Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

இயக்குநர்கள் சங்கர், முருகதாஸ், மணிரத்னம் போனற பிரபல இயக்குநர்கள் தங்கள் படத்தின் கதை திரைக்கு வரும் வரை எள்ளளவு கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதேபோல், படமாக்கும் காட்சிகள்கூட வெளியாகக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் உள்பட ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்தவும் தடை விதிப்பார்கள்.

இப்போது ஏறக்குறைய எல்லா இயக்குநர்களுமே இதேபோன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த விஜயின் மெர்சல் படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜயின் 61வது படமாக பிரம்மாண்ட பொருட்செயலரில் தயாராகி இருக்கிறது மெர்சல். முதல்முறையாக இந்தப் படத்தில் விஜய் மூன்று பாத்திரங்களில் நடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். வடிவேலுவும் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். விஜயை வைத்து ஏற்கனவே தெறி படம் மூலம் மாஸ் காட்டிய அட்லி, இரண்டாவது முறையாக அவருடன் இணைந்துள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீடு கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வெளியானது. பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இன்று மாலை (செப். 21) 6 மணியளவில் மெர்சல் படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான அரை மணி நேரத்திற்குள் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் யூ டியூபில் கண்டுகளித்துள்ளனர். டீசரில் விஜய் சில மேஜிக்குள் செய்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையே, விஜய் ஓய்வுக்காக வெளிநாடு சென்றிருக்கிறார்.

மெர்சல் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது. இந்நிலையில், இந்தப்படத்தின் கதை இதுதான் என்று சமூகவலைத்தளங்களில் ஒரு கதை உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

உலா வரும் கதை இதுதான்: கிராமத்து தலைவராக உள்ள விஜய்-க்கும் அவரது உயிருக்கு உயிரான மனைவி நித்யா மேனனுக்கும் இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால், குழந்தை பிறந்ததும் ஒரு குழந்தையை திருடிவிடுகிறார்கள்.

விஜய்யும் நித்யா மேனனும் ஒரு குழந்தைதான் பிறந்துள்ளது என நினைத்து, அந்த குழந்தைக்கு மாறன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வருகின்றனர்.

கிராமத்தில் நடக்கும் அக்கிரமங்களை தட்டி கேட்கும் தலைவனாக வரும் அப்பா விஜய், மனைவி நித்யா மேனன் ஆகிய இருவரையும் மாவட்ட ஆட்சியரான எஸ்.ஜே.சூர்யா போட்டுத்தள்ளி விடுகிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஊழலில் திளைக்கும் ஆட்சியராக நடித்துள்ளார்.

ஆனால், விஜய்யின் மகன் மாறன் தப்பித்துவிடுகிறார். திருடப்பட்ட குழந்தையான இன்னொரு விஜய் மெர்சல் அரசன் என்ற பெயரில் வடிவேலுவிடம் வளர்கிறார்.

மாறன் மருத்துவம், அரசியல் என இரண்டிலும் புகுந்து விளையாடி வருகிறார்.

ஒரு கட்டத்தில், வடிவேலுவிடம் வளரும் மெர்சல் அரசனுக்கு உண்மை தெரிய வருகிறது. தன் தந்தையை கொன்றவர்களை தான் கற்றுக்கொண்ட மேஜிக் வித்தையின் மூலம் கச்சிதமாக காலி செய்துவிடுகிறார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அந்த பழி அனைத்தும் அண்ணன் மருத்துவர் மாறன் மீது விழுந்துவிடுகிறது.

தன் உடன்பிறந்த அண்ணனைத்தான் நாம் பிரச்சனையில் சிக்கவைத்து விட்டோம் என தாமதமாக தான் புரிந்துகொள்கிறார் விஜய். அதன்பிறகு, அவர்கள் இருவரும் எதிரிகளை எதிரிகளை வீழ்த்தி, சவால்களை முறியடித்தார்கள் என்பதுதான் கிளைமேக்ஸ்.

இப்படி செல்கிறது மெர்சல் படத்தின் கதை. அட்லி இயக்கும் படம் என்றாலே பழைய படங்களின் சாயல்கள் அதிகமாக இருக்கும். அதை வைத்து இந்தப் படத்தின் கதையை நெட்டிஸன்களே புனைந்திருக்கிறார்களா அல்லது உண்மையிலேயே இதுதான் படத்தின் கதையா என்பதை படம் வெளியாகும்போதுதான் தெரிய வரும். எனினும், இந்தக் கதைக்கே படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

டீசர் இணைப்பு.