Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடம் புரண்ட முக்கிய சாட்சி!; அரசுத்தரப்பு கடும் அதிருப்தி!! #Gokulraj #Day5

 

தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், ஒரே முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி ஸ்வாதி நேற்று (செப்டம்பர் 10, 2018) நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்தார். இதை சற்றும் எதிர்பாராத அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி போலீசார் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்தனர்.

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் – சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ., பட்டதாரி. திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர், தனது படிப்பை 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்திருந்தார். தீவிரமாக வேலை தேடி வந்த நிலையில், 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பினார்.

எப்போது வெளியே சென்றாலும் தாய் சித்ராவிடம் சொல்லிவிட்டுச் செல்வதோடு, அன்று மாலைக்குள் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அன்று இந்த நடைமுறைகள் எதையும் கோகுல்ராஜ் பின்பற்றவில்லை. இரவு வெ குநேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த சித்ராவும், கோகுல்ராஜின் அண்ணன் கலைசெல்வன் மற்றும் உறவினர்களும் பலருக்கும் போன் செய்து மகன் குறித்து விசாரித்தனர்.

 

மறுநாள் (24.6.2015) காலையில் கோகுல்ராஜூவுடன் கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் ராஜா என்பவரிடம் செல்போனில் விசாரித்தபோது, கோகுல்ராஜ் கடத்தப்பட்டார் என்பது உள்ளிட்ட பல திடுக்கிடும் தகவல்களைச் சொன்னார். அத்துடன், கோகுல்ராஜின் நெருங்கிய தோழியும், கல்லூரியில் உடன் படித்து வந்தவருமான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த ஸ்வாதி என்பவரின் செல்போன் எண்ணையும் கார்த்திக் ராஜா கொடுத்துள்ளார்.

 

பிறகு, ஸ்வாதியிடமும் பேசிய கோகுல்ராஜின் அண்ணன் கலைசெல்வன், கார்த்திக் ராஜா சொன்ன தகவல்களை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு கோகுல்ராஜ் கடத்தப்பட்டதாக முடிவுக்கு வந்த தாயார் சித்ரா உள்ளிட்டோர் அதுகுறித்து திருச்செங்கோடு காவல் நிலையத்தில் 24.6.2015ம் தேதி புகார் அளித்தனர்.

கோகுல்ராஜ்

அவர்கள் காவல் நிலையத்தில் இருந்தபோதுதான், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் சடலம், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாரிடம் இருந்து சித்ர £வின் செல்போனுக்கு தகவல் கிடைத்தது.

 

ஆரம்பத்தில் திருச்செங்கோடு போலீசார், இதுகுறித்து சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரணையை துவக்கினர். கோகுல்ராஜூம், ஸ்வாதியும் கல்லூரி முடித்த பின்னரும்கூட நெருங்கிப் பழகி வந்துள்ளனர். அவர்கள் 23.6.2015ம் தேதியன்று, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது.

 

அப்போது, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ் உள்ளிட்ட 7 பேர், மலை அடிவாரத்தில் பேசிக்கொண்டு இருந்த இருவரையும் மிரட்டியதும், பின்னர் கோகுல்ராஜை மட்டும் ஒரு வெள்ளை நிற டாடா சஃபாரி காரில் கடத்திச்சென்றதும் தெரிய வந்தது.

ஸ்வாதி

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஸ்வாதியும் காதலிப்பதாக கருதிய யுவராஜ் மற்றும் கூட்டாளிகள், கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.

 

அடுமட்டுமின்றி, அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் யுவராஜ் உள்ளிட்ட கூட்டாளிகள் கோகுல்ராஜை கடத்திச்செல்வதும், ஸ்வாதியை மிரட்டிய காட்சிகளும் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ ஃபுட்ஜேஜூகளை இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக போலீசார் சேர்த்தனர்.

யுவராஜ்

இதன்பிறகே, யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர்.

