கனே வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.
முதல் ஒரு நாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (அக். 22, 2017) மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் மட்டை வீச்சை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஜோடி பெரிய அளவில் சோபிக்கவில்லை. சிக்ஸர் அடித்து அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய ரோஹித் ஷர்மா, 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் 9 ரன்களில் வெளியேறினார். இருவருமே நியூஸியின் டிரன்ட் போல்ட் வேகத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
தினேஷ்கார்த்திக் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவரும் ஒருகட்டத்தில் 37 ரன்களில் திருப்தி அடைந்தவராக நடையைக் கட்டினார். ஒரு முனையில், இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி மட்டும் ஏதுவான பந்துகளை தட்டிவிட்டு நிதானமாக ரன்களை சேர்த்தார். தோனி 25 ரன்கள் எடுத்தார்.
ரசிகர்களின் ஆரவாரத்துடன் களமிறங்கிய சிக்ஸர் மன்னன் ஹர்திக் பாண்ட்யா, 16 ரன்களில் வெளியேறினார். அடுத்து வ ந்த புவனேஸ்வர் குமார் கோஹ்லியுடன் இணைந்து இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.
இதற்கிடையே, விராட் கோஹ்லி 111 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இது அவருக்கு 31வது சதம் ஆகும். அதன்பின்னர் அவருடைய ஆட்டத்தில் அனல் பறந்தது. இறுதியில் 125 பந்துகளில் கோஹ்லி 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புவனேஷ்வர்குமார் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து, 50வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ், ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 280 ரன்கள் எ டுத்து இருந்தது.
நியூஸிலாந்து அணி தரப்பில் டிரன்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 281 ரன்கள் இலக்குடன் நியூஸி அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.
கோஹ்லி சாதனை:
தனது 200வது ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோஹ்லி, சதம் அடித்து சாதனை படைத்தார். இதன்மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடித்து சச்சின் டெண்டுல்கருக்கு (49 சதம்) அடுத்த இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பாண்டிங்கை (30 சதம்) பின்னுக்குத் தள்ளி, இரண்டாம் இடம் பிடித்தார்.
அடுத்து விராட் கோஹ்லியின் இலக்கு, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதுதான். ஆனால் அதற்கு அவர் இன்னும் 19 சதங்கள் அடிக்க வேண்டும்.