Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2

தமிழக சட்டப்பேரவை
தேர்தல் களம்,
வழக்கம்போல கனல்
கக்குகிறது.
இதுவரையிலான தமிழக
தேர்தல் வரலாற்றில்,
இந்த தேர்தலானது
அதிமுக, திமுக ஆகிய
இரு திராவிட கட்சிகளுக்கும்
முற்றிலும் புதிய அனுபவமாக
இருக்கும். மக்களும் கூட,
தேர்தல் முடிவுகளை தெரிந்து
கொள்ள வழக்கத்தை விடவும்
கூடுதல் ஆவலுடன்
காத்திருக்கிறார்கள்.

 

நாளை (ஏப். 6) காலை
7 மணிக்கு வாக்குப்பதிவு
தொடங்க உள்ள இந்த
கடைசி நிமிடத்தில்,
திருவாளர் பொதுஜனங்களின்
சிந்தனைக்காக சில சங்கதிகளை
பேச விழைகிறேன்.
சற்றே நீளமான பதிவுதான்.
இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக
கொஞ்சம் பொறுமை காத்து
செவிசாய்க்க வேண்டுகிறேன்.

 

களத்தில் எத்தனை முனை
போட்டி நிலவினாலும்,
நீங்கள் திமுக அல்லது
அதிமுக கூட்டணி ஆகியவற்றில்
ஒன்றைத்தான் தேர்வு செய்யப்
போகிறீர்கள். எவற்றையெல்லாம்
முன்வைத்து இங்கே ஒரு
கூட்டணியை புறக்கணித்து
மற்றொரு கூட்டணியை தேர்வு
செய்கிறீர்களோ, அத்தனை
குற்றங்களையும் இருவருமே
செய்திருக்கிறார்கள்…
இனியும் செய்வார்கள்
என்பதை எப்போதும் மனதில்
கொள்ள வேண்டும்.

 

இங்கே திமுக, அதிமுக
ஆகியவை வேறு வேறு
கட்சிகள் அல்ல. ஒரே
சாக்கடையில் பன்றிகள்
போல உருண்டு புரண்டு
கிடந்தவைதான். இப்போதும்
அவை சாக்கடையில் திளைத்துக்
கொண்டுதான் இருக்கின்றன.

 

சரக்கு வாகனங்களில்
ஆள்களை ஏற்றக்கூடாது என்று
சட்டம் போடும் ஆட்சிக்
கட்சிகள்தான், தேர்தல் பரப்புரை
கூட்டங்களுக்கு கூலி கொடுத்து
அடிமாடுகள் போல ஆள்களை
சரக்கு வாகனங்களில் கொத்தாக
அள்ளிக்கொண்டு வருகின்றன.
பொது சுவர்களில் விளம்பரம்
செய்யக்கூடாது என்பவர்கள்தான்,
அவரவர் சார்ந்த கட்சி
விளம்பரங்களை அரசு
சுவர்களில் தாராளமாக
எழுதுகின்றனர்.

 

தேர்தல் அறிக்கையில் மட்டுமே
இரு திராவிட கட்சிகளும் இன்று
வரை கச்ச தீவை மீட்டுக்
கொண்டிருக்கின்றன. ஆட்சியில்
இருக்கும்போது, இரு கட்சிகளுமே
அதற்காக சிறு துரும்பைக் கூட
கிள்ளிப்போட்டதில்லை.
மீட்பது இருக்கட்டும்…
நம் வசமிருந்த தீவை யார்
கொடுத்தது என்ற கேள்வியாவது
உங்கள் மனதில் எப்போதாவது
எழுந்தது உண்டா?

 

நீட் தேர்வை ரத்து
செய்வதற்கான முயற்சிகளை
யார் மேற்கொண்டாலும்
வரவேற்கலாம்; அதேநேரம்,
மாநில பட்டியலில் இருந்த
கல்வியை மத்திய பட்டியலுக்கு
தாரை வார்த்தவர்கள் யார்?
என்று எப்போதேனும்
யோசித்திருக்கிறீர்களா?.
அப்படி கல்வியை,
மத்திய பட்டியலுக்கு
கொண்டு சென்றதால்தானே
இன்றைக்கு நமக்கான
கல்வியைக்கூட நாம்
வடிவமைக்க முடியாத
நிலை இருக்கிறது!

