Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

டெங்கு அலட்சியம்: சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, டெங்கு வைரஸை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணிகளில் மு டுக்கிவிடப்பட்டு உள்ளனர்.

சேலம் மாவட்டத்திலும் ஆட்சியர் ரோகிணி தலைமையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாநகராட்சிப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், உரல், வீசியெறியப்படும் பிளாஸ்டிக் குவளைகள் போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கொசு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்திருந்தாலோ அல்லது கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தாலோ அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது

சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் தலைமையில் அதிகாரிகள் இன்று (அக். 22, 2017) காலை சாரதா கல்லூரி சாலையில் உள்ள சண்முகா மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவமனை வளாகத்தில் இருந்த இரண்டு தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த தண்ணீரில், டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு தொட்டியில் கட்டுவிரியன் பாம்பு ஒன்று உயிருடன் இருந்தது. அதைப்பார்த்து, அதிகாரிகள் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சண்முகா மருத்துவமனையில் இருந்து சேகரமாகும் மருத்துவக் கழிவுகள், அம்மருத்துவமனையை ஒட்டிச் செல்லும் (எல்ஆர்என் ஹோட்டல் அருகே) நீரோடையில், கொட்டப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்கென சிற்பபு விதிகள் உள்ளன. ஆனால், விதிகளை மீறி நீரோடையில் மருத்துவமனை நிர்வாகம் கழிவுகளைக் கொட்டி வைத்திருந்ததால் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இதையடுத்து, தண்ணீர் தொட்டிகளை பராமரிப்பதில் அலட்சியம் காட்டியதற்காக ரூ.5 லட்சமும், மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் அகற்றியதற்காக ரூ.5 லட்சமும் என மொத்தம் 10 லட்ச ரூபாய், சண்முகா மருத்துவமனைக்கு அபராதம் விதித்து ஆணையர் சதீஸ் உத்தரவிட்டார்.

டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளில் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டதால் அந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டிருந்த மூன்று குடிநீர் இணைப்புகளையும் அதிகாரிகள் துண்டித்தனர்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் அசோகன், அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் சத்தியநாராயணன், மாநகர் நல அலுவலர் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

எக்ஸ்ட்ரா: சேலம் மாநகராட்சி ஊழியர்கள், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி, சண்முகா மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசுக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வழங்கினர்.

ஆனாலும், தொடர்ந்து அலட்சியமாக இருந்த காரணத்தால்தான் இன்று அந்த மருத்துவமனைக்கு அதிரடியாக 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். தமிழ்நாட்டில் முதன்முதலாக டெங்கு அலட்சியம் காரணமாக ஒரு மருத்துவமனைக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.