Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆணவக்கொலை: ஆடுபுலி ஆட்டம் இனி ஆரம்பம்! வருகிறார் ப.பா.மோகன்…! கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம்!!#Gokulraj

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் திடீரென்று அரசுத்தரப்பு வழக்கறிஞராக பவானி. பா.மோகனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது, இந்த வழக்கில் பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

ஆணவக்கொலை:
கோகுல்ராஜ்

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தார். 2015, ஜூன் 23ம் தேதியன்று காலை, உடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த தோழி சுவாதியைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

 

மறுநாளான 24.6.2015ம் தேதியன்று, கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல், அவரை சாதிய ஆணவக்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் பரவின.

 

தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை:
யுவராஜ்

அதை ஊர்ஜிதப்படுத்துவதுபோல், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் முக்கிய தடயங்கள் கிடைத்தன.

 

அதன்பேரில், சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைதான நபர்களில் ஜோதிமணி என்பவர் குடும்பத்தகராறில் கொல்லப்பட்டார். ஜாமினில் சென்ற அமுதரசு தலைமறைவானார்.

 

சாட்சிகள் விசாரணை:

 

இது இப்படி இருக்க, ஆணவக்கொலை வழக்குகளை 18 மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து, கடந்த 30.8.2018ம் தேதிமுதல் கோகுல்ராஜ் வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. அரசுத்தரப்பில் 110 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.

வழக்கறிஞர் பா.மோகன்:
வழக்கறிஞர் ப.பா.மோகன்

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் ஆஜராகி, நீதியைப் பெற்றுக்கொடுத்துள்ள பவானியைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பா.மோகனை, இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இதற்கிடையே, சாட்சிகள் விசாரணை தொடங்கியதால், அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதியை நியமித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டார்.

 

அவர் பிரபலமான வழக்குகளை வாதாடிய அனுபவம் இல்லாதவர் என்பதால், அவருக்கு உதவியாக இருக்க வழக்கறிஞர் நாராயணன் என்பவரை இணைத்துக்கொள்ள கோகுல்ராஜ் தரப்பினர் விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர்.

 

மூத்த வழக்கறிஞர் ஜி.கே.:
வழக்கறிஞர் ஜி.கே.

எதிரிகள் தரப்பில் மதுரையைச் சேர்ந்த பிரபல மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ, ஆறு உதவி வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

 

தமிழகத்தில் பிரபலமான பல கொலை வழக்குகளில் ஆஜராகி, பழுத்த அனுபவம் பெற்றவர். அரசுத்தரப்பு சாட்சிகளிடம் நீதிமன்ற அரங்கிலேயே உருட்டல் மிரட்டலாக கேள்விகள் கேட்பதில் அவர்களே முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த சம்பவங்களும் அரங்கேறின.

 

சிபிசிஐடி தரப்பு அதிருப்தி:

 

எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு இணையாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆவேசம் காட்டாமல் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வருவது, சிபிசிஐடி தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வழக்கு விவரங்களை அவர் சுய ஆர்வத்துடன் தாமாக முன்வந்து சிபிசிஐடி போலீசாரிடம் விவாதிப்பதில்லை. ஒவ்வொருமுறையும் போலீசார் அவரை வம்படியாகத் தேடிச்சென்று விளக்கம் அளிப்பதாகவும் சிபிசிஐடி தரப்பு அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, சித்ராவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பவானி பா.மோகனை அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞகராக நியமிக்கலாம் கடந்த 18.11.2018ம் தேதி உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவின் ‘வெப் காப்பி’ எனப்படும் இணையதள நகலே கடந்த 12.12.2018ம் தேதிதான் மனுதாரர்களுக்கு கிடைத்தது.

 

உயர்நீதிமன்றத்தில் இருந்து இதற்கான மூல உத்தரவுக்கடிதம் தற்போது கிடைத்ததை அடுத்து, பவானி பா.மோகனை அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் 18.12.2018ம் தேதியன்று உத்தரவிட்டார்.

 

அவகாசம் தேவை:

இதையடுத்து, கோகுல்ராஜ் வழக்கு ஆவணங்கள், இதுவரை சாட்சியம் அளித்தவர்களின் விவரங்கள், பிறழ் சாட்சிய விவரங்கள், வாக்குமூல ஆவண நகல்களை சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா மற்றும் இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியும், கோகுல்ராஜின் நண்பருமான வழக்கறிஞர் ராசா.பார்த்திபன், கோகுல்ராஜின் தாயார் சித்ரா, அவருடைய அண்ணன் கலைச்செல்வன் ஆகியோர் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 20, 2018) வழக்கறிஞர் ப.பா.மோகனை நேரில் சந்தித்து வழங்கினர்.

 

இதுகுறித்து வழக்கறிஞர் ப.பா.மோகனிடம் கேட்டபோது, ”வழக்கு ஆவணங்களை முழுமையாக படிக்க கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. இந்த வழக்கில் நீதி பெற்றுத்தரப்படும்,” என்றார்.

 

ஜனவரி 5ம் தேதி விசாரணை:

 

அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டது, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் எதிர்தரப்புக்கும், அரசுத்தரப்புக்கும் இடையே இனிதான் ஆடுபுலி ஆட்டமே ஆரம்பமாக உள்ளதாக கருதுகின்றனர்.

 

அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணை வரும் 2019 ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அன்று, வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி சாட்சிகளிடம் விசாரணையை நடத்துவார் எனத்தெரிகிறது.

– பேனாக்காரன்.