 

எங்கே மதுவிலக்கு?:

 

கடந்த 2016 சட்டப்பேரவை
தேர்தலின்போது திமுக,
அதிமுக மற்றும் அவற்றின்
கூட்டணிகள் மது ஒழிப்பு
பற்றி காட்டுக்கூச்சல்
போட்டார்களே? தேர்தல்
அறிக்கையிலும்
மதுக்கடைகளை மூடுவோம்
என போட்டிப்போட்டு
அறிவித்தனர். மதுக்கடைகள்
படிப்படியாக மூடப்படும்
என்ற அதிமுகவோ, மாதம்
100 கடைகளை மூடியிருந்தால்கூட
இந்நேரம் பூரண
மதுவிலக்கை கொண்டு
வந்திருக்க முடியும்.

 

திமுகவோ இந்தமுறை
தேர்தல் அறிக்கையில்கூட
மது ஒழிப்பு பற்றி
சம்பிரதாயமாகக்கூடச்
சொல்லவில்லையே?
மதுவிலக்கு கொண்டு வந்தால்,
இரு திராவிட கட்சிகளின்
பின்புலத்திலும் இயங்கும்
மதுபான ஆலை முதலாளிகள்
நலன் பாதிக்கப்படும்.
அவர்களின் நலன் காக்க
எத்தனை பெண்களின்
தாலியையும் அறுக்கலாம்;
தப்பில்லை.
குடும்பத் தலைவிகளுக்கு
1000 ரூபாயும், 1500 ரூபாயும்
தருவோம் என்றதும்,
மது ஒழிப்பு குறித்து
நம் தாய்மார்கள் வசதியாக
மறந்துவிட்டனர்.

 

மக்களின் இந்த மறதி நோய்தான் அரசியல் கட்சிகளின் மூலதனம்.

 

அரசு ஊழியர்களும்,
ஆசிரியர்களும் திராவிடக்
கட்சிகளின் திடமான
வாக்கு வங்கிகள்.
எந்த அரசாக இருந்தாலும்
அரசு ஊழியர்களை,
ஆசிரியர்களை பகைத்துக்
கொள்ள மாட்டார்கள்.
அரசை இயக்குவதும்,
தேர்தல் காலங்களில்
பணியாற்றுவதும் அவர்கள்தான்.
அதனால் அவர்களின்
தயவு எப்போதும்
ஆட்சியாளர்களுக்கு தேவை.
அதனால்தான் அவர்களுக்கு
மட்டும் சலுகைகளை
எப்போதும் வாரி வழங்குகின்றன.
அதிமுகவை விட இந்த
மந்திரத்தை திமுக நன்கு
உணர்ந்திருக்கிறது.

 

பணியில் இருக்கும்
அரசு மருத்துவர் ஒருவர்
சொல்லாமல் கொள்ளாமல்
5 ஆண்டுகள் பணிக்கு வராமல்
தலைமறைவாகிவிட்டு,
மீண்டும் வந்தாலும் அவர்
விட்டுச்சென்ற இடத்தில்
இருந்து பணியைத்
தொடர முடியும்.
எந்த ஒரு ஊழியர்
குற்றமிழைத்தாலும் அவர்கள்
மீது அத்தனை சீக்கிரத்தில்
நடவடிக்கை எடுத்து விடாது.
ஆசிரியர்களுக்கு வீட்டில்
அமர வைத்தே ஓராண்டுக்கு
சும்மாவே அரசால் சம்பளம்
கொடுக்க முடியும். இதெல்லாம்
நிர்வாகத்திறமையா என்ன?
50 ஆண்டுகளுக்கு மேலாக
ஆண்டு வரும் திராவிட
கட்சிகளுக்கு அரசுத்துறைகளை
சீரமைக்கும் எண்ணமே
இதுவரை இருந்ததில்லை.
ஏனெனில், நிர்வாகத்தை
சீரமைத்தால் பல தரப்பிலும்
அதிருப்தியை சம்பாதிக்க
வேண்டியது வரும்.

 

குடிமைப்பொருள் விநியோகத்திலும், கூட்டுறவுத் துறையிலும் நடக்காத ஊழலா? ஆட்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாக திருடுவதற்காகவே ஏற்படுத்தப்பட்ட துறைகள் அவை. இப்படி சீரமைக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருந்தாலும், அவற்றையெல்லாம் திமுகவும், அதிமுகவும் கண்டுகொள்வதே இல்லை.

