Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

குஜராத், ஹிமாச்சலில் பாஜக வெற்றி!; காரணம் என்ன?; சரிகிறதா மோடி இமேஜ்?

குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்ததிலும், ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியதிலும் பாஜக அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், சொந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு வெகுவாக சரிந்திருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தொடர்ந்து 6வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. சுயேட்சைகளுக்கு 6 இடங்கள் கிடைத்து இருக்கின்றன.

ஹிமாச்சல்பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 இடங்களிலும், ஆளுங்கட்சியான காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

ஹிமாச்சல் பிரதேசத்தை கைப்பற்றியதன் மூலம், பாஜக கூட்டணியின் ஆட்சி எல்லை 19 மாநிலங்களாக விரிவடைந்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 6வது முறையாக ஆட்சிக் கட்டிலை பாஜக தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அரியணையை பாஜக கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த 2012ல் நடந்த தேர்தலில் குஜராத் மாநிலத்தில் 115 இடங்களைக் கைப்பற்றிய பாஜகவால், இந்தமுறை 99 இடங்களை வெல்லவே படாதபாடு பட வேண்டியதாகி விட்டது.

இந்தமுறை கிடைத்த வெற்றி, கடந்த காலங்களைப்போல சாதாரணமானது அல்ல என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் உணர்ந்தே இருப்பார். கிட்டத்தட்ட 37 தொகுதிகளில் வெறும் 500 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

இன்னும் கொஞ்சம் காங்கிரஸ் மெனக்கெட்டு இருந்தால், குஜராத் மாநிலத்தில் ஆட்சியதிகாரமே கூட ‘கைக்கு’ மாறியிருக்கக்கூடும். எனினும், ஒரு வாக்கு வித்தியாசம் என்றாலும் வெற்றிதானே முக்கியமானது?

வழக்கமாக வளர்ச்சி அரசியல் குறித்து மேடைக்கு மேடை முழங்கும் மோடி குஜராத் தேர்தலில் அதைப்பற்றி பேசவே இல்லை. மாறாக, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் குறித்தும், குடும்ப அரசியல் குறித்தும் முழங்கினார். எந்தளவுக்குக் கீழே இறங்க முடியுமோ அந்தளளுக்கு பாஜகவினர் இறங்கிவந்து பேசினர்.

ராகுல்காந்தியை பப்பு என்றும் கிண்டலடித்தனர். பதிலுக்கு மணிசங்கர் அய்யர், மோடியை இழிபிறவி என்றும் கூறினார். அதற்காக காங்கிரஸ் கட்சி, அவர் மீது நடவடிக்கை எடுத்தது தனி கதை.

ஆனால் பாஜகவை வீழ்த்த பாகிஸ்தான் நாட்டுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி சதி செய்ததாகக்கூட மனம்போன போக்கில் மோடி குற்றச்சாட்டை அள்ளி வீசினார். காவி கும்பல் மட்டுமே தேசபக்தர்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்ப டுத்துவதை அக்கட்சி தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு குஜராத் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்ததை உளவுத்துறை மூலம் உறுதி செய்திருந்தது பாஜக. அதற்கேற்ப, தேர்தலை மனதில்கொண்டு சமயம் பார்த்து 177 பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை கணிசமாக குறைத்தது.

அதன்பிறகே குஜராத் மாநிலத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்காக தேர்தல் ஆணையம், பாஜகவுடன் கைகோத்து செயல்பட்டது என்றால் நம்பவா போகிறார்கள்?

புபேந்திர யாதவ்

ஜிஎஸ்டி வரி குறைப்பு, இந்த தேர்தலில் பாஜகவுக்கு பெருமளவு கைகொடுத்தது என்றே சொல்ல வேண்டும். அதுவும் நடந்திராமல் போனால், பாஜக ஆட்சியை இழந்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

அடுத்து, தேர்தலுக்கு முன்பாக கிராமப்புற விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை குஜராத் முதல்வர் விஜய்ருபானி அறிவித்தார். அதன்மூலம் சுமார் 25 லட்சம் விவசாயிகள் பலன் பெற்றதும்கூட, இந்த தேர்தலில் பாஜக வசம் மீண்டும் ஆட்சிக்கட்டில் கிடைக்க முக்கிய காரணம் என்கிறார்கள்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு, விவசாயிகளுக்கு கடன் என்பதெல்லாம் தேர்தல்கால சலுகைகள். ஆனாலும் அதை மட்டுமே பாஜக நம்பியிருக்கவில்லை.

தேர்தல் பணிகளை அமித்ஷாவைப்போல் எல்லா நிலைகளிலும் இறங்கி அடிக்கக்கூடிய புபேந்திர யாதவை குஜராத் மாநில பொறுப்பாளராக அக்கட்சித் தலைமை நியமித்தது.

வெறும், வாகன பிரசாரமும், பொதுக்கூட்டத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது. வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டு கதவை தட்ட வேண்டும் என்ற உத்தியை முன்வைத்தார் புபேந்திரயாதவ். அவர் சொன்னதை, அத்தனை பாஜக வேட்பாளர்களும் தட்டாமல் செய்தனர். அதுவும், அவர்களுக்கு பெருமளவு கைகொடுத்தது.

