Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”ஊழலுக்கு எதிரான அனைவரும் என் உறவினர்களே” – கமல்ஹாசன்

ஊழலுக்கு எதிரான யாருமே எனக்கு உறவாகி விடுகிறார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், நடிகர் கமல்ஹாசனை சென்னையில் இன்று (செப்.21) நேரில் சந்தித்து பேசினார். கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்த பேச்சு உச்சத்தில் உள்ள நிலையில், அவரை டெல்லி முதல்வர் திடீரென்று சந்தித்து இருப்பது அரசியல் அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் இருவரும் சேர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கமல்ஹாசன் கூறுகையில், ”டெல்லி முதல்வர் என்னை நேரில் சந்திக்க வந்ததை பாக்கியமாக கருதுகிறேன். எங்களின் சந்திப்பு எது தொடர்பாக இருக்கும் என்பதை நீங்கள் (ஊடகங்கள்) யூகித்து இருக்கக்கூடும். ஊழலுக்கு எதிரான யாருமே எனக்கு உறவாகி விடுகிறார்கள். அந்த வகையில் இந்த உறவு தொடரும்,” என்றார். பின்னர் அவர் இதே கருத்தை, ஆங்கில ஊடகங்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்னார்.

கமலா ஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சென்னையில் இன்று நேரில் சந்தித்தார்.

இதையடுத்து அரவிந்த் கேஜரிவால் கூறுகையில், ”கமல்ஹாசனை ஒரு நடிகராகவும், தனிப்பட்ட மனிதராகவும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய ரசிகன் நான். அவருடைய நேர்மையும், துணிச்சலும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இப்போது நாடு மதவாதத்தையும், ஊழலையும் எதிர்கொள்ள வேண்டிய நேரம்.

மக்களும் அவற்றை எதிர்க்கிறார்கள். ஒத்த கருத்துடையவர்கள் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. கமலின் அரசியல் நுழைவு, இந்திய அரசியல், தமிழ்நாட்டு அரசியல் சூழல் குறித்தும் நாங்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டோம்,” என்றார்.

தன் சிந்தனைக்கு ஏற்றதாக எந்த ஒரு கட்சியும் இல்லை. தொடங்கினால் தனிக்கட்சிதான் என்று கமல்ஹாசன் ஏற்கனவே சொல்லி இருந்தார். இந்நிலையில், ஊழலை எதிர்த்து ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் கமலை சந்தித்திருப்பதால், ஆம் ஆத்மி கட்சியை தமிழகத்தில் வழிநடத்திச் செல்ல கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என்ற யூகங்களும் எழுந்துள்ளன. இணைப்பு.