 

இதற்கிடையே, இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்குப்பதிவு, விசாரணை என மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், கடந்த 30.8.2018ம் தேதி முதல் நடந்து வருகிறது. நீதிபதி கே.ஹெச். இளவழகன் முன்னிலையில் விசாரணை நடக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் கொல்லப்பட்ட ஜோதிமணி, தலைமறைவாகிவிட்ட அமுதரசு தவிர மற்ற 15 பேரும் ஆஜராகி வருகின்றனர்.

 

இந்த வழக்கில் மொத்தம் 110 சாட்சிகள் அரசுத்தரப்பில் சேர்க்கப்பட்டு உள்ளன. முதல் சாட்சியான கோகுல்ராஜின் தாயார் சித்ரா, இரண்டாம் சாட்சியான ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கைலாஷ்சந்த் மீனா, மூன்றாவது சாட்சி கோகுல்ராஜின் அண்ணன் கலைசெல்வன் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை, குறுக்கு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது.

 

இந்நிலையில், கோகுல்ராஜை கடைசியாக சந்தித்தவர்… நெருங்கிய தோழி… யுவராஜ் உள்ளிட்ட கும்பல் கோகுல்ராஜை கடத்திச்சென்றதை நேரில் பார்த்தவராக கருதப்படும் ஒரே முக்கிய சாட்சியான ஸ்வாதி நேற்று (10.9.2018) நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

 

பாதுகாப்பு கருதி, அவரிடம் மூடப்பட்ட நீதிமன்றத்தில் (இன் கேமரா) விசாரணை நடத்தப்பட்டது. கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள், சிபிசிஐடி போலீசார் ஆகியோரைத் தவிர பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பத்திரிகையாளர்களும் விசாரணையை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்

நீதிமன்றத்திற்கு, ஸ்வாதி, கருப்பு மற்றும் ஆரஞ்ச் நிற பேண்ட், ஆரஞ்ச் நிற டாப்ஸ் மற்றும் அதே நிறத்தில் துப்பட்டாவும் அணிந்து வந்திருந்தார். பத்திரிகையாளர்கள் படம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக முகத்தை துப்பட்டாவில் மூடியபடி நீதிமன்றத்திற்குள் பெற்றோர், உறவினர்கள் சகிதமாக வந்தார்.

 

யுவராஜ் தரப்பு ஆதரவாளர்கள் ஒருபுறம், ஸ்வாதி தரப்பு ஆள்கள் என நூறுக்கும் மேற்பட்டோர் நீதிமன்ற வளாகத்தில் சுற்றிக்கொண்டிருந்தனர். இதையொட்டி, வழக்கத்தைவிட பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

 

பகல் 12.30 மணியளவில் ஸ்வாதியிடம் விசாரணை தொடங்கியது. வழக்கு விசாரணைகளில் சிசிடிவி கேமரா பதிவு என்பது நேரில் பார்த்த சாட்சிக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. அதன்படி, சம்பவத்தன்று அர்த்தாரீஸ்வரர் கோயில் மலையடிவாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை, ஒரு புரஜக்டர் மூலம் சுவரில் ஓடவிட்டுக் காட்டப்பட்டது. சாட்சி கூண்டுக்கு அருகில் உள்ள சுவரில் இந்தக் காட்சிகள் ஓடவிடப்பட்டன.

 

 

கேமரா-1, கேமரா-5 ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் மூன்று நிமிட வீடியோ காட்சிகள் காட்டப்பட்டன. அதில் ஸ்வாதி, கோகுல்ராஜ் ஆகியோரின் முகங்களும், அவர்களிடம் யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் பேச்சுக்கொடுப்பதும், கோகுல்ராஜை அழைத்துச் செல்வதுமான காட்சிகள் பதிவாகி இருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த ஸ்வாதி, அதில் இருப்பது தன்னுடைய உருவம் அல்ல என்றும், அங்கு வரும் மற்றவர்கள் யாரென்று தெரியவில்லை என்றும் சாட்சியம் அளித்தார்.