 

திருவாளர் பொதுஜனங்களும் வாக்குக்கு பணம் கிடைத்தால் போதும்; யார் அதிகமாக கொடுக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிப்பார்கள்; அல்லது, இரு கட்சிளுக்கும் வாக்குகளை பகிர்ந்தளித்துவிட்டு ஜனநாயக கடமை ஆற்றிவிட்ட திருப்தி அடைந்து விடுகின்றனர்.

 

காஸ்ட்லி தேர்தல்:

 

இந்த சட்டப்பேரவை தேர்தல்தான், இதற்கு முந்தைய பொதுத்தேர்தல்களை விடவும் மிகவும் செலவினமிக்கது. அதாவது, மிகவும் ‘காஸ்ட்லி’யான தேர்தல்.

 

வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை திமுக, அதிமுக கட்சியினர் வீடு வீடாக பட்டுவாடா செய்து வருகின்றனர். போட்டி கடுமையாக இருக்கும் இடங்களில், ஒரு வாக்குக்கு 3000 ரூபாய் வரை கூட பட்டுவாடா நடந்து வருகிறது.

 

திமுக, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய மட்டுமே 10 கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. அதிமுக வின் பணப்பட்டுவாடா பட்ஜெட், 10 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை.

 

இது தவிர, கடந்த 30 நாள்களாக வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் பரப்புரை, ஊடகங்களில் விளம்பர செலவு, பொதுக்கூட்ட செலவு, போக்குவரத்து செலவு, கூலிக்கு கூட்டம் சேர்த்தது, வாக்குச்சாவடியில் பணியாற்றும் தொண்டர்களுக்கான உணவு, மதுபான செலவு என பெரும் பட்டியலே நீளும். இவற்றையும் சேர்த்தால் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் ஒரு தொகுதிக்கு 30 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்கின்றன.

 

அதாவது, இரு கட்சிகளும் சராசரியாக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 30 கோடி வரை செலவிடுகின்றன. எனில், 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இவ்விரு கட்சிகள் மட்டுமே 14 ஆயிரம் கோடி ரூபாய்களை சர்வ சாதாரணமாக வாரி இறைக்கின்றன.

 

இப்படி பல்லாயிரம் கோடிகளை கொட்டி, ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது என்பது, அப்பாவி மக்களுக்கு சேவை செய்யத்தான் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.

 

உண்மையிலேயே மக்கள் நலனும், சேவையும்தான் இக்கட்சிகளின் குறிக்கோளாக இருக்குமேயானால் ஆட்சிக்கு வராமலேயே ஒரு என்.ஜி.ஓ.,வாக இருந்து கொண்டு தாங்கள் நினைத்ததை செய்திருக்க முடியும்.

 

நடிகர் சூர்யாவை, பாக்ஸ் ஆபீசில் சூப்பர் ஸ்டார் என்று கூட சொல்லிவிட முடியாது. ஆனால் அவர் தனது, ‘அகரம் அறக்கட்டளை’ மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களை படிக்க வைத்து, மருத்துவர், பொறியாளர்களாக உருவாக்கி வருகிறார். தனி மனிதனால் இத்தகைய சாதனைகள் நிகழ்த்தப்படும்போது, தேர்தலுக்காக 14 ஆயிரம் கோடிகளை கொட்டும் திமுக, அதிமுக கட்சிகள் ஏன் அவ்வாறான அறக்காரியங்களைச் செய்வதில்லை? ஏன் அவர்கள், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இத்தனை ஆயிரம் கோடிகளைக் கொட்ட வேண்டும்? என்றைக்காவது இப்படி எல்லாம் நீங்கள் யோசித்தது உண்டா?

 

இங்குள்ள பெருங்கட்சிகள் ஏன் அதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கிறார்கள்? எல்லாம், காசு… பணம்… துட்டு… money… money… அதிகாரத்தின் மூலமாக பணம் பண்ணுவது மட்டுமே இக்கட்சிகளின் ஒரே குறிக்கோள்.

