல்வேறு காரணங்களால் ஒடுக்கப்பட்டவர்களின் மீதான தாக்குதலை வசனங்களைக் காட்டிலும் காட்சி மொழியினூடாக உணர்த்திச் செல்கிறார் இயக்குநர்.

 

ஒடுக்கப்பட்டவர்கள் மேலே ஏறி வர, அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டும்தான் என்பதை உரத்துச் சொல்கிறது பரியேறும் பெருமாள்.

 

– பேனாக்காரன்.