 

திருச்செங்கோடு மற்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணைகளின்போது வீடியோவில் பதிவாகி இருப்பது தானும், கோகுல்ராஜூம்தான் என்றதுடன், யுவராஜ் உள்ளிட்ட கும்பலையும் அடையாளம் காட்டி வாக்குமூலம் அளித்திருந்தார். இதை போலீஸ் தரப்பு, ‘164 ரிப்போர்ட்’ எனப்படும் சாட்சிகளின் வாக்குமூல அறிக்கையிலும் பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில், வீடியோவில் பதிவாகி இருப்பது தன்னுடைய உருவமே அல்ல என்று ஸ்வாதி சாட்சியம் அளித்தார்.

 

இது ஒருபுறம் இருக்க, அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜை யார் என்று தெரியுமா? என்றுகேட்டதற்கு, ‘அவர் நான் படித்த கல்லூரியில் படித்திருக்கலாம். ஆனால் அவர் யாரென்று எனக்குத் தெரியாது,’ என்று ஸ்வாதி சாட்சியம் அளித்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரசுத்தரப்பு வழக்கறிஞர்களும், சிபிசிஐடி போலீசாரும் ரொம்பவே ஏமாற்றம் அடைந்தனர்.

 

இந்த விசாரணை, மதியம் 1.15 மணிக்கு முடிவுற்றது. இதையடுத்து, உணவு இடைவேளை விடப்பட்டது. முன்னதாக, கோகுல்ராஜை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வெள்ளை நிற டாடா சஃபாரி கார் கொண்டு வரப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரை பார்த்து அடையாளம் சொல்லும்படி கேட்டதற்கு, ஸ்வாதி அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்திருந்தார்.

 

உணவு இடைவேளை முடிந்து, மதியம் 2.50 மணிக்கு மீண்டும் நீதிமன்றம் கூடியது. ஸ்வாதி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது ‘இன் கேமரா’ நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டு, திறந்தவெளியில் விசாரணை நடந்தது. பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

 

பத்திரிகையாளர்களிடம் வேண்டுகோள்:

 

அப்போது சாட்சி கூண்டில் இருந்த ஸ்வாதி, பத்திரிகையாளர்கள் யாரும் தன்னை புகைப்படம், வீடியோ எடுக்கக்கூடாது என்று நீதிபதியிடம் முறையிட்டார். அதற்கு நீதிபதி, இங்கே பத்திரிகையாளர்கள் இருந்தால் நீங்களே நேரில் சொல்லி விடுங்கள் என்றார். இதையடுத்து பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்திற்கு உள்ளே அழைக்கப்பட்டனர். சாட்சி கூண்டில் இருந்து இறங்கி வந்த ஸ்வாதி, தன்னை யாரும் புகைப்படம், வீடியோ எடுக்க வேண்டாம் என்று நேரில் வேண்டுகோள் வைத்தார்.

கேள்விகளும் பதில்களும்…

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி முன்னிலையில், அவருக்கு உதவியாக அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் சேலம் நாராயணன் ஸ்வாதியிடம் பல கேள்விகளைக் கேட்டார். அதன் சுருக்கமான வடிவம்:

 

நாராயணன்: கோகுல்ராஜூடன் நீங்கள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றீர்களா?

 

ஸ்வாதி: நான் கோயிலுக்குப் போகவே இல்லை

 

நாராயணன்: 23.6.2015ம் தேதியன்று கோகுல்ராஜ் உங்களுக்கு போன் செய்து, உங்களிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டாரா?

 

ஸ்வாதி: இல்லை

 

நாராயணன்: சம்பவ தினத்திற்கு முதல் நாள் அதாவது, 22.6.2015ம் தேதி, கோகுல்ராஜ் உங்களுக்கு போன் செய்து ஆயிரம் ரூபாய் பணம் கேட்டிருந்தார். அவர் போன் நம்பர் இவைதானா? (அப்போது அவர் இரண்டு செல்போன் எண்களைச் சொன்னார்)

 

ஸ்வாதி: தெரியாது

 

நாராயணன்: கோகுல்ராஜூம், நீங்களும் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிட்டீர்கள்தானே?

 

ஸ்வாதி: நான் கோயிலுக்கு போகவில்லை

 

நாராயணன்: சாமி கும்பிட்டுவிட்டு இருவரும் அங்குள்ள திண்ணையில் அமர்ந்து பேசினீர்களா?