 

கழிப்பறை எங்கே?:

 

பொது நூலகத்துறையின் கீழ் சின்னச்சின்ன கிராமங்களில் கட்டப்பட்ட கிளை நூலக கட்டடங்கள் எத்தனையோ பாழடைந்து கிடப்பது அவர்களுக்கு தெரியாதா என்ன? எத்தனையோ கிராமங்களில் பட்டா இல்லாமல் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வசித்தும் வரும் குடும்பங்கள் இருப்பதை அவர்கள் அறியாதவர்களா என்ன?

 

அரை நூற்றாண்டு காலம் ஆண்ட பிறகும்கூட அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிவறை வசதிகள் இல்லை; பொதுவெளியில் மலம் கழிக்கும் இழிநிலை இன்னும் தொடர்கிறது. இப்படியான தொடரும் இழிநிலைக்காக அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

 

ஒரு அரசியல் கட்சி கொண்டு வந்த திட்டத்தை வேண்டுமானால் மற்றொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது முடக்கி வைக்க முடியுமே தவிர, திராவிடக் கட்சியினர் முதலாளிய வர்க்கத்தினருக்கு எதிராக ஒருபோதும் செயல்பட மாட்டார்கள்.

 

இங்கே கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் கொண்டு வரப்பட்டவை அனைத்துமே முதலாளிய வர்க்க நலனுக்கானவை மட்டுமே. அவை மக்களுக்கானவை அல்ல. அதன்மூலம் பணம் பண்ணுவதுதான் திமுக, அதிமுக கட்சிகளின் ஒரே நோக்கம்.

 

கார்ப்பரேட் அரசியல்:

 

இப்போதுள்ள தேர்தல் ஜனநாயக நடைமுறையில் அரசியல் கட்சிகளுக்கு இருக்கும் ஒரே நெருக்கடி என்ன தெரியுமா? வாக்குக்காக மக்களின் கால்களில் விழுந்தே ஆக வேண்டும் என்பது மட்டும்தான். மற்றபடி, எந்த தொகுதியில் யாரை நிறுத்த வேண்டும்? புதிய ஆட்சியில் யாரை எந்த துறைக்கு அமைச்சராக்க வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிப்பது பெரும் முதலாளிகள்தான்.

 

மக்களவை தேர்தலில் கார்ப்பரேட்டுகள் லாபியை பற்றி அரசியலை உற்று நோக்குபவர்கள் அறிவர். பல அமைச்சர்கள், கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகளாகவே கூட மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அமர்வது உண்டு. சட்டமன்றத்திலும் இதுதான் நிலை. இப்படித்தான் நமது தேர்தல் ஜனநாயகம் இதுவரை இருந்து வருகிறது.

 

காலையில் ஒரு கட்சியில் இருந்து பிரிந்து, இன்னொரு கட்சியில் சேரும் நபருக்கு உடனடியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனில், அப்படிப்பட்ட கட்சிகளுக்கு என்ன உயர்ந்த கொள்கை இருக்க முடியும்?

 

பன்றியின் விலையை விட நம் விலை குறைவு:

 

இப்படிப்பட்ட கேடுகெட்ட ஆள்களிடம் இருந்து நாமும் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது என்பது எத்தனை கேவலம்? வாக்குக்காக கட்சியினர் கொடுக்கும் ஆயிரமும், இரண்டாயிரமும் நம் வாழ்க்கையின் தேவையை பூர்த்தி செய்து விடுமா?

 

கழிவைத் தின்று வாழும் ஒரு பன்றியின் சந்தை விலை கூட 5 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது; ஆனால் நாம் வெறும் 1000 ரூபாய்க்கு அரசியல் கட்சிகளிடம் விலை போய்விடுகிறோம் என்ற ஒப்பீடு நம் முகத்தில் காரி உமிழ்ந்தது போலில்லையா?

 

ஒரு தேசத்தில் ஒரு சதவீத மக்களிடம் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் எழுந்தாலே போதும் அங்கே புரட்சி உண்டாகும் என்கிறார் தோழர் சே.

 

குறைந்தபட்சம் திமுக, அதிமுக என்ற திருடர்களிடம் இருந்தாவது நாம் தமிழகத்தை விடுவிக்க வேண்டாமா?

