Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு!

எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், சேலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்து, முதல்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.

 

பாரத்மாலா பரியோஜனா:

 

சேலம் முதல் சென்னை வரை ‘பாரத்மாலா பரியோஜனா’ என்ற பெயரில், எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக அமைகிறது.

இதற்காக மேற்சொன்ன மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக கடந்த மே மாதம் நிலம் அளவீடு செய்யச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கடும் தெரிவித்தனர்.

 

எதிர்ப்புக்கு காரணங்கள்:

 

விவசாயிகளின் எதிர்ப்புக்கு சில காரணங்கள் உள்ளன. முதலாவது, எட்டுவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் பெரும்பகுதி இருபோகம் விளையக்கூடிய நிலம் ஆகும். இரண்டாவது, நிலம், அதில் உள்ள பலன் கொடுக்கும் மரங்கள், மீள் குடியேற்றம் ஆகியவற்றுக்காக அரசு கொடுப்பதாகச் சொல்லும் இழப்பீடு மிகச்சொற்பமாக இருப்பது; மூன்றாவது, இந்த சாலை முற்றிலும் வணிக பயன்பாட்டுக்கானது. இத்தகைய காரணங்களால் விவசாயிகள் தொடக்கத்தில் இருந்த நில எடுப்புக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

 

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு துணை:

 

கஞ்சமலை (சேலம்), வேடியப்பன் மலை, கவுந்திமலை (திருவண்ணாமலை) ஆகிய மலைகளில் பொதிந்துள்ள இரும்பு உள்ளிட்ட தாது வளங்களை அள்ளிச்செல்ல தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு துணை போவதாகவும் ஓர் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதுவும், விவசாயிகளின் எதிர்ப்புக்கு இன்னொரு காரணம்.

 

கருப்புக்கொடி:

சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்களில் தனியார் பட்டாதாரர்களுக்குச் சொந்தமான 186 ஹெக்டேர் உள்பட மொத்தம் 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலம் எடுப்பு நடவடிக்கைகளில் இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. என்றாலும் விவசாயிகளின் சூடு கொஞ்சமும் தணியவில்லை.

 

இந்த நிலையில்தான், கடந்த 15.12.2018ம் தேதியன்று ஓமலூரில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 89 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்,’ என்று கூறினார். அதற்கு கண்டனம் தெரிவித்து நிலவாரப்பட்டி, பூலாவரி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 

விவசாயிகள் பேரணி:

அடுத்தக்கட்டமாக, இத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த விவசாயிகளும் எதிர்ப்பாகத்தான் உள்ளோம் என்று நிறுவுவதற்கான வேலைகளில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாக நிலவாரப்பட்டி, பூலாவரி, வீரபாண்டி, நாழிக்கல்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, குப்பனூர், பருத்திக்காடு, ஆச்சாங்குட்டப்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர், சித்தனேரி, வெள்ளியம்பாளையம் உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதன்கிழமை (19.12.2018) காலை 10 மணியளவில், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடினர்.

 

விவசாயிகள் அங்கே ஒன்று கூடக்கூடாது என்றும், பேரணியாகச் செல்ல அனுமதியில்லை என்றும் காவல்துறையினர் அவர்களை எச்சரித்தனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் அங்கேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக தரையில் அமர்ந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பொறுமையி-ழந்த காவல்துறையினர் அவர்களை பேரணியாகச் செல்ல அனுமதித்தனர்.

 

முதல்வருக்கு எதிராக முழக்கம்:

 

விவசாயிகள் பேரணியாக பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளுவர் சிலை, ராஜாஜி சிலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பல விவசாயிகள் கரும்பு மற்றும் கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். பேரணியில் முதல்வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

 

மாவட்ட ஆட்சியரக வளாகத்திற்குள் அவர்களை அனுமதிக்கும் முன்பாக விவசாயிகளில் யாராவது மண்ணெண்ணெய் பாட்டில் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களுடன் வந்துள்ளனரா என்பதை காவல்துறையினர் சோதனை செய்த பிறகே ஆட்சியரக வளாகத்திற்குள் அனுப்பினர்.