 

ஸ்வாதி: இல்லை

 

நாராயணன்: நீங்களும் கோகுல்ராஜூம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருக்கும்போது யுவராஜூம் மற்றும் சிலரும் உங்களிடம் வந்து பேசினார்களா?

 

ஸ்வாதி: நான் கோயிலுக்கு போகவில்லை

 

நாராயணன்: கோயிலில் நீங்கள் இருவரும் இருக்கும்போது யுவராஜ் உள்பட ஏழு பேர் இருந்ததாகவும், அவர்கள் உங்கள் இருவரின் செல்போன்களையும் பறித்துக்கொண்டதும் உண்மைதானா?

 

ஸ்வாதி: இல்லை. நான் கோயிலுக்கு போகவில்லை

 

நாராயணன்: அந்த கும்பலில் வெள்ளை சட்டை அணிந்து கொண்டு ஒல்லியாக சிவப்பாக ஒருவர் இருந்தார். போலீசார் விசாரணை மூலம் அவர் பெயர் ரஞ்சித் எனத் தெரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளீர்கள்?

 

ஸ்வாதி: தெரியாது

நாராயணன்

நாராயணன்: வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்து கொண்டு சிவப்பாக ஒருவர் இருந்தார். அவர் பெயர் யுவராஜ் என்பது பின்னிட்டு தெரிந்து கொண்டது உண்மையா?

 

ஸ்வாதி: தெரியாது

 

நாராயணன்: நீல நிற சட்டையில் மாநிறமாக ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஸ்ரீதர் என்பது பின்னிட்டு தெரிந்து கொண்டது உண்மைதானா?

 

ஸ்வாதி: தெரியாது

 

நாராயணன்: குண்டாக, கருப்பாக, விபூதி பட்டை அணிந்து கொண்டு, முகத்தில் அம்மை தழும்பு புள்ளிகளுடன் தாடி மீசையுடன் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சிவக்குமார் என்பது போலீசார் விசாரணையில் தெரிந்து கொண்டேன் என்பது உண்மையா?

 

ஸ்வாதி: தெரியாது

 

நாராயணன்: டி-ஷர்ட் அணிந்து கொண்டு, சிவப்பாக, ஒல்லியாக ஒருவர் இருந்தார். அவர் பெயர் செல்வராஜ் என்பதை போலீஸ் விசாரணையில் தெரிந்து கொண்டேன் என்பது சரிதானா?

 

ஸ்வாதி: தெரியாது

 

நாராயணன்: கோயிலில் நீங்கள் இருந்தபோது யுவராஜூம் அவருடன் வந்தவர்களும் உங்களிடம் ஒரு துண்டு சீட்டை கொடுத்து உங்கள் வீட்டு முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை எழுதிக்கொடுக்கும்படி கூறினார்களா?

 

ஸ்வாதி: இல்லை

 

நாராயணன்: அந்த துண்டு சீட்டில் உள்ளது உங்கள் கையெழுத்துதானா? (அப்போது அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி ஒரு துண்டு சீட்டை ஸ்வாதியிடம் காட்டினார்)

 

ஸ்வாதி: (அந்த துண்டு சீட்டை பார்த்தபடி) அதில் உள்ள கையெழுத்து என்னுடையதுதான். ஆனால் கோயிலில் வைத்து யாருக்கும் எழுதித்தரவில்லை.

 

நாராயணன்: கோயிலில் இருந்தபோது உங்களிடமும் கோகுல்ராஜிடமும் யுவராஜ் தரப்பினர் உங்கள் ஜாதி என்ன? அப்பா அம்மா யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற விவரங்களைக் கேட்டாரா?

 

ஸ்வாதி: நான் கோயிலுக்குச் செல்லவில்லை. (இப்படி பதில் சொல்லிவிட்டு, இல்லை என்பதுபோல் இருபுறமும் தலையை ஆட்டினார்)

 

நாராயணன்: யுவராஜ் உங்களிடம் நீங்களும் கோகுல்ராஜூம் காதலிக்கிறீர்களா? என்று கேட்டாரா?