 

உளவியல் தாக்குதல்:

 

காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் ‘ஜெயிக்கிற கட்சி’ என்ற ஒரு மாயையை, செயற்கையான கருத்தோட்டத்தை உங்கள் மனதில் திணிக்கின்றன. உங்கள் உளவியல் மீது ஊடகங்கள் தாக்குதல் நடத்துகின்றன. அப்படிச் செய்வதால் ஊடகங்களுக்கு கோடிகளில் கூலி கிடைக்கின்றன.

 

தேர்தல் காலங்களில் தினத்தந்தி, தினகரன், தினமலர், தினமணி என எல்லா முன்னணி நாளிதழ்களுமே ஒவ்வொரு வேட்பாளரிடமும் 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொண்டுதான் செய்திகளை வெளியிடுகின்றன. பருவ இதழ்களும், காட்சி ஊடகங்களும் பணம் பெற்றுக்கொண்டுதான் செய்தி வெளியிடுகின்றன. இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

 

இப்படியான திரைமறைவு பேரங்களின் பின்னணியில்தான் ஊடகங்கள், குறிப்பிட்ட ஒரு கட்சி, ஆட்சியைக் கைப்பற்றும் என ஒவ்வொரு தேர்தலின்போதும் மக்களின் உளவியல் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதை வைத்துக்கொண்டு ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களிப்பேன் என்று முடிவெடுப்பது வாக்காளரின் அறியாமையேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? உண்மையில், ஜெயிக்கிற கட்சி என்று ஒரு கட்சி இருக்கிறதா? பெரிய ஊடகங்கள் அவர்கள் சார்ந்து இருக்கும் கட்சிகள் மற்றும் முதலாளிகளுக்கான சார்பு செய்திகளை மட்டுமே தருகின்றனவே தவிர, மக்களுக்கான செய்திகளை ஒருபோதும் தருவதில்லை.

 

எவ்வளவு செலவு செய்வீங்க?:

 

இப்போதுள்ள தேர்தல்
நடைமுறைகள் பெரும்
முதலாளிகளுக்கும்,
பணக்காரர்களுக்கும் மட்டுமே
சாதகமானதாக இருக்கின்றன.
இங்கே சாமானியர்கள்
தேர்தலில் போட்டியிடவே
முடியாது என்னும் நிலையை
தேர்தல் ஆணையமும்,
அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு
உருவாக்கி வைத்திருக்கின்றன.

 

திமுகவில்,
தேர்தல் சீட் கேட்டு
விருப்ப மனு
கொடுத்தவர்களுக்கு
நேர்காணல் நடந்தது.
அதில் எல்லோரிடமும்
கேட்கப்பட்ட ஒரே கேள்வி…
”எவ்வளவு செலவு செய்வீங்க?”
என்பது மட்டும்தான்.
அத்துடன் நேர்காணலும்
முடிந்து போனது.
இதிலிருந்தே
எத்தகையவர்களுக்கு சீட்
வழங்கப்பட்டிருக்கும்
என்பதை நீங்கள்
யூகித்துக் கொள்ளலாம்.

 

எங்கே 30 சதவீதத்திற்கும்
கீழாக வாக்குப்பதிவு
விகிதம் சரிந்து
விடுமோ என்ற அச்சம்
தேர்தல் ஆணையத்திற்கும்
இருக்கிறது.
சாமானியர்கள் தேர்தலில்
நின்றால், அவர்களால்
வாக்கிற்கு பணம்
கொடுக்க முடியாது.
அதனால் வாக்காளர்களுக்கு
பணம் கொடுக்கும்
வல்லமை படைத்தவர்களுக்கு
மட்டுமே தேர்தலில்
போட்டியிட பெரிய கட்சிகள்
வாய்ப்பு அளிக்கின்றன.
விவசாயி சந்தையில் ஆடு,
மாடுகளை விற்றுக் கொண்டு
வந்த பணத்தை எல்லாம்
ஆவணங்கள் இல்லை என்று
சொல்லி பறிமுதல் செய்யும்
இதே தேர்தல் ஆணையம்தான்,
வாக்காளர்களுக்கு பணம்
கொடுப்பதையோ, அரசியல்
கட்சியினர் கோடிக்கணக்கில்
பணம் கடத்துவதையோ
கண்டுகொள்வதில்லை.
கேட்டால், புகார்
வரவில்லை என்பார்கள்.

