திமுக பேச்சாளரும்,
பட்டிமன்ற நடுவருமான
திண்டுக்கல் லியோனி,
“ஒரு காலத்தில் பெண்களின்
இடுப்பு எட்டு போல் இருந்தது;
இப்போது பேரல் போல்
ஆகிவிட்டது,” என்று பேசியது
அரசியல் அரங்கில் சர்ச்சையை
கிளப்பியிருக்கிறது.
கோவை தொண்டாமுத்தூர்
சட்டப்பேரவை தொகுதியில்
திமுக சார்பில் கார்த்திகேய
சிவசேனாபதி போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து திமுக
பேச்சாளர் திண்டுக்கல் லியோனி,
மார்ச் 23ம் தேதி, குனியமுத்தூர்
பகுதியில் பரப்புரையில்
ஈடுபட்டார்.
பரப்புரையின்போது அவர்,
”வெளிநாட்டு மாடுகளின்
பாலைக் குடித்து குடித்து
நம் ஊர் பெண்களும், குழந்தைகளும்
பலூன் போல ஊதிவிட்டனர்.
ஒரு காலத்தில், பெண்களின்
இடுப்பு எட்டு போல் இருந்தது.
குழந்தையைத் தூக்கி இடுப்பில்
வைத்தால் கச்சிதமாக
அமர்ந்து கொள்ளும்.
ஆனால், இப்போது
பெண்களின் இடுப்பு,
பேரல் போல ஆகிவிட்டது.
குழந்தைகளை இடுப்பில்
உட்கார வைத்தால் அப்படியே
வழுக்கி ஓடுகின்றனர்.
நாட்டு மாட்டுப்பால்தான்,
தாய்ப்பாலுக்கு இணையானது.
சுத்தமானது,” என தனக்கே
உரிய பாணியில்
நகைச்சுவையாக
குறிப்பிட்டார்.
திமுக வேட்பாளர்
கார்த்திகேய சிவசேனாபதி
நாட்டு மாடுகளை பாதுகாக்கும்
அமைப்பை நடத்தி வருகிறார்.
அதனால் லியோனி, நாட்டு
மாடுகளின் பெருமையைக் குறித்து
பேசுவதற்காக, வெளிநாட்டு
கலப்பின மாடுகளின் பாலைப்
பருகுவதால் ஏற்படும்
உடல்நலக்கேடு குறித்து
விளக்குவதற்காக அவர்
பெண்களின் இடுப்பு பற்றிய
உதாரணத்தைக் கூறினார்.
அவருடைய இந்தப் பேச்சுதான்
இப்போது சமூக ஊடகங்களில்
வேகமாக பரவி வருகிறது.
பெண்களின் இடுப்பு குறித்த
இத்தகைய பேச்சை அவர்
பலமுறை மேடைகளில்
பேசியிருக்கிறார். மட்டுமல்ல;
உருவ கேலி என்பதை அவர்
இதற்கு முன்பும் பல இடங்களில்
பேசி வந்திருக்கிறார்.
அப்போதெல்லாம் அவற்றை
வெறும் பகடியாகவே
சிரித்துவிட்டு கடந்து
சென்றவர்கள், தற்போது
தேர்தல் காலத்தில்
பெண்ணியத்திற்கு எதிரான
கருத்தாக முன்வைத்து,
ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட
சமூக ஊடகங்களில் லியோனி
மற்றும் திமுகவுக்கு எதிரான
கண்டனங்களை பதிவு
செய்து வருகின்றனர்.
பாஜக கலை, இலக்கியப்பிரிவு
தலைவர் நடிகை காயத்ரி ரகுராம்,
”எந்த மாட்டின் பாலை குடிக்க
வேண்டும் என்று சொல்வதற்கு
அவர் யார்? கர்ப்பமடைந்த பிறகு
ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும்
ஹார்மோன் மாற்றங்கள் பற்றி
லியோனிக்கு என்ன தெரியும்?
திமுக மகளிர் அணி தலைவர்
கனிமொழி, லியோனியின்
ஆணாதிக்க பேச்சை எப்படி
சகித்துக் கொள்கிறார்?,” என்று
கண்டனம் தெரிவித்துள்ளார்.
லியோனியின் பேச்சை கண்டித்து, ட்விட்டர் தளத்தில் #ஆபாசதிமுக என்று ஹேஷ்டேக் உருவாக்கி இருந்தனர். திமுக மற்றும் சில கட்சிகளை விமர்சித்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவாகி இருந்தது.
பாலியல் புகார்களில் சிக்கிய திமுகவினர் பற்றிய பழைய செய்திகளை பலரும் பதிவிட்டிருந்தனர். சட்டப்பேரவையில், மறைந்த அதிமுக தலைவர் ஜெயலலிதா மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தையும் சிலர் ட்விட்டரில் சுட்டிக்காட்டி இருந்தனர். மறைந்த திமுக பேச்சாளர் வெற்றிகொண்டானின் ‘ஏ’ ரகமான பழைய காணொலி பதிவுகளையும் பதிவிட்டிருந்தனர்.
உருவ கேலியை
ரசித்துவிட்டு கடந்து
செல்லலாம் என்ற மனோபாவம்
மக்களின் பொதுப்புத்தியில்
உறைந்து கிடக்கிறது.
அதனால்தான் பொதுவெளியிலும்
துணிந்து அத்தகைய கருத்துகளை
துணிந்து பேசுகிறோம்.
பிரபலம் என்ற நிலைக்கு
வந்த பின்னும், நகைச்சுவை
எனக்கருதும் மூன்றாம்தர
பேச்சுகளை குறைத்துக்
கொள்வதும் யாவருக்கும்
நலம். மக்களும்
பொதுவெளிகளில்
உருவ கேலி பகடிகளை
ஊக்குவிக்காமல்
இருக்க வேண்டும்.
– பேனாக்காரன்