 

ஸ்வாதி: தெரியாது

 

நாராயணன்: அப்போது நீங்கள், ‘நாங்கள் காதலிக்கவில்லை. இருவரும் கல்லூரி நண்பர்கள் என்று சொன்னீர்களா?’

 

ஸ்வாதி: நான் கோயிலுக்கு போகவில்லை

 

நாராயணன்: கோகுல்ராஜூம் அதே மாதிரிதான் சொன்னாரா?

 

ஸ்வாதி: தெரியாது

 

நாராயணன்: கோகுல்ராஜை, யுவராஜ் தரப்பினர் மிரட்டினார்களா?

 

ஸ்வாதி: எனக்குத் தெரியாது

கருணாநிதி

நாராயணன்: யுவராஜூடன் வந்த ஜோதிமணி, அவருடைய கணவர் சந்திரசேகர் ஆகிய இருவரும் உங்களை மட்டும் கோயிலில் இருந்து தனியாக அழைத்துச்சென்றார்களா?

 

ஸ்வாதி: கோயிலுக்கு போகவில்லை

 

நாராயணன்: யுவராஜிடம் உங்கள் செல்போனை கேட்டீர்கள்

 

ஸ்வாதி: எதுவும் இல்லை

 

நாராயணன்: ஜோதிமணியும், சந்திரசேகரும்தான் என்னை அழைத்துச் சென்றனர் என்று போலீசில் வாக்குமூலம் கூறியுள்ளீர்கள்

 

ஸ்வாதி: நான் போகவில்லை

 

நாராயணன்: ஜோதிமணியும், சந்திரசேகரும் உங்களைப் பார்த்து, ‘என்ன காதல் தகராறா?’ என்று கேட்டார்களா?

 

ஸ்வாதி: தெரியாது

 

நாராயணன்: பஸ்சில் அழைத்துச்செல்லும்போது எனக்கும் சேர்த்து சந்திரசேகர் டிக்கெட் எடுத்தார் என்று சொன்னது உண்மையா?

 

ஸ்வாதி: எனக்குத் தெரியாது

 

நாராயணன்: கோகுல்ராஜை வெள்ளை நிற டாடா சஃபாரி காரில்தான் கடத்திச் சென்றார்களா?

 

ஸ்வாதி: எனக்குத் தெரியாது

 

நாராயணன்: ”நான் யுனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுக்காக படிக்கச் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பியபோது, யுவராஜ் அனுப்பியதாக ஒருவர் வந்து என்னை அணுகினார். அந்த நபர், உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் லஞ்சமாக தரத் தயாராக இருக்கிறோம். நீங்களும் யுவராஜூம் ஒரே ஜாதிக்காரர்கள். அதனால் அவரை அடையாளம் காட்டிக்கொடுக்கக் கூடாது என்றார்.

 

அதற்கு நான், கோகுல்ராஜ் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அதனால் கண்டிப்பாக யுவராஜை அடையாளம் காட்டுவேன் என்று கூறினேன். அதற்கு அந்த நபர், அப்படி என்றால் உன்னையும், உன் தங்கை, உன் தாய், தந்தையையும் கோகுல்ராஜை அனுப்பிய இடத்திற்கே அனுப்பி வைத்து விடுவோம் என்று மிரட்டினார்,” என்று சொல்லி இருக்கிறீர்கள்.

 

ஸ்வாதி: தெரியாது

 

நாராயணன்: சேலம் மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பின்போது ஒருவரை மட்டுமே அடையாளம் காட்டினீர்கள். பின்னிட்டு, போலீசார் விசாரணையில் அந்த நபர் அருண் என தெரிந்து கொண்டேன் என்பது சரிதானா?