 

அரசியல் கட்சிகளுடன்,
தேர்தல் ஆணையமும்
கூட்டு வைத்துக்கொண்டு
செயல்படுகின்றன.
அரசியல் கட்சிகளுக்கும்,
தேர்தல் ஆணையத்திற்கும்
தங்களுக்குள் யார் அலிபாபா?
யார் 40 திருடர்கள்? என்ற
போட்டி இருந்ததில்லை.
இவற்றில் நீதிமன்றங்களும்
அடக்கம். வாக்கு
எண்ணிக்கையில் சந்தேகம்
இருப்பதாக முன்னாள்
எம்எல்ஏ அப்பாவு வழக்கு
தொடர்ந்தால், அடுத்த
தேர்தல் வரும் வரையிலும்
வழக்கு விசாரணையை
இழுத்தடித்து தீர்ப்பு
வழங்குவது எப்படி
சமநிலையான நீதிபரிபாலனம்
ஆக இருக்க முடியும்?

 

அதனால்தான் இங்கே
இருப்பது உண்மையான
தேர்தல் ஜனநாயகமும் இல்லை;
உண்மையான மக்களாட்சியும்
இல்லை என்கிறோம்.
இந்தியா மிகப்பெரிய
ஜனநாயக நாடு என்பதே
கூட மூலாம் பூசப்பட்ட
பதம்தான்.

 

ஒருவர் அதிகபட்சம்
2 முறைக்கு மேல்
தேர்தலில் போட்டியிட
வாய்ப்பு அளிக்கப்படக்கூடாது.
இந்த விதி, அவர்களின்
ஒட்டுமொத்த குடும்பத்திற்கும்
பொருந்தும் என ஏன் தேர்தல்
ஆணையம் சட்டம் கொண்டு
வரக்கூடாது? 94 வயது வரை
ஒருவர் எம்எல்ஏ ஆக இருந்து
என்னத்த சாதித்து
விடப் போகிறார்?

 

ஒரு தொகுதியில்
அல்லது வாக்குச்சாவடியில்
மூன்றில் ஒரு பங்கு
நோட்டாவில் வாக்குகள்
பதிவானால், அங்கே
மறு தேர்தல் நடத்தப்பட
வேண்டும் என்று
சீர்திருத்தம் செய்யலாம்.

 

பொது நிதியத்தை
உருவாக்கி,
வேட்பாளர்களுக்கான
செலவினங்களை
தேர்தல் ஆணையமே
செய்வதன் மூலம்,
வாக்கிற்கு பணம் பட்டுவாடா
செய்யப்படுவதை பெருமளவு
கட்டுப்படுத்த முடியும்.

 

மக்கள் நினைத்தால்,
உண்மையான மக்களாட்சி
நிர்வாகத்தை ஒவ்வொரு
கிராமம்தோறும்
கட்டியமைக்க முடியும்.
அதற்கு இப்போதுள்ள
தேர்தலை, நாம் எல்லோரும்
ஒன்று சேர்ந்து புறக்கணிக்க
வேண்டும். ஐயோ…
வாக்களிக்காமல் எப்படி
இருப்பது? என்று புலம்பும்
அளவுக்கு, தேர்தல்
ஜனநாயகம் ஒன்றும்
அத்தனை புனிதமானது
அல்ல. சுரண்டல்பேர்வழிகளை
தேர்ந்தெடுப்பதில் என்ன
புனிதத்தன்மை இருக்கப்
போகிறது?

 

அல்லது, இன்னொரு வழிமுறையும் இருக்கிறது.

 

ஒருமித்த சிந்தனைதான்
எல்லா இடத்திலும்
புதிய மாற்றங்களை
கொண்டு வந்திருக்கிறது.
மாற்றத்தை விரும்புகிறவர்கள்
புதிய கட்சிகளுக்கு
வாக்களிக்கலாம். அல்லது,
சுயேச்சைகளுக்கு கூட
வாக்கை பதிவு செய்யுங்கள்.
நீங்களும் ஊழல் கட்சிகளுடன்
ஒன்றாக சகதியில் படுத்துப்
புரளக்கூடாது. குறைந்தபட்சம்
உங்களையாவது தூய்மையாக
வைத்துக் கொள்ளுங்கள்.
மாற்றம், நம்மிடம்
இருந்து தொடங்கட்டும்.

 

– பேனாக்காரன்