குஜராத் மாநிலத்தில், ராகுல் காந்தியை விட பிரதமர் மோடி பேசிய பொதுக்கூட்டங்கள் அதிகம். 34 கூட்டங்களில் பேசியிருக்கிறார். காபினெட் அமைச்சர்கள் பட்டாளமே இறங்கி வந்து வேலை செய்தது.

மேலும், மோடியை மட்டும் குறிவைத்து தாக்குவது போன்ற தனிமனித தாக்குதல்களில் எல்லாம் மக்கள் மயங்கிவிடவில்லை என்பதும் இந்த தேர்தலில் புலனாகிறது.

அப்படியே விமர்சித்தாலும், பேசுகின்ற நபர் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தால் மட்டுமே அதுவும் எடுபடும் என்பதையும் மக்கள் காங்கிரசுக்கு புரிய வைத்திருப்பார்கள்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் வீரபத்ரசிங் மீது எழுந்த ஊழல் புகாரால் அங்கு ஆட்சியை இழக்க நேரிட்டது. காங்கிரஸ் கட்சியின் ஆகப்பெரிய சாபக்கேடு ஊழல் என்பதும், அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதையும் காங்கிரஸ் கட்சியும் இந்நேரம் புரிந்து கொண்டிருக்கும்.

இவை எல்லாம் பாஜகவின் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லப்படுவது. ஆனாலும், மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் மாநிலத்தில் இந்த தேர்தலில் 150 இடங்களைக் கைப்பறும் என்று கணித்து இருந்தது. ஆனால் அக்கட்சிக்கு 99 இடங்களே கிடைத்திருக்கிறது.

அதற்கு, 28 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்புதான் காரணம் என்றும், அந்த வகையில் எதிர்பார்க்கப்பட்ட 51 தொகுதிகளை அக்கட்சி இழந்துவிட்டதாகவும் கிண்டலாக விமர்சிக்கப்படுகிறது. அது கிண்டலாக இருந்தாலும், உண்மை இல்லாமல் இல்லை.

மேலும், படேல் சமூகத்தினர் திடீரென்று பாஜகவுக்கு எதிராக திரும்பியது, தலித் சமூகத்தினரின் நம்பிக்கையை கணிசமாக இழந்தது ஆகியவையும் பாஜகவின் சரிவுக்கு முக்கிய காரணங்கள்.

படேல் சமூகத்தின் புதிய தலைவராக உருவெடுத்திருக்கும் ஹர்திக் படேல், தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அல்பேஷ் தாக்கூர் போன்ற இளம் தலைவர்களை ராகுல்காந்தி சரியாக பயன்படுத்திக்கொண்டிருப்பதை அரசியல் நோக்கர்களே ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.

ராகுலின் இந்த அணுகுமுறையால்தான் இந்த தேர்தலில் அக்கட்சிக்கு சுமார் 15 தொகுதிகள் கூடுதலாக கிடைத்திருப்பதாகச் சொல்கின்றனர்.

ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமாடினார். பலமுறை அவருடைய பேச்சைக் கேட்க திரண்ட கூட்டமும், மோடிக்குக் கூடியதைவிட அதிகம்.

அதனால்தான் படேல் சமூகத்தினர் அதிகம் உள்ள தொகுதிகளில் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும், பாஜகவுக்கு 13 இடங்களும் கிடைத்திருக்கின்றன. முந்தைய தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூடியிருக்கிறது; பாஜகவுக்கு ஓரிடம் குறைந்திருக்கிறது.

வழக்கம்போல் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் வசிக்கும் 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும் (முன்பு 8), பாஜகவுக்கு 8 இடங்களும் (முன்பு 12) கிடைத்திருக்கிறது. சிறுபான்மையினருக்கு பாஜக மீது நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளதையே இந்தப்பகுதி முடிவுகள் காட்டுகின்றன.

சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளிலும் பாஜக இந்த தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இப்பகுதிகளில் மொத்தம் 54 தொகுதிகள் இருக்கின்றன. அவற்றில் பாஜகவால் இந்த முறை வெறும் 23 (முன்பு 35 இடங்கள்)தொகுதிகளையே அறுவடை செய்ய முடிந்தது.

அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு 30 இடங்கள் கிடைத்திரு க்கின்றன. முந்தைய தேர்தலில் காங்கிரஸ் கட்சி இப்பகுதிகளில் 16 இடங்களை மட்டுமே கைவசம் வைத்திருந்தது.

ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர், ஜிக்னேஷ் மேவானி.

அதேநேரம் வடக்கு, தெற்கு, மத்திய குஜராத் பகுதிகளில் பாஜகவுக்கு முந்தைய தேர்தலைவிட இந்த முறை கூடுதலாக சில தொகுதிகளில் அறுவடை செய்திருக்கிறது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள இந்த மூன்று மண்டலங்களில் கிடைத்துள்ள வெற்றியே பக்கபலமாக அமைந்துள்ளன.

உண்மையில், குஜராத் தேர்தலைப் பொருத்தவரையில் பாஜகவுக்கு இந்த வெற்றி, முழுமையான வெற்றியும் அல்ல; காங்கிரஸ் கட்சிக்கு முற்றான தோல்வியும் அல்ல.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராகுல் காந்தியும், இந்த வெற்றி மகத்தானதா இல்லையா என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.

– அகராதிக்காரன்.