Wednesday, May 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காங்கிரஸ் கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் 16ம் தேதி அவர் முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக கடந்த 19 ஆண்டுகளாக இருந்து வருபவர் சோனியா காந்தி. சீதாராம் கேசரிக்குப் பிறகு, நேரு குடும்பத்தில் இருந்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் தேசிய துணைத்தலைவராக கடந்த 2013ல் நியமிக்கப்பட்டார் ராகுல் காந்தி.

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்து வந்த காங்கிரஸ் கட்சி, கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது. கடந்த 2004, 2009 என தொடர்ந்து இரு மக்களவை தேர்தல்களிலும் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி, அண்மைக் காலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று கட்சிக்குள் இருந்தே குரல்கள் ஒலித்தன.

அதையடுத்து தலைவர் பதவிக்கு வேட்புமனுக்கள் பெறப்பட்டது. ராகுல் காந்தியை தலைவராக நியமிக்கக்கோரி 89 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். ஒருவர் கூட அவரை எதிர்த்துப் போட்டியிடவில்லை. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரியும் மூத்தத் தலைவருமான முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், ராகுல் காந்தி போட்டியின்றி தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதாக இன்று மாலை (டிசம்பர் 11, 2017) அறிவித்தார்.

வரும் 16ம் தேதி அவர் முறைப்படி தலைவர் பொறுப்பேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது 47 வயதான ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு நேரு குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 6வது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு முன்பாக மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் அப்பதவியை வகித்துள்ளனர்.

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

”ஒட்டுமொத்த இந்தியாவும் ராகுல் காந்தியிடம் அதிகம் எதிர்பார்க்கின்றன. தனது பொறுப்புகளை உணர்ந்து அவர் செயல்படுவார் என்று கருதுகிறேன். அவருக்கு வாழ்த்துகள்,” என்று காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.