 

ஸ்வாதி: தெரியாது

 

கருணாநிதி: காவல்துறையிலும், நாமக்கல் ஜே.எம்.&2 நீதிமன்றத்திலும் அளித்த வாக்குமூலத்திற்கு மாறாக இப்போது பேசுகிறீர்கள்…

 

ஸ்வாதி: என் அப்பா, அம்மாவை போலீசார் பிடித்து வைத்திருந்தனர். நீதிமன்றத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதை போலீசார் ஒரு பேப்பரில் எழுதிக்கொடுத்தனர். அதைப் படித்துப்பார்த்து, போலீசார் மிரட்டலுக்கு பயந்து கொண்டு அதன்படி, அப்போது நீதிமன்றத்தில் சொன்னேன்.

 

கருணாநிதி: அப்பா, அம்மாவை போலீசார் காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்ததையும், போலீசார் மிரட்டினர் என்பதையும் ஏன் அப்போது ஜே.எம்.-2 நீதிமன்றத்தில் சொல்லவில்லை?

 

ஸ்வாதி: ஆமாம், நான் சொல்லவில்லை

 

கருணாநிதி: உங்களுக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படையாக, எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் சொல்வதற்கான இடம் நீதிமன்றம் என்பது தெரியுமா?

 

ஸ்வாதி: ஆமாம்

 

கருணாநிதி: இறந்துபோன கோகுல்ராஜ் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், நீங்களும், யுவராஜூம் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலும், யுவராஜ் தரப்பினர் உங்களை கேட்டுக்கொண்டதாலும், எதிரிகளுக்கு ஆதரவாக பொய்யாக சாட்சியம் அளித்திருக்கிறீர்கள்…

 

ஸ்வாதி: இல்லை. எனக்குத் தெரிந்த உண்மைகளைத்தான் சொல்லி இருக்கிறேன்

 

இவ்வாறு அரசுத்தரப்பு வழக்கறிஞர் தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டு, ஸ்வாதியிடம் இருந்து பதில்கள் பெறப்பட்டன. கேள்விகள் அனைத்தும் கேட்கப்பட்டனவா என்பதை சிபிசிஐடி தரப்பில் இன்ஸ்பெக்டர் பிருந்தா, கவனமாக குறிப்புகள் எடுத்துக்கொண்டார்.

 

பின்னர், சடலம் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கோகுல்ராஜின் ஓட்டுநர் உரிமம், கல்லூரி அடையாள அட்டை, அவர் பயன்படுத்தி வந்த செல்போன், அவர் கடைசியாக அணிந்திருந்த உடைகள் ஆகிய ஆதாரங்களையும் ஸ்வாதியிடம் காட்டி அடையாளம் காட்டுமாறு கூறினர். அந்தப் பொருள்¢கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று ஸ்வாதி கூறினார்.

 

அதேபோல், கோயிலில் இருக்கும்போது உங்கள் செல்போனை வாங்கித்தான் கோகுல்ராஜ் தனது தாயாரிடம் பேசினார் என்ற கேள்விக்கும், ஸ்வாதி தெரியாது என பதில் அளித்தார்.

 

ஏறக்குறையாக 99 சதவீத கேள்விகளுக்கு, முக்கிய சாட்சியான ஸ்வாதி, ‘நான் கோயிலுக்குப் போகவில்லை’, ‘தெரியாது’, ‘இல்லை’ என்றே பதில் சொன்னார். சாட்சி விசாரணை நேற்று மாலை 5 மணிக்கு முடிந்தது.

 

வழக்கு ஒத்திவைப்பு!:

 

இதையடுத்து இந்த வழக்கின் சாட்சி விசாரணை செப்டம்பர் 18, 2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ், திருச்சி மத்திய சிறைக்கும், மற்றவர்கள் சேலம் மத்திய சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

 

புகைப்படம் என்னுடையதுதான்…

 

மலைக்கோயிலில் யுவராஜ், ஸ்வாதியிடம் முகவரி எழுதி வாங்கியதாக சொல்லப்படும் ஒரு துண்டு காகிதத்தைக் காட்டி கேட்டபோது, அந்தக் கையெழுத்து தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டிருந்தார். அதேபோல், ஐஏஎஸ் அகாடமியில் படித்துக் கொண்டிருந்தபோது பயன்படுத்திய நோட்புக் ஒன்றில் உள்ள கையெழுத்து பற்றி கேட்டபோதும் அதுவும் தன் கையெழுத்துதான் என்று ஒப்புக்கொண்டார். ஆனால், காவல்துறையிடம் இருந்து அந்த நோட்புக்கை பெற்றுக்கொண்டேன் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு போடப்பட்ட கையெழுத்தை மட்டும் தன்னுடையது இல்லை என்று பதில் சற்று முரணாகப் பேசினார்.

