Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டு வழிச்சாலைக்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவாம்… – எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!

 

எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு சில விவசாயிகள் தவிர, பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பொய்யான தகவலை இன்று (ஜூலை 19, 2018) தெரிவித்துள்ளார்.

 

 

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 

”கடந்த ஆட்சியின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்துணவு முட்டைக்கான டெண்டர் நடைபெறும். அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து, அதில் முறைகேடுகள் நடந்து வந்தன. அதனால்தான் மாநில அளவில் முட்டை டெண்டர் விடும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில்தான் டெண்டர் விடப்படுகிறது. இதற்கென ஒரு கமிட்டி அமைத்து, எவ்வித முறைகேடுக்கும் இடமின்றி டெண்டர் நடைபெறுகிறது,” என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

 

அவரிடம், உங்கள் சம்பந்தியான ராமலிங்கத்தின் நிறுவனத்திற்கு மட்டும்தான் அதிகளவில் சாலைப்பணிகள் ஒப்பந்தம் விடப்படுகிறதே? என்று கேட்டதற்கு,

 

 

”நீங்கள் குறிப்பிடும் நபர் எனக்கு சம்பந்தி ஆவதற்கு முன்பே அவருக்கு நிறைய சாலைப்பணிகள் டெண்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போதே, ராமலிங்கம் அன் கோ நிறுவனத்திற்கு பத்து சாலைப்பணிகள் 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் தரப்பட்டு உள்ளது.

 

அந்த நிறுவனம் 35 ஆண்டுகளாக பல்வேறு ஒப்பந்த பணிகளை தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் எடுத்து செய்து வருகிறது. தகுதியின் அடிப்படையில்தான் இதுபோன்ற பணிகள் ஒப்பந்தம் விடப்படுகிறது.

 

 

மற்றபடி ஆளுங்கட்சியினரை குறிவைத்து வருமானவரித்துறை ரெய்டு நடப்பதாக தெரியவில்லை. முறையாக வரி செலுத்தியிருந்தால் வருமானவரித்துறையினர் விட்டுவிடுவார்கள். ரெய்டு, திட்டமிட்டு நடத்தப்படுவதாக நினைக்கவில்லை,” என்றார்.

 

 

தொடர்ந்து அவரிடம் எட்டு வழிச்சாலைக்கு அவசரம் காட்டுவது ஏன் என்றும், நிலம் கொடுக்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளதே என்று கேட்டோம்.

 

அதற்கு எடப்பாடி பழனிசாமி, ”மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் 17 சாலைப்பணிகளுக்காக 3050 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படவில்லையா? திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் எட்டுவழிச்சாலைக்கு எதிராக பிரச்சாரம் செய்கினறன.

 

 

நாங்கள் எந்த விவசாயியையும் கட்டாயப்படுத்தவில்லை. சில விவசாயிகளைத்தவிர, 90 சதவீத விவசாயிகள் இந்த திட்டத்துக்காக நிலம் கொடுக்க ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு 66 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதில் இருந்து இரண்டரை மடங்குக்கு மேல் இழப்பீடு கிடைக்கும் என்பதால் அவர்கள் யாரும் இத்திட்டத்தை எதிர்க்கவில்லை. வீடு பாதிக்கப்பட்டால் நிலம் கொடுத்து இலவசமாக வீடும் கட்டிக்கொடுக்கிறோம். தென்னை மரங்களுக்கும் வயதைப் பொறுத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.

 

 

மத்திய அரசிடம் நாங்கள் கேட்டதற்கிணங்க எட்டு வழிச்சாலைத்திட்டம் கிடைத்துள்¢ளது. அதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டதால் இந்த சாலைப்பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம். தற்போது தமிழ்நாட்டில் 2.57 கோடி வாகனங்கள் உள்ளன. இந்த திட்டம் நிறைவடைய 5 ஆண்டுகள் ஆகும். அப்போது இன்னும் 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். அதற்கேற்ப நவீன தொழில்நுட்பத்துடன் இந்த சாலை போடப்படுகிறது. இதன்மூலம் நிறைய தொழில் முதலீடுகள் வரும். ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்,” என்றார்.

 

 

அவரிடம் நீங்கள் குறிப்பிடும் 2.57 கோடி வாகனங்கள் பட்டியலில் 2 கோடி வாகனங்கள் இருசக்கர வாகனங்கள்தான். மிகக்குறைந்த அளவில்தான் கனகர சரக்கு வாகனங்கள் உள்ளன. அவற்றுக்காக எதற்கு எட்டுவழிச்சாலை? என்று கேட்டோம்.

 

 

இல்லை. முந்தைய காலங்களைவிட 27 லட்சம் கனரக வாகனங்கள் பெருகியுள்ளன என்றவர், மேற்கொண்டு அதைப்பற்றி பேச மறுத்துவிட்டார்.

 

 

மேலும் அவரிடம், ”மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்படுமா?,” என்றோம்.

 

 

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ”மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் நாகப்பட்டினம் வரை செல்கிறது. இந்த வழித்தடம் அனைத்தும் சமவெளி பகுதியாக இருப்பதால் எங்கேயும் நீரைத் தேக்குவதற்கு ஏற்ப தடுப்பு அணைகள் கட்ட முடியவில்லை. மேட்டூர் அணை உபரி நீரை சேமிப்பது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்,” என்றார்.

 

 

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சேலம் மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சேபனை மனு அளித்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிலரைத்தவிர பெரும்பாலானோர் இந்த திட்டத்தை ஆதரிப்பதாக மீண்டும் மீண்டும் பொய்யான தகவலை தருகிறார்.

 

 

– பேனாக்காரன்.