 

காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை, உதவி ஆணையர்கள் ராஜா காளீஸ்வரன், சுந்தரமூர்த்தி, ஈஸ்வரன், ஆய்வாளர்கள் சரவணன், நாகராஜன், குமார், பிரேமலதா, ஷர்மிளாபானு ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

கியூ பிராஞ்ச்:

 

மாவட்ட, மாநகர தனிப்பிரிவு காவல்துறையினர், எஸ்பிசிஐடி உளவுப்பிரிவினர் மட்டுமின்றி கியூ பிராஞ்ச் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்போல் அசம்பாவிதம் வெடித்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர்.

 

விவசாயிகளிடம் இருந்து ஆட்சேபனை மனுக்களை பெறுவதற்காக நிலம் எடுப்பு வட்டாட்சியர்கள் தலைமையில் ஐந்து அலகுகளாக பிரிக்கப்பட்டு, அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

பெண் விவசாயிகள் அவதி:

விவசாயிகள் கூட்டமாக ஒரே நேரத்தில் திரண்டதால் ஆட்சியர் அலுவலக தரைத்தளமே விவசாயிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. குடிக்கத் தண்ணீர் வசதிகூட செய்து தராத மாவட்ட நிர்வாகத்தால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஆட்சியரக வளாகத்தில் பொதுக்கழிப்பறைகள் இருக்கும் இடம் தெரியாததால் பெண் விவசாயிகளும் தடுமாறினர்.

 

முதல் அலகில் 92 பேரும், இரண்டாவது அலகில் 150 பேரும், மூன்றாவது அலகில் 40 பேரும், நான்காவது அலகில் 34 பேரும், ஐந்தாவது அலகில் 48 பேரும் ஆட்சேபனை மனுக்களை வழங்கினர். அதாவது மொத்தம் 364 பேர் எட்டுவழிச்சாலைக்கு எதிராக ஆட்சேபனை மனுக்களை வழங்கினர்.

 

இதையடுத்து விவசாயிகள், எத்தனை பேர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு என்ற விவரங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, ஆட்சியரக வளாகத்திலேயே தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

எதிர்ப்பு எவ்வளவு?:

ஒரே நபருக்குச் சொந்தமாக பல சர்வே எண்களில் நிலங்கள் இருப்பதால், ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் தனித்தனியாக ஆட்சேபனை மனுக்கள் தருமாறு அதிகாரிகள் கூறினர். அதற்கு விவசாயிகள், ‘நாங்கள் கொடுத்த ஒரே ஆட்சேபனை மனுவில் சர்வே எண்களை பிரித்து எழுதி இருக்கிறோம். அவற்றை எண்ணிப்பார்த்து எத்தனை சர்வே எண்தாரர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகக் கணக்கிட்டுச் சொல்லுமாறு கூறினர்.

 

இதனால் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். அப்போதும் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர்களை கைது செய்வதற்கும் காவல்துறையினர் தயாராக வாகனங்களை கொண்டு வந்தனர். பின்னர் விவசாயிகள், ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் தனித்தனியாக ஆட்சேபனை மனுக்களை தருவதற்கு ஒப்புக்கொண்டனர்.

 

இதையடுத்து ஐந்து அலகுகளிலும் சேர்த்து மொத்தம் 556 ஆட்சேபனை மனுக்களை வழங்கியுள்ளனர். எட்டுவழிச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் 725 சர்வே எண்களுக்கு பாத்தியப்பட்ட நிலங்களை கையகப்படுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி கணக்கிட்டால் 76.68 விவசாயிகள், எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு கொடுத்துள்ளது ஊர்ஜிதமாகியுள்ளது.

 

முதல்வருக்கு மூக்குடைப்பு:

 

அதிமுகவை சேர்ந்த விவசாயிகள், மிகச்சிறிய அளவில் நிலம் வைத்திருப்போர் உள்ளிட்ட பிரிவினர் மட்டும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ளவில்லை. எனினும், எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு 11 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு என்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மூக்கை உடைத்துவிட்டதாகவும் சேலம் விவசாயிகள் கூறினர்.

 

இதையடுத்து வரும் 21.12.2018ம் தேதியன்று திருவண்ணாமலையைச் சேர்ந்த விவசாயிகள் அம்மாவட்ட ஆட்சியரிடம், எட்டுவழிச்சாலைக்கு எதிராக ஆட்சேபனை மனு கொடுக்கும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

 

– பேனாக்காரன்.