 

காவல்துறையினரிடம் நீங்கள் ஏதாவது புகைப்படம் கொடுத்தீர்களா? என்ற கேள்விக்கு, தான் யாரிடமும் புகைப்படங்கள் கொடுக்கவில்லை. ஆனால் விசாரணைக்கு சென்றபோது தன்னை போலீசார் புகைப்படங்கள் எடுத்தனர் என்றார். காவல்துறையினரால் எடுக்கப்பட்ட ஸ்வாதியின் புகைப்படங்களை அவரிடம் காட்டி, படத்தில் இருப்பது நீங்கள்தானா என்று கேட்டனர். அதற்கு அவர், ஆமாம் என்று பதில் அளித்தார். அதேநேரம், சிசிடிவி கேமரா வீடியோவில் இருப்பது தன் உருவம் அல்ல என்று பதில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நீதிபதி கண்டிப்பு!
நீதிபதி கே.ஹெச். இளவழகன்

நீதிமன்றத்தில் ஸ்வாதியிடம் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, அவருக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் நாராயணன் ஆகியோர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, எதிரிகள் தரப்பு வழக்கறிஞர்கள் சிலரும், கோகுல்ராஜ் தரப்பில் சில வழக்கறிஞர்களும் சாட்சி விசாரணையின்போது சூழ்ந்து கொண்டு நின்றனர்.

 

அதைப்பார்த்த நீதிபதி கே.ஹெச். இளவழகன், ‘வழக்கு விசாரணையை நான் அப்சர்வேஷன் செய்ய வேண்டும். இப்படி எல்லோரும் இங்கே நின்று கொண்டிருந்தால் எப்படி? வழக்கில் சம்பந்தமில்லாதவர்கள் போய் அமருங்கள் என்று காட்டமாக கூறினார்.

 

பிறகு மீண்டும், கோகுல்ராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் அங்கே சூழ்ந்து நின்றதால் டென்ஷன் ஆன நீதிபதி, சம்பந்தமில்லாத வழக்கறிஞர்கள் போய் உட்காருகிறீர்களா இல்லையா? இங்கே முக்கியமான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இருக்கின்றன. ஏதாவது பிரச்னை ஆகிவிட்டால் சிவியர் ஆக்ஷன் எடுக்க வேண்டியது வரும். இல்லாவிட்டால் அதையும் நான் இங்கே பதிவு செய்ய நேரிடும் என்று கூறியபடி, தன் உதவியாளரிடம் சில வார்த்தைகளைக் கூறி பதிவு செய்யும்படி கூறினார். பின்னர் அதை அழித்து விட்டார். இதனால் நீதிமன்ற அவையில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

 

மீண்டும் டென்ஷன்…

 

மதிய வேளையில் திறந்தவெளி நீதிமன்றத்தில்தான் ஸ்வாதியிடம் சாட்சி விசாரணை நடந்தது. அப்போது சாட்சி கூண்டுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த உள்ளூர் போலீஸ்காரர் ஒருவர் தன் சட்டைப் பாக்கெட்டில் மேலே தெரியும்படி, செல்போனை வைத்திருந்தார். அதை கவனித்துவிட்ட நீதிபதி கே.ஹெச். இளவழகன், ‘நீங்கள் யார் எனக்கேட்டபடி, ஏதாவது வீடியோ எடுத்தீர்களா? என்று கேட்டு, அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன், அதில் ஏதாவது வீடியோ எடுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்யும்படி தன்னுடைய தனி பாதுகாப்பு காவலருக்கு உத்தரவிட்டார். அந்த செல்போனில் வீடியோ எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகு, செல்போன் மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

– பேனாக்காரன்

 

பதிவு: அதிகாலை 4.10 மணி / 11.09.2018